Saturday, February 27, 2010

கால்கள்...!

எனது கால்களைப் பற்றிய வியப்பு எப்பொழுதுமே என்னுள் மாறாது இருந்து வந்திருக்கிறது. அது என்ன அப்படி ஒரு வியப்பு? எனது உடல் பருமன் முழுவதையும் எப்படி இந்த கால்கள் தாங்குகின்றன என்பது தான் ;-).. பள்ளிக்கூடம் வீட்டிற்கு அருகிலேயே அமைந்து போனதினால் அதிக தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. ஆறாம் வகுப்பிற்கு சேர்ந்த பின் பள்ளிக்கான தூரம் சற்று அதிகமாகிப் போயிற்று... தினமும் காலையில் எழுந்து பள்ளிக்கு நடந்து வருவது என்பது ஒரு யுகமாகத் தோன்றிய காலகட்டம் அது... எப்பொழுதும் போல் உற்சாகமே இல்லாமல் அப்படியே இடமும் புறமும் வேடிக்கை பார்த்துக் கொண்டே உருண்டு ச்சீ. ச்சீ.. நடந்து செல்வது வழக்கமாகி இருந்தது.

ஊரின் இதயப் பகுதியில் பள்ளி அமைந்திருந்தது. பள்ளியைச் சுற்றி உள்ள சாலையில் எப்பொழுதுமே நெரிசல் மிகுந்து காணப்படும். அந்த நெரிசல் என்ற வில்லனால் அப்பா சைக்கிள் வாங்கித் தர மறுத்து விட்டார். ஆறாவது இறுதித் தேர்வில் தேர்ச்சியுற்றால் எனக்கு சைக்கிள் வாங்கித் தருவதாக உறுதி அளித்தார். அதுவரை என்ன செய்வது? கடையில் இருந்த சித்தப்பாவிற்கு புதிய தலைவலி முளைத்தது. தினமும் காலையில் என்னை பள்ளியில் கொண்டு போய் விட வேண்டிய புதியதொரு வேலை தான் அது...!. அப்பொழுதெல்லாம் எது உண்மை எது பொய் யாரை நம்ப வேண்டும் யாரை நம்பக் கூடாது (இப்பொழுது வரை அப்படித் தான் என்பது வேறு விசயம் ..;-)) என்றெல்லாம் தெரிந்து இருக்கவில்லை... கடையில் ஆரம்பிக்கும் எனது பேச்சு பள்ளிக்கூடம் வரும் வரையில் தொடர்ந்து கொண்டே இருக்கும். மாலை வேளைகளில் மார்க்கெட்டில் இருந்து திரும்பும் அப்பாவுடன் வீட்டை நோக்கிப் பயணம்...!

அப்பொழுது தான் என்னுடைய ஊரில் ரிலாக்ஸ் ஹோம் என்ற பெயரில் புதிதாக கடைகள் திறக்கப் பட்டுக் கொண்டு இருந்தன. அவர்களின் ஸ்பெஷல்... வடை!. அப்பாவுடன் வீடு திரும்பும் பொழுது ஒரு நாள் கூட சில பல வடைகளை சாப்பிடாமல் வீடு சென்றது கிடையாது... அந்த கடைக்காரரிடம் அப்பா வைக்கும் ஒரே வேண்டுகோள் வடை சூடாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.. சில சமயம் பத்து நிமிடங்கள் வரை பொறுத்திருந்து சாப்பிட்டிருக்கிறேன் .. ஐந்து வடைகள் வரை சாப்பிட்டு விட்டு தான் தட்டைக் கீழே வைப்பேன்... சர்க்கரை இல்லாத டீ ஒன்றுடன் அப்பா ஒதுங்கிக் கொள்வார்... வடைகள் முடிந்ததும் சூடாக ஒரு காபி... அப்பாவின் சைக்கிளில் இருக்கும் சுமைகளுக்கு ஏற்ப நடந்தோ சைக்கிளில் அமர்ந்தோ வீடு சேர்க்கப் படுவேன்.

நின்று கொண்டு வேலை பார்ப்பதற்கு நான் என்றுமே சலித்துக் கொண்டது இல்லை... நடப்பது மட்டுமே சிரமமான காரியம் என்று எனது மனதில் ஆழப்பதிந்திருந்தது. முதுகலைப்பட்ட படிப்பிற்காக மதுரையில் கேகேவுடன் தங்கியிருந்த சமயம். கேகே இயற்கையிலேயே மிக வேகமாக நடக்கும் குணம் கொண்டவர். மிகத் தொலைவான தூரத்தையும் அநாயசமாக கடந்து போய் விடுவார். அண்ணா நகர் அம்பிகா தியேட்டரில் இருந்து எட்டு மணி பத்து நிமிடத்திற்கு கிளம்பும் பி14 யைப் பிடித்தால் கல்லூரிக்கு உள்ளே வரை சென்று விட முடியம். மற்ற வண்டிகளில் சென்றால் ஏறக்குறைய ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியது வரும். காலையில் எழுந்து சரியான சமயத்திற்கு கிளம்பினாலும் நான் நடந்து நிறுத்தத்திற்கு வருவதற்குள் பழச்சாறு ஒன்றைக் குடித்து விட்டு எனக்கும் சேர்த்து பஸ்ஸில் இடம் பிடித்து வைத்திருப்பார். நிறைய தடவை யோசித்து பார்த்தாகி விட்டது ஏன் என்னால் வேகமாக நடக்க இயலவில்லை என்று? காரணம் மட்டும் கிடைக்க மாட்டேன் என்கிறது.

