Monday, September 28, 2009

உன்னைப் போல் ஒருவன்...

ஓய்வு எடுத்து எடுத்து களைத்துப் போனதால் வெளியே சென்றே ஆக வேண்டும் என்று மனதின் கட்டளைக்கேற்ப திரை அரங்குகளையும் திரைப்படங்களையும் இணைய தளத்தில் நோட்டமிடத் தொடங்கினோம். ஞாயிற்றுக் கிழமை மதியம் பணிரெண்டு மணிக்கு எனக்கு இந்த விபரித எண்ணம் தோன்றினாலும் நண்பன் மாயாஜாலில் முன்பதிவு செய்து கொடுக்க தனிமையில் பயணத்தைத் தொடர ஆரம்பித்தேன்.

சென்னைக்கு வந்ததில் இருந்து முதல் தடவையாக தனிமையில் சினிமா பார்க்கக் கிளம்பினேன் (தனிமைதான் நிரந்தரம் என்றாகி விட்டபிறகு இந்த அற்ப விசயங்களுக்கு எல்லாம் யோசித்து பிரயோஜனம் இல்லை). மதிய வெயில் ‘ஹெல்மெட்டை’ பிளந்தாலும் கிழக்கு கடற்கரை சாலையில் எனது நண்பனின் புல்சாரை (நான் அப்படித் தானுங்க சொல்லுவேன்) சீரான வேகத்தில் செலுத்த ஆரம்பித்தேன்..சாலையில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக இருந்தது. திடிரென்று போகும் இடத்தை மறந்து எப்பொழுதும் போகும் உ.பா கடைக்கு முன் வண்டி நின்றது. தலைவர் நெப்போலியனும் என்னுடன் வர எத்தனிக்க தப்பித்தால் போதுமென்று வேகத்தைக் கூட்டினேன்.

சற்று முன் கூட்டியே சென்று விட்டதாலும் செவிக்கு உணவு இருந்த போதும் அங்கிருந்த சிற்றுண்டி கடைக்குச் சென்றேன். ‘என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ’ யேசுதாஸ் பாடிக் கொண்டிருந்தார். ஒரு தயிர் சாதம் வாங்கிக் கொண்டேன் ... நல்ல பசியாகையால் சடுதியில் தட்டு தீர்ந்து போனது... பெரிய திரையில் கமலும் அமலாவும் வளையோசை பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தனர்... நானும் ஐக்கியமானேன். அப்புறம் ஸ்கிரின் ஒன்பதைக் கண்டுபிடித்து என் இருக்கையில் என்னைக் கிடத்திக் கொண்டேன்.படம் ஆரம்பித்தது.

ஏற்கனவே இந்தியில் பார்த்த படம் என்றாலும் கமல் மற்றும் லாலின் நடிப்பிற்காக பார்க்க முடிவு செய்து இருந்தேன். ஏறக்குறைய இரண்டு மணிநேரம் படம் ஓடி முடிந்தது. திரும்ப விட்டை நோக்கித் திரும்ப புல்சாரை உசுப்பினேன். திரும்பும் வழியில் படத்தினைப் பற்றி அசை போட ஆரம்பித்திருந்தேன். இந்தப் படத்தின் மையக் கருத்துடன் எனக்கு ஒத்துப் போக முடியவில்லை. தீவிரவாதத்திற்கு தீவிரவாதத்தால் தான் பதில் சொல்ல முடியும் என்பதே படத்தின் மையக் கருத்து. இப்படி ஒவ்வொருவரும் கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று ஆரம்பித்து விட்டால் இந்த உலகத்தில் அமைதியான இடத்தைத் தேட வேண்டிய சூழல் வந்து விடும்.

இதே கமலின் ‘அன்பே சிவம்’ படத்தைக் கண்டு பிரமித்துப் போயிருக்கிறேன். இந்தப் படம் என்னுள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒரு சராசரி மனிதன் கோபத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று படம் சொல்கிறதா இல்லை சராசரி மனிதன் இவ்வாறு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறதா? தீவிரவாதிகளின் குற்றச் செயல்களைப் பட்டியல் இடும் போது பெரிதாகக் காண்பித்து விட்டு கடைசியில் ஒரு தீவிரவாதி ‘பெஸ்ட்’ பேக்கரி பற்றிப் பேசுவது வியாபார உக்தியைக் காண்பிக்கிறது. மதக் கலவரங்களினால் தீவிரவாதிகள் உருவாகிறார்களா? இல்லை தீவிரவாதிகளினால் மதக்கலவரங்கள் உருவாகின்றனவா? போலி அரசியல்வாதிகள்பற்றி பல படங்களில் வந்து விட்டாதல் என்னவோ அவர்களை உள்ளே இழுக்கவில்லை போலும்... இன்னும் எவ்வளவோ என் மனது யோசிக்கத் தொடங்கியது...