கண்களில் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இந்த உலகம் எனக்குப் புதிதாகத் தெரிந்தது. என்னால் முன்னை விட பல மடங்கு வேகமாக நடக்க முடிந்ததை உணர்ந்து கொண்டேன். நடப்பதற்கான வாய்ப்பை அதிகரித்து வேகமாக நடக்க பயின்று கொண்டேன். வேகமாக நடக்கும் பொழுது நான் கடந்து போகும் பாதைகளையும் அதனை கடக்க உதவும் எனது பாதங்களையும் ரசித்துக் கொண்டே செல்வதுண்டு. எனது கால்களைப் பற்றி என்னுள் ஒரு கர்வம் உருவாகி இருந்தது. எனக்குள் தூங்கிக் கொண்டு இருந்த இளைஞன் முழித்துக் கொண்டான் என்றே நினைக்கிறேன். ஓடும் பஸ்ஸில் ஏறி இறங்க முடிகிறது ... தொங்கிக் கொண்டு பயணிக்க முடிகிறது... சாலைகளை வேகமாக கடக்க முடிகிறது.. இப்படி எவ்வளவோ... இத்தனைக்கும் இந்த அறுவை சிகிச்சை தான் காரணமா? நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாக உதவியிருப்பதை மறுக்க இயலாது. நடப்பதற்கான வாய்ப்பு அறுவை சிகிச்சையின் வாயிலாக மட்டுமே எனக்கு கிடைத்தது இல்லாவிடில் எப்பொழுதும் போல வண்டியில் சுற்றித் திரிந்திருப்பேன் ;-)..

அன்று அலுவலகத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டே ஸ்பென்ஷர்ஸ் டெய்லியை நெருங்கிக் கொண்டிருந்தேன். வழக்கம் போல இருள் கவிழ்ந்திருந்த அந்த பகுதியில் ஒரு இளைஞனும் ஒரு சிறிய பையனும் சாலையைக் கடக்க முயற்சி செய்து கொண்டு இருந்தனர் அந்த இளைஞனின் முகத்தில் ஒரு சிறிய பரபரப்பு... நான் அப்பொழுது தான் அந்த சிறிய பையனை நன்றாக கவனித்தேன்... கடவுளே...! அவனும் இளைஞன் தான்... அவன் உயரக் குறைவிற்குக் காரணம் அவனுக்கு இரண்டு கால்களுமே கிடையாது.... தனது கைகளின் உதவியால் நடந்து கொண்டு இருந்தான்.. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது... அப்படியே சிறிது நேரம் ஸ்பென்ஷர்ஸ் டெய்லி வாசலிலேயே நின்று விட்டேன். அந்த இளைஞன் என்ன பாவம் செய்தான்...? கடவுளுக்கு ஏன் இந்த குரூர புத்தி? எனது அர்ச்சனைகளை வீடு வரும் வரை தொடர்ந்து கொண்டே வந்தேன்...

இந்த சம்பவத்திற்குப் பின் எனது கால்களைப் பற்றிய எனது கர்வம் சிறிது குறைந்திருந்தது... அன்று கடவுளை அர்ச்சித்த அதே வாய் இன்று என்னை முழுவதுமாக வைத்திருப்பதிற்காக நன்றி சொல்லிக் கொள்கிறது... என்ன முரண்பாடு? ஏதேதோ யோசித்தவாறே திருவான்மியூர் பேருந்து நிலையத்தை அடைந்து ஊர் சுற்றும் பேருந்தை தேடிக் கொண்டு இருந்தேன். என் மனதில் திரும்ப திரும்ப அந்த காட்சியே வந்து கொண்டு இருந்தது. வேறு சில யோசனைகளும் என்னை சூழ்ந்து கொள்ள ஒரு ஓரமாக என்னை மறந்து நின்று கொண்டு இருந்தேன்.

“தம்பி ... அடையாருக்கு எப்படி போக வேணும்?”

“இந்த பக்கத்தில நிக்கிற எல்லா வண்டிகளும் போகும்”

“இல்லை.. நான் நடந்து போகப் போறேன்.. எப்படி போறது?”

“நேராப் போயி இடப்புறம் திரும்புனிங்கன்ன ஒரு சிக்னல் வரும் ... அதில ரைட் எடுத்து போனிங்கன்னா.. அடையாரு வந்துடும்...”

“சரி...”

மறுபடியும் யோசனையில் ஆழ்ந்து விட்டேன்... சில நொடிகளுக்கு எல்லாம் நான் செய்திருந்த தவறு எனக்கு உரைத்தது. என்னிடம் வழி கேட்டவள் ஒரு மூதாட்டி ஆயிற்றே!... அவள் எப்படி நடந்து போவாள்... பணம் கேட்க சங்கடத்தில் இருந்ததால் வழி கேட்டு குறிப்பால் உணர்த்தினாளோ? என் மனம் உடனே அந்த மூதாட்டிக்கு உதவும் படி பணித்தது. சற்றென்று திரும்பிப் பார்த்தேன் அந்த மூதாட்டி தனது ஊன்று கோலை தரையில் ஊன்றி வேகமாக பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறிக் கொண்டு இருந்தாள். நான் பயணிக்க வேண்டிய பேருந்தும் வந்தது... பேருந்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்... வழக்கம் போல் தலை கவிழ்ந்தது... இந்த முறை நான் கடக்கும் பாதைகளையோ என் கால்களைப் பார்க்கவோ அல்ல என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரிந்தது....!

சரக்கினில் விஷம்_2 ...!

“என்னால ஏமாற்றத்தை தாங்கிக்க முடியலைடா மச்சி...” உடைந்து போன குரலில் இருந்தான் ராம்.

“மச்சி... இப்ப என்ன நடந்து போச்சுன்னு புலம்பிக்கிட்டிருக்கடா?” ராமைத் தேற்றும் முயற்சியில் ராஜ்.

“ஆயிரம் தான் இருந்தாலும் துரை அப்படி பண்ணியிருக்கக் கூடாதுடா... என் மனசில என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கிறதுக்காக வேண்டி மட்டும் என்னோட நண்பனா நடிச்சிருக்கான்டா!”

“என்னடா சொல்ற? துரைக்கும் உனக்கும் என்ன பிரச்சினை?”

“உனக்குத் தெரியாத விசயம் ஒன்னும் கிடையாதுடா... நான் ஜானகியைப் பார்த்த உடனேயே எனக்குப் பிடிச்சுப் போச்சு... ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராதுங்கற ஒரே காரணத்துக்காக நான் விலகிப் போயிட்டேன்... என் மேல எனக்கே பயம்.. பேசுறது கூட கிடையாதுடா... ”

“தெரியும்...!”

“ஆரம்பத்தில இருந்தே எனக்கும் அவளுக்குமான பிரச்சினைகளைப் பற்றியே பேசிக்கிட்டிருந்தானா... என் மனசுக்கு சந்தோசமா இருந்தது... நல்ல நண்பன்னு நினைச்சுட்டேன்டா... பயபுள்ள அவனும் ஜானகியை விரும்புறான்டா...”

“எதிர்பார்க்கலைடா...!”

“நான் எந்த எதிர்ப்பும் சொல்ல போறதில்லை... எதிர்த்து ஒன்னும் ஆகப் போறதும் இல்லை... முடிவு எடுக்க வேண்டியவனும் நான் கிடையாது... இப்படி எல்லாம் இருக்கும் பொழுது ஏன் என்கிட்ட இப்படி நடந்துட்டான்? நட்புங்கற உறவைக் கொச்சைப் படுத்திட்டான் மச்சி...”

“விடுடா... அவளுக்கும் பிடிச்சிருக்குன்னா சேர்ந்துட்டு போகட்டுமே...!”

“மச்சி.. நான் என்ன நந்தி மாதிரி குறுக்கவாடா நிக்கப் போறேன்? என் மனசில இருக்கிறத தெரிஞ்சிக்க நட்புங்கற உறவை ஒரு கருவியா பயன்படுத்துனது என் மனசை ரொம்ப பாதிச்சிருச்சு மச்சி... பச்சை துரோகம்...”

“நடந்தது நடந்து போச்சு மச்சி... வா சரக்கு அடிக்க போலாம்...”

“சரக்கு அடிக்கலாம்டா... அவனை ஏதாச்சும் பண்ணியாகனும்டா”

“டேய் ... என்னடா வில்லன் மாதிரி பேசுற?”

“ஆமாடா.. வில்லன் தான்... வில்லாதி வில்லன்...”

“மச்சி.. பயமா இருக்குடா.. என்ன பண்ணப் போற...”

“வர்ற வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு ஒரு சின்ன சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.... அந்த சந்திப்பின் போது ஒன்னு அவன் உயிரோட இருப்பான் இல்லை நான் உயிரோட இருப்பேன்... யார் உயிரோட இருக்காங்களோ அவங்க சிறைக்கு செல்லும் படி இருக்கும்”

“புரியலைடா...”

“மச்சி... இதோ பார் இரண்டு பாட்டில் சரக்கு.... இந்த இரண்டு பாட்டில்ல ஒன்னு எங்க இரண்டு பேரில யாராவது ஒருத்தரோட உயிரைப் பறிக்கப் போகுது... ஆமாடா.. ஒரு பாட்டில்ல விஷம் கலந்து வைச்சிருக்கேன்... சுவாரஸ்யம் என்னன்னா.. எந்த பாட்டில்ல விஷம் இருக்குன்னு எனக்கே தெரியாது...! ஸோ... யார் உயிரோட மிஞ்சியிருக்கோமோ அவங்க சிறைக்குப் போகிறது உறுதி... எப்படின்னா.. மற்றவனைக் கொன்றதுக்கான பழி அவன் மேல விழுந்துடும்...”