தூரத்தில் வானம் தன் மேல் கருப்பு வண்ணம் பூசிக் கொள்ளத் தொடங்கி இருந்தது. புல்சாரின் வேகத்தைக் கூட்டினேன்... படத்தில் இருந்த அந்த ஒரு பாடல் மனதைக் கவருவதாய் இருந்தது. பின்னணி இசையமைப்பு படத்தோடு ஒன்றிப் போவதற்கு உறுதுணையாய் இருந்தது. படம் சீரியஸாகப் போகும் போது அவ்வப் போது லால் சிரிப்பூட்ட முயல்கிறார் (உண்மையில் அவருடைய வேலையைத் தான் பார்க்கிறார்) செய்தி சேகரிக்கும் பெண் அடிக்கடி புகைப்பது எனக்கு எரிச்சலை ஊட்டியது ... முத்தாய்ப்பாக கமல் கடைசியில் அழுது கொண்டே கூறும் காரணம் மனதை உருக்குவதாக இருந்தாலும் அதற்கும் தீவிரவாதிகளைக் கொல்லுவதற்கும் என்ன சம்பந்தம்? சராசரி மனிதன் என்று தன்னைக் காண்பித்துக் கொண்டாலும் அவர் எந்த மத த்தைச் சேர்ந்தவர் என்று பார்வையாளரை ஊகிக்க வைக்க முயல்வது சரியான தந்திரம்... மக்கள் தங்கள் மதத்தின் மேல் உள்ள அபிப்ராயத்தையும் பிற மதத்தின் மேல் உள்ள வெறுப்பையும் பயன்படுத்தி ஊகிக்க வைக்க முயன்றதாகவே தோன்றுகிறது... லாலும் அவ்விதத்திலேயே கேள்விகள் எழுப்புவதும் அதையே உணர்த்துகிறது.

இவ்வளவு இருந்தாலும் தமிழில் இது ஒரு புதுமையான முயற்சி என்பதை என் மனம் ஒப்புக் கொண்ட வேளையில் நான் வீட்டிற்கு மிக அருகாமையில் வந்து சேர்ந்திருந்தேன். அறையின் உள்ளே நுழையும் போது ஜன்னல் வழியாக மழைச் சாரல் உள்ளே வரத் தொடங்கியது.நானும் மழையும் ஒரு சேர வீட்டின் உள்ளே புகுந்து கொண்டோம்!

Thursday, September 24, 2009

பவர்ஃபுல் ஐஸ்

அதே கண்கள் அப்படின்னு ஒரு படம் - சின்ன வயசில பார்த்தது. சந்தேகத்தின் பேரில் சிலரை வரிசையில் நிற்க வைத்து முகத்தினை துணியால் மூடி கண்கள் மட்டும் தெரியும் படி பார்ப்பார் ரவிச்சந்திரன். வில்லனுடைய கண்கள் மட்டும் பளிச்சென்று (எல்லாம் லைட் தான்) தெரியும். அட நம்ம சந்திரமுகி எடுத்துக்கோங்க அதுல ஜோ வோட கண்கள் எவ்வளவு பளிச்சென்று காட்டினார்கள்... இப்படி எவ்வளவோ உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்... சரி இப்ப எதுக்கு இந்த உதாரணங்கள்...

இன்று நான் அப்படி இரு கண்களைப் பார்த்தேன்(அப்ப கண்ணாடி போட்டுக்கிட்டு இருந்தீங்களா சார்?)... அவ்வளவு பவர்ஃபுல் (எத்தனை பவர்?)... என்ன வென்று சொல்வேன்(சரி சொல்லாத!)? அத்தனை அழகு... அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு(வயசான காலத்தில இதெல்லாம் தேவையா?)... அந்த இரு கண்களும் என் கண்ணாடிக்குப் பின் இருந்த இரு கண்களும் (ரொம்ப முக்கியம்) ஒரு கணம் ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொண்டன(நேர் கோட்டின் நீளம் எவ்வளவுப்பா?)... என் உடம்பினுள் ஒரு மாற்றம் (வயிறு சரி இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருந்தியே அது தானா?)... ஒரு கணம் என்னை மறந்தேன்(எதைத்தான்பா நீ ஞாபகம் வைச்சிருக்க?)... ஒரு இரண்டு மணி நேரமா வேலை செய்ய முடியவில்லை (இல்லாட்டினாலும் வேலை செஞ்சு அப்படியே நிமித்திருவே பாரு).... அந்த கண்கள் மட்டும் ஞாபகத்தில் இருந்து கொண்டே இருந்தது....

ஒரு வேளை கண்களுக்கு சொந்தமானவர்களை எனக்கு பிடித்துப் போனதால் அவ்வளவு பவர்ஃபுல்லாக தெரிந்ததா? இல்லை .. கண்கள் அவ்வளவு பவர்ஃபுல்லாக இருந்ததால் எனக்கு அவர்களைப் பிடித்துப் போனதா?... என் இதயம் கவர்ந்து சென்று விட்டாளோ அந்த கள்ளி?... எனக்கானவள் இவள் தானோ? பகுத்தறிவு இப்பொழுது வேலை செய்ய மறுக்கின்றது... இது தான் காதலா? இன்னும் என்னுடைய மனம் பக்குவமடையவில்லை என்றே காட்டுகிறது...நடைமுறைக்கு ஒத்துவருமா என்றெல்லாம் யோசிக்க மறுக்கிறது... என்னதான் ஆகி விட்டது எனக்கு?