“நீ உயிரோட இருக்கிறன்னே வச்சிக்குவோம்... தேவையில்லாம ஜெயிலுக்குப் போக வேண்டி இருக்குமேடா...”

“சட்டப்படி எல்லாம் நடக்க வேணும்டா... நான் உயிரோட இருக்கிறேன்னா... என் நண்பனைக் கொன்றதுக்காக தண்டனையை அனுபவித்தே தீர வேணும்டா...”

“மச்சி... மன்னிச்சிரலாமே... உனக்குத் தான் தப்பு செஞ்சவங்களை மன்னிக்கிறது புதுசு இல்லையே?”

“இல்லை மச்சி... அவனைப் பார்க்கும் போது எல்லாம் என்னோட மனது வலிச்சுக்கிட்டே இருக்குது... அந்த வலிக்கு மருந்தே இல்லை... இப்பொழுதெல்லாம் மற்ற நண்பர்களையும் நான் சந்தேக கண் கொண்டு தான் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப் பட்டிருக்கேன்டா.. மரண வேதனை... இதனால நான் என்னோட மற்ற நண்பர்களுக்கு துரோகம் செஞ்சிக்கிட்டு இருக்கேன்டா...”

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை மச்சி... நல்லா யோசிச்சு முடிவு பண்ணுடா... நான் வர்றேன்”

அந்த சந்திப்புக்குப் பிறகு ஒரு அவசர வேலை காரணமாக ராஜ் பெங்களூரு வரை செல்ல வேண்டி வந்தது. ராமின் திட்டத்தை எல்லாம் மறந்தே போய் விட்டான். சனிக்கிழமை தனது வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது ராமின் திட்டம் நினைவுக்கு வர மொபைல் போனை எடுத்து ராமிற்கு தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தான்... எதிர்முனையில் பதிலே இல்லை... வேக வேகமாக எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் கொண்டு ஊர் திரும்பினான்.. நேராக ராமின் அப்பார்ட்மெண்ட்டிற்கு ராஜின் கார் சென்று கொண்டு இருந்தது... சற்று நேரத்தில் அவனுடைய இருப்பிடத்தை அடைந்து விடலாம் என்று யோசித்துக் கொண்டே திரும்பும் பொழுது ராமும் துரையும் வந்து கொண்டு இருந்தனர். ராஜிவிற்கு ஒரே ஆச்சர்யம்.. காரை ஓரம் கட்டி விட்டு இறங்கினான்.

“என்ன ராஜ்.. பெங்களூரு ட்ரிப் எல்லாம் எப்படி இருந்துச்சு?”

“நல்லா இருந்துச்சு துரை... நீ எப்படி இருக்க... என்ன இந்த பக்கம்?”

“நான் நேத்துல இருந்து ராமோட ரூம்ல தான் இருக்கேன்... நைட் சரக்கடிச்சிட்டு... இப்ப தான் எழுந்தோம்... சும்மா... அப்படியே கடற்கரை வரைக்கும் போயிட்டு வரலாம்னு.. நீயும் வாயேன்...”

ஒன்றுமே நடக்கலைன்னு தெரிந்தவுடன் ராஜ் நிம்மதி பெருமூச்சு விட்டான்... இருந்த போதிலும் நேற்று என்ன நடந்திருக்கும்னு தெரிஞ்சுக்க வேண்டிய ஆவல் நிறையவே இருந்தது அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.. ராமை ஏறிட்டு பார்த்தான்... அவன் வழக்கத்தை விட அதீத சந்தோஷத்தில் இருந்தான்... ராஜின் பார்வையை புரிந்து கொண்ட ராம் தனது சட்டை பையில் மடக்க முடியாமல் மடக்கி வைத்திருந்த பத்திரிக்கையை எடுத்து நீட்டினான்...

“நாளைக்கு உனக்குத் தர்றேன் சொல்லியிருக்கா... நேற்று காலையில தான் எங்க இரண்டு பேருக்கும் கிடைச்சுது...”

பிரித்துப் பார்த்த ராஜ்.. அதிர்ந்து போனான்.. ஜானகியின் திருமண பத்திரிக்கை தான் அது...! அந்த இடத்தில் சற்றென்று ஒரு வித இறுக்கம் அதிகரித்து மூவரும் பேசாது நின்றனர்...

“சேம் பிஞ்ச்.... சாக்லெட் கொடு... ” அருகில் விளையாடிக் கொண்டு இருந்த இரு குழந்தைகள் பேசிக் கொள்வது மூவரின் காதிலும் விழுந்தது... அதனைக் கேட்ட ராஜ் அர்த்தத்துடன் சிரிக்கத் தொடங்கினான்.... ராஜின் சிரிப்பில் ராமும் துரையும் சேர்ந்து கரையத் தொடங்கி இருந்தனர்...!

Friday, February 26, 2010

சரக்கினில் விஷம்_1 ...!

நமது வினோத்திற்கு வயது முப்பதை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. வாழ்க்கை அவனுக்கு எவ்வளவோ கொடுத்திருந்தாலும் தனக்கு இன்று வரை திருமணம் நடக்கவில்லை என்று ஒரு ஏக்கம் இருந்தது. அதற்கு அவனே தான் முழுமுதற் காரணம் என்பதை நன்கு அறிந்து இருந்தான்.பெண் பார்க்க ஆரம்பித்த காலத்தில் தனது அழகுக்கும் அறிவுக்கும் அந்தஸ்த்திற்கும் ஏற்ற பெண்கள் அமைந்தும் இன்னும் சிறப்பான பெண் வேண்டும் என்ற தேடுதலிலேயே அனைத்து வரன்களையும் ஒதுக்கித் தள்ளி இருந்தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதற்கு இணங்க இவனது வயதைக் காரணம் காட்டி பெண் வீட்டார் ஒதுக்கித் தள்ளத் தொடங்கி இருந்தனர்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் பெண் பார்க்க வடபழனி வரை சென்றிருந்தான். பெண்ணைப் பார்த்த உடனேயே கல்யாணத்திற்கு சம்மதித்தான். இருப்பினும் பெண்ணிற்கு அவனைப் பிடிக்கவில்லை ... வேறு என்ன வழக்கம் போல் வயது தான். அவனுக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை.. முப்பது வயது என்பது இப்பொழுதெல்லாம் கல்யாணத்திற்கான சராசரி வயதாக மாறிப் போயிருந்தும் தனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று சோகத்தில் மூழ்கி இருந்தான். தனக்குப் பிடித்தமான பெண் யாரும் தன்னை மணப்பதற்கு தயாராக இல்லை என்ற உண்மை அவனை உள்வரை சுடத் தொடங்கியது.

சென்ற வார இறுதியில் மிக நீண்ட யோசனைக்குப் பிறகு பழக்கமே இல்லாத டாஸ்மாக்கிற்கு சென்றான். அங்கிருக்கும் சரக்குகளை வெளியிலிருந்து உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன சார்... என்ட்ட கட்டிங்கிற்கு பணம் இருக்கு... உன்ட்ட இருந்தா சொல்லு சார்.. ஒரு குவார்ட்டரா வாங்கி ஆளுக்கு பாதியா பிரிச்சிக்கலாம்...”

வினோத்திற்கு தூக்கி வாரிப் போட்டது. கவலையை மறக்க சரக்கு அடிக்கலாம்னு வந்தா இவனுங்க வேற இப்படி வெறுப்பைக் கூட்டுறாய்ங்களே...

“உனக்கு நான் ஒரு குவார்ட்டர் பிரியா வாங்கித் தர்றேன்... ஆனா எனக்கு மூணு குவார்ட்டர் நல்ல சரக்கா வாங்கி கொடுக்கிறியா?”

“பணத்தைக் கொடு சார்.. நான் வாங்கியாறேன்...ஆமா.. விஸ்கியா... பிராந்தியா.. என்ன சாப்டுறே”

ஒரு நிமிடம் வினோத் குழம்பித்தான் போனான். சாக வேண்டும் என்று முடிவு எடுத்த பிறகு விஸ்கின்னா என்ன? பிராந்தின்னா என்ன?

“நீ என்ன சாப்டுவே..”

“நெப்போலியன்... பிராந்தி...”

கேள்விப் பட்ட சரக்காத்தான் இருக்கு என்று நினைத்தவாறே பணத்தை சட்டைப் பையில் இருந்து எடுத்து எண்ணத் தொடங்கினான்.

“நான் இங்க இருந்து பார்த்துக்கிட்டே இருப்பேன்... எஸ்கேப் ஆயிடலாம்னு நினைச்சா... நாளைக்கு உனக்கு கிடைக்க வேண்டிய குவார்ட்டர் கிடைக்காது...”

“சார்... நீ எனக்கு ப்ரியா வாங்கித் தரும் போது உன்னை ஏமாத்துவேனா சார்... இந்தாண்ட நில்லு சார்.. ஒரு நிமிஷம்...”