யோசனையோடு லைட் சுவிட்சை போட்டேன்...

‘ட்யூப் லைட் தனது உயிருக்காக போராடத் தொடங்கியது’

Wednesday, September 23, 2009

தொடை நடுங்கி!...

"என்ன பண்ணிட்டு வந்திருக்க?"

"அவன் தான்....|

"பன்னிரண்டு தையல் தலையில! கேஸ் ஆகாம தடுக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு..."

"உங்களைப் பத்தி தப்பா பேசினான்... என்னால தாங்கிக்க முடியலை.. அதான்..."

"நான் சும்மாதானா இருந்தேன்?!"

"நானும் அப்படி இருந்தேன்னா என்னைய தொடை நடுங்கி,கோழைன்னு சொல்லுவாங்க?"

"உனக்கு ஒரு பிரச்சினைன்னா உன்னைய தொடை நடுங்கின்னு சொன்ன யாரும் வந்து உதவி செய்யப் போறது கிடையாது.அப்படியே உன்னைய தொடை நடுங்கின்னு சொன்னா உன்னுடைய கிரீடம் இறங்கிடப் போறதில்லை... வீரன்னு சொன்னா புதுசா கிரீடம் ஏறப்போறதில்லை.."

"அப்ப அவன் பேசுவான் நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கனுமா?"

"உன்னைய மாதிரி நானும் அவசரப்பட்டு அவனை அடிச்சிருந்தா இந்நேரம் நிலைமை மாறிப் போயிருக்கும். அவனுக்கு அதுதான் பிழைப்பு... ஆனால் நமக்கு ... கௌரவமா தொழில் செஞ்சிட்டு இருக்கோம்... நாலு பேர் வந்து போற இடம்... இப்படி எவ்வளவோ?"

"எனக்கு தான் நீங்க இருக்கிங்கள்ள? என்ன பிரச்சினை வந்திடப் போவுது?"

"எல்லா நேரமும் நான் உன்னோட இருக்க முடியாதுடா! தவிரவும் உன்னைய பெரிய ஆளா பார்க்கணும்கிற ஆசை வீணாகிடும்டா!! பாதை மாறிப் போச்சுன்னா நீ போக வேண்டிய இடமும் மாறிடும்டா!!!"

"என்ன தான் பண்ண சொல்றிங்க?"

"கோபத்தை கட்டுப்படுத்துடா... நீ அடிக்கும் போது நான் பார்த்துக்கிட்டு தான் இருந்தேன்... இவ்வளவு முர்க்கத்தனம் உனக்கும் உன்னை சார்ந்திருக்கிறவங்களுக்கும் நல்லதில்லை!!!.... நீ நாளைக்கிங்க வெளிநாட்டுக்கு எல்லாம் போகணும்னா உன் மேல கேஸ் எல்லாம் இல்லாம இருக்கணும்டா..."

"நானா வெளிநாட்டுக்கா? அது போறப்ப பார்த்துக்கலாம்...."

"யார் தலைல என்ன எழுதியிருக்குன்னு யாருக்கும் தெரியாதுடா!.. . அந்த காலத்திலேயே உன்னுடைய தாத்தா இலங்கைக்கு போயிட்டு வந்திருக்காங்கடா!!! "

"அப்ப ஏன் நீங்க கஷ்டப் படுறீங்க?"

"அது என்னுடைய தலை எழுத்து..."

"சரி நான் இனிமே கைய கட்டி ஒரமா நின்னு வேடிக்கை
பார்க்கிறேன்... "

"கோபம் குறையலை போல இருக்கு..."

"அது தானே நீங்க கேட்டது..."

"பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருக்க சொல்றேன்.... உயிருக்கோ உடமைக்கோ ஒரு பிரச்சினை வரும் போது மட்டும் உன் வீரத்தைக் காட்டு... அது போதும்..."

"அப்ப என்னைய போலி வேஷம் போடச் சொல்றிங்களா?"

"தப்பில்லையே!!.. "

"சரி நான் என்னைய மாத்திக்கிறேன்.... இதுவரைக்கும் எத்தனையோ பேரை அடிச்சிட்டேன்.. அந்த பாவத்தை இனிமே அமைதியாய் இருந்து வளரமா பார்த்துக்கிறேன்..."

"கோபம் வரும் போது உனக்கு ஒரு குடும்பம் இருக்குதுங்கிறத நினைச்சுக்கோ... தன்னால எல்லாம் சரியாயிடும்..."

இப்ப எல்லாம் தொடை நடுங்கின்னு யாராவது கூப்பிட்டா என் உதடுகள் புன்னகை புரிவதற்கு மறப்பது இல்லை...

Monday, September 21, 2009

நெப்போலியன்

"உனக்கு நீயே துரோகம் செஞ்சுக்கிற"

"ஏன் அப்படி சொல்ற?"

"உன் மனசில இருக்கிறதப் போயி சொல்லலாமுல்ல?"

"ஆசைப் படலாம் பேராசைப் படக்கூடாது!"

"எது பேராசை?"