அடுத்த சில நொடிகளில் வினோத்தின் கரங்களில் மூன்று நெப்போலியன் குவார்ட்டர் பாட்டில்கள் சிரித்துக் கொண்டு இருந்தன. அதனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். மூன்று பாட்டில்களையும் ஒரு சேர திறந்தான். தனக்கு முன்னால் இருந்த மேஜையில் வரிசையாக வைத்தான். ஒரு சிரிஞ்சின் உதவியினால் மூன்று பாட்டில்களில் இருந்தும் ஒரே அளவு சரக்கை உறிஞ்சி எடுத்தான். பின்பு தான் வாங்கி வைத்திருந்த விஷத்தினை சிரிஞ்சில் எடுத்து ஒரு பாட்டிலில் மட்டும் கலந்தான். மீதியிருக்கும் இரண்டு பாட்டில்களில் மீண்டும் சரக்கினை கலந்தான். அனைத்து பாட்டில்களையும் மிக நன்றாக மூடிய பின் ஒரு பையினில் இட்டு அதனை படுக்கையின் மீது வைத்தான். பஞ்சு மெத்தையின் மீதிருந்த அந்த பையினை மெதுவாக சுழற்றத் தொடங்கினான். சிறிது நேரத்திற்கெல்லாம் மூன்று பாட்டில்களையும் வெளியே எடுத்து வைத்தான். இப்பொழுது எந்த பாட்டிலில் விஷம் இருக்கிறது என்பதை அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

“சாகிறதுக்கு என்னல்லாம் பண்ண வேண்டி இருக்கு...? இந்த மூணு பாட்டில்ல ஏதோ ஒரு பாட்டில் என் உயிரைக் குடிக்கப் போகுது... ஆனா.. அது எந்த பாட்டில்...? சாவைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு ... எப்போ எப்படி சாகப் போறேங்கிறது எனக்குத் தெரியாது.. ” புலம்பியவாறே மூன்று பாட்டிலையும் உற்று நோக்கிக் கொண்டு இருந்தான்.

வெள்ளிக் கிழமை இரவு பத்து மணிக்கு முதல் பாட்டிலை திறந்தான்... ராவாக கவிழ்த்தான்... குடித்துப் பழக்கம் இல்லை என்றாலும் முதல் பாட்டிலில் இருந்த சரக்கு வெகுவேகமாக தீர்ந்து போனது... சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த அறையில் நிசப்தம் நிலவத் தொடங்கியது.. அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல் வினோத்திற்கு விடிந்தது. “தப்பிச்சிட்டேன் போல இருக்கு... ” தனக்குள் சொல்லிக் கொண்டான். அன்று பகல் முழுவதும் ஊரைச் சுற்றிப் பார்ப்பதில் செலவிட்டான்.. ஏற்கனவே சுற்றித் திரிந்த இடம் என்றாலும் சளைக்காமல எவ்வளவு இடத்தைப் பார்க்க முடியுமோ அவ்வளவு இடத்தையும் பார்த்து முடித்தான். சனிக்கிழமை இரவும் வந்தது. மீதமிருந்த இரண்டு பாட்டில்களில் ஒரு பாட்டிலை எடுத்து வழக்கம் போல் (ஒரு நாள் பழகிட்டாலே .. வழக்கம் போல தான்...:-)...) ராவாக கவிழ்த்தான்.

என்ன ஆச்சரியம்! ஞாயிற்றுக் கிழமை காலையையும் வினோத்தினால் காண முடிந்தது. “அப்போ ... இன்னைக்கு கண்டிப்பா செத்துருவேன்...” சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டான். அன்று முழுவதும் தனக்குப் பிடித்த எல்லா வேளைகளையும் முழுமூச்சாக செய்தான். மீதமிருக்கும் பாட்டிலில் தான் தனது உயிரைப் பறிக்கப் போகும் விஷம் இருக்கிறது என்பது அவனுக்கு மிகவும் வேதனை அளித்தது... எப்பொழுது சாகப் போகிறோம் என்று தெரியாமல் சாக வேண்டும் என்பதற்குத் தான் இந்த உக்தி.. அதுவும் தோற்றுப் போய்விட்டதே என்ற வருத்தம் அவனுடைய அறையில் இருந்த இருளை விட அதிகமாக அவனை சூழ்ந்து கொண்டிருந்தன. கண்ணை மூடிக் கொண்டு அந்த கடைசி பாட்டிலையும் குடித்து முடித்தான்...

ஆதவன் கிழக்கே உதித்து வாரத்தின் இரண்டாம் நாளைத் தொடங்கி வைத்து விட்டு மெல்ல வினோத்தின் அறையை எட்டிப் பார்க்கத் தொடங்கினான். தனது முகத்தில் வெளிச்சம் அடிப்பதை உணர்ந்து கண் விழித்தான்... எழுந்தவுடன் குழப்பம் அடையத் தொடங்கினான்...
“எங்கே தவறு செய்தேன்...? எப்படி இது சாத்தியம்...” என்று புலம்பத் தொடங்கி இருந்தான்... மேஜையின் மேல் இருந்த புத்தகத்தை எடுத்து புரட்டத் தொடங்கினான்...

“மது விஷத்திற்குச் சமம்... அது மனிதனை மெல்ல மெல்ல அழித்து விடும்..” என்று எழுதப் பட்டிருப்பதை உரக்க படித்தான்...

ஒரு வேளை விஷத்தை விஷத்தால் முறிப்பது என்பது இது தானோ? ;-)...

பி.கு; இதே போல் சரக்கில் விஷம் பற்றிய ஒரு மொக்கைப் பதிவு அடுத்து வர இருக்கிறது... ;-)...

Saturday, February 13, 2010

இன்ஸ்பெக்டர் சுந்தர் - 1

இன்ஸ்பெக்டர் சுந்தரின் ஞாயிற்றுக் கிழமை அதிகாலைத் தூக்கத்தினை அவனின் கைப்பேசிக்கு வந்த அழைப்பு கலைத்திருந்தது.

“இன்ஸ்பெக்டர்...”

“எஸ். ஸ்பீக்கிங்”

“சார்... என்னோட பேரு ராஜ்... ராஜ் கன்ஸ்டரக்ஸன்னு ... உங்களுக்குத் தெரியும்”

“சொல்லுங்க ராஜ்... என்கிட்ட என்ன உதவி எதிர்பார்க்கிறீங்க?”

“எனக்கு ஒரே ஒரு பொண்ணு... பேரு ப்ரியா... அஞ்சு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன்... இன்னைக்கு காலையிலே..”

“மிஸ்டர்.ராஜ்.. . அழுகாம விசயத்துக்கு வாங்க”

“என்னோட பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டதா கால் வந்துச்சு... தற்கொலை செஞ்சுக்கிற அளவுக்கு என் பொண்ணு கோழை இல்லை சார்... இதுல ஏதோ மர்மம் இருக்கு... என் மாப்பிள்ளை மேல எனக்கு சந்தேகம் இருக்கு...”

“கண்டிப்பா விசாரிக்கிறேன்... அதுக்கு நீங்க ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்க வேணுமே? கொடுப்பீங்களா?”

“இப்பவே கொடுக்க நான் தயாரா இருக்கேன்...”

“சரி.. அப்ப உடனே பக்கத்தில இருக்கற போலிஸ் ஸ்டேஷனுக்குப் போயிட்டு கம்ப்ளைண்ட் ரிஜிஸ்டர் பண்ணுங்க... உங்களோட மாப்பிள்ளையின் நம்பர் கொடுக்கிறீங்களா?... ஒரு அரை மணி நேரத்தில நானும் நீங்களும் உங்க பொண்ணை பார்க்கிறதுக்குப் போக வேண்டியது இருக்கும்!”

“கம்பளைண்ட் கொடுத்திடறேன்... நம்பர் எழுதிக்கோங்க” எழுதி முடித்து விட்டு கைப்பேசியை அமைதியாக்கி விட்டு படுக்கையிலிருந்து எழுந்து கொண்டான்.

சில நிமிடங்களுக்குப் பின் ராஜ் கொடுத்த எண்களுக்குத் தொடர்பு கிடைத்திருந்தது.

“ஹலோ... யாரு ?”

“இன்ஸ்பெக்டர் சுந்தர்”

“சொ... ல்லுங்க...”

“உங்க வைப் டெத்ல உங்க மாமாவிற்கு சந்தேகம் இருக்கு... அதனால நாங்க விசாரிச்சு முடிக்கிற வரைக்கும் உங்க வீட்டில இருக்கிற எந்த பொருளையும் தொடவோ நகர்த்தவோ வேண்டாம்... டூ யூ அன்டர்ஸ்டன்ட்?”

“எஸ்... ஸார்...”

அடுத்த அரை மணி நேரத்தில் இன்ஸ்பெக்டர் சுந்தர், ராஜ் மற்றும் சுந்தரின் அசிஸ்டென்ட் சிவா அனைவரும் மடிப்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த அப்பார்ட்மெண்டில் ஆஜராகியிருந்தனர். இரண்டு படுக்கை அறைகளைக் கொண்டு பளிங்கு கற்களினால் ஆன தரையில் ‘வெல்கம்’ என்று எழுதப்பட்டிருந்த மிதியடி அவர்களை வரவேற்றது. உள்ளே நுழைந்தவுடன் ஆறடி உயரத்தில் அஜானுபாகுவாக இருந்த ஒரு மனிதர் கண்ணீருடன் நின்று கொண்டு இருந்தார்.

“இவர் தான் என்னுடைய மாப்பிள்ளை பாலாஜி...” வேறு பக்கத்தில் இருந்த தனது பார்வையை பாலாஜியின் பக்கம் திரும்பி ”ஐ ம் வெரி ஸாரி டூ டிஸ்டர்ப் யூ அட் திஸ் மொமன்ட்... ஹோப் யூ அன்டர்ஸ்டென்ட் தேட் இட்ஸ் மை ட்யூட்டி” சுந்தர் சொல்லி முடிக்க “இட்ஸ் ஓ.கே இன்ஸ்பெக்டர் .. ப்ளீஸ் கேரி ஆன்..” பதிலளித்த படியே ப்ரியா இறந்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றான் . அந்த அறையின் மையத்தில் இருந்த மின்விசிறியில் இருந்து கீழ் நோக்கி வந்த கயிற்றில் அவளது கழுத்து இறுக்கப் பட்டு தொங்கிக் கொண்டிருந்தாள். “நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் ஒதுங்கி இருந்திங்கன்னா எங்களோட வேலையை ஆரம்பித்து விடுவோம்” பதிலுக்குக் காத்திருக்காமல் ப்ரியா தொங்கிக் கொண்டு இருந்ததை உற்று நோக்கத் தொடங்கினார். சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கிருந்த மேஜைகளின் அறைகள் ஒவ்வொன்றாக திறந்து பார்க்க ஆரம்பித்தார். பிறகு அங்கு தொங்கிக் கொண்டிருந்த அழுக்குத் துணிகளை நோட்டமிட்டு விட்டு “கொஞ்சம் வெளிய வர்றீங்களா பாலாஜி... சிவா... போஸ்ட் மார்ட்டத்திற்கு ஏற்பாடு பண்ணிட்டு முன்னாடி வந்து சேரு...”