"கலங்கிய நீரோடைல தெளிந்த நீரைக் கலக்க நினைப்பது பேராசை இல்லாம வேறென்ன?"

"நிறைய பேரோட வாழ்க்கை அப்படித்தான இருக்கு!"

"மத்தவங்களோட ஒப்பிடுகிற அளவுக்கு நான் இல்லை!"

"நீ உன்னைய ஏமாத்திக்கிற!!"

"இதுல ஏமாத்திக்கிறதுக்கு என்ன இருக்கு?"

"அப்ப சொல்ல்லாமுல்ல?"

"உனக்கே தெரியும்... பழைய சம்பவங்களின் படிப்பினை என்னைத் தடுக்குது!"

"நீயே சொல்றியே அது பழைய சம்பவம்னு?"

"ஆனா அது மாதிரி நடந்திட்டா?"

"எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க!"

"அது தான் பயமா இருக்கு... அப்பவிட இப்ப நிலைமை மோசமாகிட்டா?"

"தேவையில்லாம பயப்படுற!"

"சொல்லாம இருக்கிறது மேல்!"

"சொல்லிக் கிடைக்காம இருக்கிறது... சொல்லாம கிடைக்காம இருக்கிறதோட மேல்..."

"இங்க பாரு... என் மனசில ஆசை இருக்கிறது உண்மை தான்... ஆனால் என்னோட அழகு என்ன? அவங்களோட அழகு என்ன?"

"மனசை மட்டும் தான் பார்ப்பாங்க!"

"ஒரு காலத்தில டேபிள் தொடச்சிக்கிட்டிருந்தேன்..."

"இப்ப நல்லாத் தான இருக்கிற? தவிரவும் அது சொந்த கடையில தான வேலை பார்த்த?"

"பழைய சம்பவங்களைப் பாரு... அமெரிக்காவுல செட்டில்டு...என்னால அப்படி ஒரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது!"

"அவங்களும் அப்படித்தான் நினைப்பாங்கன்னு எப்படி உனக்குத் தெரியும்?"

"கிடைச்சா வேணாம்னு சொல்ல மாட்டங்கள்ள?"

"பிடிக்காம கூட இருக்கலாமில்லையா?"

"எனக்கு ஆசை இருக்கிறமாதிரி அவங்களுக்கும் இருக்குமில்லையா?"

"ஒரு வேலை ஒத்துப்போகலாமில்லையா?"

"இப்ப என்னதான் செய்யச் சொல்ற?"

"போயி பேசு!"

"முடியாது!"

"உனக்கு உன் மேல ஒரு கழிவிரக்கம் தேவைப்படுது!"

"உண்மை இல்லை!"

"அப்ப போயி பேசு!"

"சரி!. நாளைக்குப் பேசுறேன்!"

காலை மணி 8.35...

"நான் உங்கள்ட ஒரு விசயம் சொல்லனும்!"

"நானும் தான்!"

"????!!!!! நீங்களே சொல்லுங்க!"

"எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க!... அமெரிக்காவுல இருக்கிறாரு... கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் அங்க தான் செட்டில் ஆகப் போறேன்..."

"ஹோ.... தேட்ஸ் வெரி குட் நியுஸ்... கங்கிராட்ஸ்...நான் வரேன்.."

"ஏதோ சொல்ல வந்திங்க?"

"ஒன்னுமில்லை ஒரு சின்ன டௌட்! அது தான் (இப்ப கிளியர் ஆகிடுச்சு :-().. நான் அப்புறமா வந்து கேட்டுக்கிறேனே?"

"ஒ.கே."

இரவு மணி 9.00

தலைவர் நெப்போலியனுடன்!

"நான் தான் அப்பவே சொன்னேன்ல..."

"என்ன சொன்ன?"

"இதெல்லாம் வேலைக்கு ஆகாது!... போனமா வேலையப் பார்த்தோமான்னு வராம இதெல்லாம் தேவையா?"

"அடப் பாவி!.. சும்மா இருந்தவனை சொரிஞ்சு விட்டுட்டு... இப்ப பாரேன்!!"

"சரி மச்சி.. அத விடு அந்த நாலாவது ‘ரோ’ ல ஒரு பொண்ணு இருக்கே... "

"யாரு?"

"இன்னைக்குக் கூட மயில் கழுத்துக் கலர்ல ஒரு சுடிதார் போட்டுக்கிட்டு வந்துச்சே?"

"ஒ .. அந்த பொண்ணா?"

"பார்க்க அழகா லட்சணமா இருக்குதுல்ல?"

"ஆமாம்...!"

"நீயேன் அந்த பொண்ணுட்ட பேசிப் பார்க்க கூடாது?"

"மாட்டேன்...!"

"உனக்கு நீயே துரோகம் செஞ்சுக்கிற"

சென்னை <- > திருச்சூர்<-> குருவாயூர்

நீண்ட நாட்களுக்கு முன் திட்டமிட்ட படி பயணம் தொடங்கியது. முரளி, சிவா, செந்தில் , அன்னா மற்றும் நான் அலுவலகத்திலிருந்து கிளம்பினோம். பஸ்ஸில் தான் வருவேன்னு பாதியிலேயே மிஸ்.அன்னா சஸ்பென்சோடு கழண்டு கொள்ள நாங்கள் நால்வரும் புறநகர் ரயிலின் கூட்டத்திற்குள் எங்களை செருகிக் கொள்ள எக்மோர் நோக்கி தனது நீண்ட வாலினை மின்சாரத்தின் உதவியுடன் மிக்க கவனமாக இழுத்துக் கொண்டு ஊர்ந்து செல்லத் தொடங்கியது.

எக்மோர் வந்தாகிவிட்டது.ஒரு மணி நேரம் எஞ்சி இருந்ததினால் மனது மூர் மார்க்கெட் பக்கம் செல்ல அலை பாய்ந்தது. சிவாவும் செந்திலும் இரவு உணவுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள சற்று பாரம் குறைந்தவர்களாய் நானும் முரளியும் உலா வரத் தொடங்கினோம். ஆங்கிலப் புத்தகங்கள் மலை போல குவிந்து கிடந்தது.எனக்கு ஏதாவது தமிழ் புத்தகம் கிடைத்தால் இரவை ஒப்பேற்றி விடலாம் என்று தோன்றியது. எனது துரதிருஷ்டம் ஒரு புத்தகம் கூட கிடைக்க வில்லை.கடைசியாக முரளி தஸ்லிமா நஸ்ரினின் பழைய புத்தகம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க இரயில் நிலையம் உள்ளே சென்றோம்.

வியர்வை மழையில் நனைந்து எங்களுக்கான உணவை வாங்கி வைத்திருந்தான் சிவா. தின்றால் பர்கர் தான் தின்பேன் என்று அடம்பிடித்து ஒரு பொட்டலம் வாங்கி கையில் வைத்துக் கொண்டான் செந்தில். வழக்கம் போல சிலப் பல சாகசங்களுடன் கடைசி நிமிடத்தில் இரயிலில் தொற்றிக் கொண்டனர் பாலாஜியும் பிரபுவும்!.. ஆறு பேருக்கும் ஒரே கேபினில் இடம் கிடைக்க மகிழ்ச்சியானோம். பச்சை விளக்கு பல்லைக் காட்டி சிரிக்க இரயில் நகரத் தொடங்கியது. எல்லோரும் எங்களுக்கு எதிர்திசையில் போவது போல் இருந்தது.சிறிது நேரத்தில் இரயில் நிலையம் ஒரு புள்ளியாக மாறி மறையத் தொடங்கியது.இருளைக் கிழித்துக் கொண்டு நாங்கள் செல்வது போல் தோன்றியது. இடையிடையே புதிதாக விளக்குகள் முளைப்பதும் பின்பு மறைவதுமாய் எதையோ உணர்த்திக் கொண்டிருந்தன.

என்ன தான் ஒரே அலுவலகமாக இருந்தாலும் எங்களுக்குள் பேசுவதற்கு சுவாரஸ்யமான விசயங்கள் நிறைய மிதமிருந்தன அல்லது பேசப்பட்ட விசயங்கள் சுவாரஸ்யமாக்கப் பட்டிருந்தது. நானும் என்னுடைய வேஷத்தைக் களைத்து என் பங்கிற்கு பேச்சை சூடாக்க முற்பட்டேன். பொதுவாக எங்களுடைய பேச்சு அலுவலகத்தைச் சுற்றி சுற்றியே வந்தது. சில இடங்களில் சென்சார் செய்ய வேண்டிய கட்டாயமும் வந்தது. இடையில் சீட்டு பரிசோதகர் வர சில நிமிட தடைக்குப் பிறகு அரட்டை தொடர்ந்தது.

நள்ளிரவைக் கடிகாரம் உணர்த்தும் முன்பே பிரபு உறக்கத்தின் உச்சியில் இருந்தான். எல்லோரும் தங்களது படுக்கைகளை தயார் படுத்த ஒரு நித்திரைக்கு தயார் ஆனோம்.ஒரு வெள்ளைக்கார ஜோடி வெண்புகை ஊதித் தள்ள பாலாஜி சற்று சூடானான். டீ.டீ.ஆர் அருகில் இருந்து தான் அனுமதித்ததை கூறினாலும் சட்டம் அனைவருக்கும் சமம் என்று நட்ட நடுநிசியில் முழங்க, இனி அவர்கள் அடிக்க மாட்டர்கள் என்ற வாக்குறுதியுடன் நகரத் தொடங்கினான்.படுத்து சிறிது நேரத்தில் அந்த வெள்ளைக்கார பெண் மட்டும் என் அருகில் வந்து பேசத் தொடங்கினாள்.மற்ற அனைவரும் தூங்கத் தொடங்கி இருந்தனர். நான் வழக்கம் போல ‘வயதானவன்’ என்று பிட்டு போட்டு கீழ்படுக்கையை வசப்படுத்தியிருந்தேன்.

அவள் தரையை காண்பித்து நான் இங்கே படுக்கலாமா என்று கேட்டாள்.எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. எனது இடத்தைக் கொடுத்து விடலாமா என்று ஒரு கணம் என் மனது என்னைக் கேட்டது. தனக்குப் போகத் தான் தானமும் தருமமும், தவிர இடம் இல்லாத அனைவருக்கும் என் ஒருவனால் இடம் கொடுத்து விட முடியாது மேலும் அவள் வயது முதிர்ந்தவளாகவோ உடல் ஊனமுற்றவராகவோ எனக்குத் தெரியவில்லை. மனதிற்கு இதுபோல் பல வகைகளில் சில நொடிகளில் பதில் சொல்லி விட்டு அவளிடம் பதில் பேசத் தொடங்கினேன். இந்த இடம் மிக அழுக்காக இருக்குமென்று பேச்சை வளர்த்தேன். நீண்ட தூரப் பயணம் தனக்கு மிக அலுப்பாக இருப்பதாகவும் காத்தருப்போர் பட்டியலில் இருந்ததால் கடைசி நேரத்தில் தங்களுக்கு தானாக பயணச் சீட்டு மறுக்கப் பட்டதையும் விசா குறைந்த காலமே இருப்பதால் வேறு வழியில்லாமல் பயணிப்பதாகவும் சொல்ல மனதின் சங்கடம் அதிகரித்தது. ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனதிற்கு தோன்றியது. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மை மனதை இலேசாக சுட்டது.

சிறிது நேரம் கழித்து அந்தப் பெண்மணி டிக்கட் பரிசோதகருடன் செல்ல என் கண்கள் தூக்கத்துடன் போரிட்டு தோல்வியுற்று தோல்விக்குத் தண்டனையாய் தூக்கத்தை ஏற்றுக் கொண்டன. எப்போதும் போல் ஒரு மணி நேரத்தில் இயற்கை என்னை உசுப்ப எழும் போது என் கால்களில் அந்த வெள்ளைக்காரப் பெண்மணியின் கன்னங்கள் சிக்கியது. பதறிப் போனேன். நான் தூங்கிய பிறகு அவள் திரும்பவும் அங்கே வந்து படுத்திருக்கிறாள் அதனை கவனியாமல் என் கால்களால் மிதித்து விட்டேன். அதன் பிறகு நான் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தூங்க வில்லை.நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்த்து.அந்தப் பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.எப்படி எழுப்புவது? இரண்டு மூன்று முறை உறக்க கத்தினேன். எழுந்திருக்க வில்லை.பாலாஜி உதவிக்கு வந்தான்.அவன் எழுப்பி விட்டதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் தன்னை மேல் படுக்கையில் கிடத்திக் கொள்ள, நாங்கள் திருச்சூரில் இறங்கிக் கொண்டோம். பாரம் குறைந்த மகிழ்ச்சியில் இரயில் வேகமாக கிளம்பியது.

நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் நமது மலையாளி மக்கள் ஒரு ஊர் சுற்றும் வண்டியைக் கண்டுபிடித்து அதில் ஏறப் பணித்தார்கள்.ஒரு வழியாக குருவாயூர் வந்தாகி விட்டது. எங்களுக்கான அறையில் நாங்கள் புகுந்து கொள்ள வெளி உலகத் தொடர்பு சிறிது நேரத்திற்கு அறுந்தது. பிறகு சிறிது நேரம் கழித்து வேஷ்டிகள் வாங்க சென்றோம். ஒரு வழியாக நேரத்திற்கு வந்து சேர்ந்தோம். மணப் பையன் வழக்கம் போல் குறும்பு செய்து கொண்டிருக்க முதன் முதலாய் ஒரு மலையாள முறைப்படி நடக்க இருக்கும் திருமணத்தைக் காண விழைந்தோம்.ஒரு திருமணத்திற்கும் இன்னொரு திருமணத்திற்குமான இடைவெளி சில மணித்துளிகளே இருந்தன. ஒரு திருமணம் நடைபெற ஏறக்குறைய ஐந்து நிமிடங்கள் பிடித்தன.நமது பையனுடைய திருமணமும் அதே வேகத்தில் நடந்தேறியது.

அன்று மதியம் குருவாயூர் கோயிலுக்குச் சென்றோம். நாலரை மணி நடைதிறப்பிற்கு மூன்றரை மணிக்கே வரிசையில் நிற்க ஆரம்பித்தோம். முரளியுடன் பேசிக் கொண்டே இருந்தாலும் மனது பழைய விசயங்களை அசை போடத் தொடங்கியது. பள்ளியில் படிக்கும் காலத்தில் சுற்றுப் பயணமாக இதே குருவாயூருக்கு வந்ததும் கோயிலுக்குள் சென்று வந்ததையும் நினைத்துக் கொண்டேன். அப்பொழுது கிருஷ்ணரை சரியாக பார்க்க முடியாமல் போனது நினைவுக்கு வந்தது. இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். அங்கு இருந்த செய்திப் பலகையில் தமிழ் தற்கொலை செய்து கொண்டிருப்பதை எண்ணி வருத்தப்பட்டோம். மற்ற மொழிகளை கோயிலில் கையாளும் போது மிகுந்த கவனம் தேவை அது கேரளமாக இருக்கட்டும் அல்லது தமிழ்நாடாக இருக்கட்டும். நாலரை மணிக்கு நடை திறக்கப் பட்டது.என் இதயம் இரும்பினால் ஆனது (:-)) என்றாலும் அங்கிருந்த மெட்டல் டிடக்டர் காண்பிக்கத் தவறியது. நீண்ட வரிசை சற்று குறைந்து முன்னோக்கிச் செல்ல ஆரம்பித்தோம். கடைசியாக மூலவரை நேராக கண்டேன். என் மனக்குறைகள் தீர மனமுருகி வேண்டிய போது பாரதியின் பாடல் ஒன்று கண் முன் வந்து சென்றது.கோயில் பிரகாரங்களைச் சுற்றி முடித்த பிறகு சற்று நேரம் அமர முற்பட்டோம்.அப்பொழுது பாயாசம் நினைவுக்கு வந்தது.இரண்டு லிட்டர் பாயாசத்தை வரிசையில் நிற்காமல் சற்று அதிக விலை கொடுத்து வாங்க நேரிட்டது.அதன் பின் மீண்டும் ஒரு முறை கண்ணனைக் கண்டு விட்டு மனதில் வேண்டுதல்களுடனே வெளியேறினேன்.

தங்கும் விடுதியில் சடுதியில் பாயசம் இருந்ததற்கான தடயங்கள் அழிக்கப் பட்டது. அவ்வளவு பேரும் சேர்ந்து ‘அட்டாக்’ செய்ததனினால் தீர்ந்து போனது. மறுபடியும் குருவாயூரை நோக்கி எங்களது பயணம் தொடர்ந்தது.எங்களுக்கு ஏற்ற விலையில் விடுதியைத் தேடுவதில் இரவு ஆரம்பிக்கத் தொடங்கி இருந்தது. ஒரு வழியாக ராகேஷ் யோசனையின் பேரிலும் நமது மக்களின் தீராத தேடலிலும் ஒரு நல்ல விடுதியில் இடம் கிடைத்த்து. சாகசங்களில் ஈடுபாடு கொண்ட பாலாஜி வழக்கம் போல ‘கந்தசாமி’ பார்த்தே தீர வேண்டும் என்று கிளம்ப, நமது கோஷ்டியில் புதிதாக இருவர் மருந்து சாப்பிட கிளம்ப புதியவர்களின் நலன் கருதி பாலாஜியை புறக்கணிக்க வேண்டியதாகியது. எவ்வளவோ மறுத்தும் நமது தம்பிகளின் விடாத அன்பு உபசரிப்பால் சிறிது சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஒரு வழியாக மக்களைக் கொண்டு சேர்த்து விட்டு தஸ்லிமா நஸ்ரினின் புத்தகத்தில் மூழ்கத் தொடங்கினேன். இரவு எப்பொழுது தனது வேலையைக் காட்டத் தொடங்கியதோ என்னை மறந்து உறங்க ஆரம்பித்தேன்.

அடுத்த நாள் காலையில் முரளியால் எழுப்ப பட்டு அருகாமையில் இருக்கும் நீர்வீழ்ச்சிக்கு செல்லத் திட்டமிடல் தொடங்கியது. நம்ம ‘கோடிங்’ போல திட்டமும் வழுவாக சொதப்பத் தொடங்கியது. இது சரிப்படாது என மனதிற்கு தோன்றவும் அறையிலேயே ஓய்வு எடுக்கத் தொடங்கினோம். பிறகு அருகில் இருக்கும் விலங்கியல் பூங்காவிற்காகவது செல்வோம் என்று கருதிபயணத்தைக் கிளப்பினோம். அருமையாக நேரத்தை ஒப்பேற்றிய பிறகு திரும்பவும் சென்னைக்கான பயணத்தைத் தொடர்ந்தோம்.

அடுத்த நாள் காலையில் எல்லோரும் கிண்டியில் பிரியும் பொழுது நமது மக்களில் ஒருவர் ‘ ஹீம்... இரண்டு நாள் கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தது.... இப்ப பாரு கண்ணே அவிஞ்சிரும் போல இருக்கு’ என்று கூற

நான் அமைதியாக அமோதித்து வைத்தேன்.....!

ஒழுங்கா சாப்பிடு

ஒழுங்கா சாப்பிடுடா.. இல்லாட்டி அங்க பாரு சேக் மாமா வர்றாங்க... சொல்லட்டுமா?

‘.....’

அப்ப சாப்பிடு..

எதிர் வீடு.. வாடகைக்கு குடி வந்து ஒரு வாரம் தான் ஆகுது.. கூட்டுக் குடும்பம்.. அங்க எனக்கு இரண்டு வயசில ஒரு வில்லன் இருந்தான் அப்படின்னா நம்பவிங்களா?

இரவு மணி 8.05

காலேஜ் விட்டு வழக்கம் போல ஊர் சுத்திட்டு வீடு திரும்பும் வழக்கமான நேரம்... பொடியனும் அவனுடைய அம்மாவும் அவர்களுடைய வீட்டு வாசலில் ... சரி , பேச்சு கொடுப்போம்னு பக்கத்தில போனேன்...

பொடியன் என்னைய பார்த்ததும் ஒரு விதமான அலறலுடன் வீட்டுக்குள் தவழ்ந்து ஓடிப் போனான்..

‘ஏன்? என்னாச்சு?’

‘உங்களைப் பார்த்து பயப்படுறான்!’

‘ஒரு வேளை புது ஆள்ங்கிறதுனால இருக்கும்..’

‘இல்லை .. உங்களைப் பார்த்து மட்டும் தான் பயப்படுறான்’

‘ஹூம்... சரிங்க பார்ப்போம்’

அந்த பொடியன் என்னைய பார்த்ததும் ஏன் பயப்படுறான்? நம்ம டெரர் லுக் எதுவும் குடுக்கலியே.... ஒரு வேளை நம்ம லுக்கே டெரரா இருக்கோ?... ஒன்னும் புரியலையே...

அடுத்த சில நாட்களில்... ஒரு நாள்...

‘செல்லக் குட்டி’

‘.....’

‘மாமா உனக்கு சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்கேன்.. பாரு’

‘எனக்கு வேணாம் .. உங்களைப் பார்த்தா பயமா இருக்கு’

‘ஏன்டா செல்லம்... நான் வேணும்னா உனக்கு பொம்மை வாங்கித் தரட்டா’

‘எனக்கு வேணாம்.. உங்களைப் பார்த்தா பயமா இருக்கு’ அவன் அம்மாவிடம் தாவினான்.

‘பழகிட்டா சரியாயிடும்’ - பொடியனின் அம்மா.

அவர்கள் இருந்த வரை சாப்பிடுவதற்கும் தவறு செய்யாமலிருக்கவும் என்னை நினைவு படுத்த வேண்டிய கட்டாயம் இருந்து வந்ததை மறுக்க முடியாது.

‘வீட்டை காலி பண்ணிட்டோம்.. பக்கத்தில தான்.. கண்டிப்பா வரணும்’

‘கண்டிப்பா’

முதன் முறையாக அந்த பொடியன் என்னைப் பார்த்து சிரித்தான்... அப்பாடி இனிமே அந்த பொடியனிடம் நம்மளை நினைவு படுத்த மாட்டாங்க... நானும் பதிலுக்கு சிரித்து வைத்தேன்..

அப்புறம் நானும் ஊரை காலி பண்ண வேண்டிய நேரம் வந்தது. நீண்ட நாட்களுக்கு பின் வீடு திரும்பினேன். தெருவே மாறி இருந்த்து... காணும் இடம் எல்லாம் மாற்றம் மட்டுமே இருந்தது..

இரவு நேரம்... வாசலில் அமர்ந்திருந்தேன்... அதே எதிர்வீடு... ஒரு பொடியன்... அழைத்தேன்.. ஒரே ஓட்டம்..

அடுத்த நாள் இரவு

ஒழுங்கா சாப்பிடுடா.. இல்லாட்டி அங்க பாரு சேக் மாமா வர்றாங்க... சொல்லட்டுமா?

‘.....’

என்ன என்றே தெரிய வில்லை... நமக்கு எதிரா ஏதோ உள் நாட்டு சதி நடக்குது... விசயம் தெரிஞ்சவுங்க யாராவது சொல்லுங்களேன்....!

Wednesday, September 16, 2009

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்

தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
- நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?


நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னை தீய வினை பயன்கள் - இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.


இனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்
கவலையரச் செய்து - மதி
தன்னை மிக தெளிவு செய்து - என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.

Saturday, September 5, 2009

இரண்டாம் ஆண்டு!!!....

இன்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைகிறது உன்னைப் பிரிந்து!... யுகங்கள் பல கடந்து விட்டதாய் மனதிற்கு தோன்றினாலும் நேற்று நடந்திட்டது போல் இன்னும் என் கண் முன்னே அனைத்து சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறுகிறது.

தனியனாய் ஒற்றை மரமாய் நிற்கிறேன், போராடுகிறேன். என் மழலை பருவத்திற்காக மீண்டும் மீண்டும் ஏங்குகிறேன். இன்னும் பக்குவப் படவில்லை என்று சிரிக்க வேண்டாம். பக்குவம் என்ற பெயரில் பொய் முகமுடி அணிந்திட எனக்கு விருப்பமில்லை.

காயங்களைத் தாங்கிட என் நெஞ்சிலும் முதுகிலும் வேறு இடங்களில்லை... பாரம் தாங்கிட தோள்களிலும் என் மனதிலும் வலுவில்லை... நடைபிணமாய் அலைந்து திரிந்திட எண்ணமில்லை... என்ன செய்வது? வழி ஒன்றும் அறிந்திடேன் பராபரமே!!!...

எப்படியாயினும் உன் வழியில் நான் தொடர்ந்திடுவேன் என்ற வைராக்கியத் தீயின் சுடர் இமயத்தின் உயரத்தில் என்றும் என் மனதில் அழியா ஜோதியாய் இடம் பெற்றிருக்கும் என்பது திண்ணம்....

என்றும் உன் நினைவுகளுடன்....

உலக நியதிகளுடன் ஒத்துப் போக இயலாத துரதிருஷ்டசாலி(யின்) மகன்!!!!....