வெளியேறும் பொழுது செய்தி அறிந்து சொந்த பந்தங்கள் குழுமத் தொடங்கி இருந்தனர்.

“பாலாஜி... உங்களுக்கும் ப்ரியாவிற்கும் கல்யாணமாகி எவ்வளவு நாளாச்சு?”

“ஒரு அஞ்சு மாசம் இருக்கும் சார்”

“ப்ரியாவோட சாவிற்கு என்ன காரணமா இருக்கும்னு நினைக்கிறீங்க?”

“தெரியலை சார்.. எங்களுக்கிடேயே எந்த ஒரு பிரச்சினையும் இது வரைக்கும் இருந்ததில்லை!”

“சரி ... நீங்க எப்ப விசயத்தை தெரிஞ்சிக்கிட்டீங்க?”

“நான்.. பெங்களூரு போயிட்டு இன்னைக்கு காலைல தான் திரும்பி வந்தேன்...வந்த உடனே தெரிய வந்துச்சு”

“எப்ப பெங்களூர் போனீங்க?”

“நேத்து காலைல”

“என்ன விசயத்துக்காக?”

“எங்க கம்பெனியோட ப்ராஞ்ச் ஒன்னுல ஆடிட் ஒர்க்.... அதான்..”

“அடிக்கடி போவீங்களா?”

“மாசத்துக்கு ஒரு தடவையாவது கண்டிப்பா போக வேணும்... ”

“அங்க உங்க கன்டாக்ட் நம்பர் கிடைக்குமா?”

“தர்றேன்” சிவா குறித்துக் கொண்டான்.

“உங்க கார்ல தான் போயிட்டு வருவீங்களா?”

“ஆமா... என்னுடைய கார்ல தான் போயிட்டு வந்தேன்”

“ஆல்ரைட்... உங்களோட க்ரெடிட் கார்டு யூஸ் பண்ணிதான் பெட்ரோல் போடூவீங்க இல்லையா...?”

“ஆமா...”

“சிவா.. இந்த கார்டு நம்பரை நோட் பண்ணிக்கோ... அப்புறம்.. பாலாஜி.. பெங்களூரு போகும் போது நிறைய ட்ரெஸஸ் எடுத்துட்டு போவீங்களோ?”

“இல்லை சார்... என்ன ட்ரெஸ் போட்டுட்டு போறேனோ அதோட திரும்பி வந்துடுவேன்... அங்க தங்கிறது என்னோட பழக்கம் இல்லை...”

“கடைசியா ஒரு கேளவி... உங்க படுக்கை அறை அலமாரியில் தூக்க மாத்திரைகளைப் பார்த்தேன்...”

“ப்ரியா தான் சார் யூஸ் பண்ணுவா... அடிக்கடி டிப்பரஷன் ஆயிடுவா...”

“ஒ.கே. பாலாஜி.. இன்னும் ஒரு இரண்டு மணி நேரத்தில மீண்டும் சந்திப்போம்... போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்த பிறகு மேலும் சில கேள்விகள் இருக்கு...”

ஞாயிற்றுக் கிழமை மதியத்திற்கு மேல் திரும்பவும் பாலாஜியின் வீட்டிற்கு சுந்தரும் சிவாவும் வந்திருந்தனர்.

“பாலாஜி... ”

“போலாமா?”

“சார்... ”

“உங்க மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக உங்களை நான் கைது செய்றேன்”

“அபாண்டமான பொய்... என்னுடைய மாமா எதுக்காகவோ என்னைய பழி வாங்க பார்க்கிறாரு... ”

“எங்ககிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு... நீங்களா ஒத்துக்கிறிங்களா... இல்லை ... ஆதாரத்தைத் தெரிஞ்சிக்கிட்டதுக்கு அப்புறம் ஒப்புக்கிறிங்களா?”

“நீங்க என்ன வேணுமென்றாலும் சொல்லுங்கள்.... எனக்கும் ப்ரியாவின் சாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...”

“இருக்கு.. சம்பந்தம் இருக்கு” சுந்தரின் பதிலைக் கேட்டு பேச்சை நிறுத்திக் கொண்டான் பாலாஜி.

“நேத்தைக்கு நீங்க பெங்களூருக்கே போகலை... இன்பாக்ட்... நீங்க சென்னையில தான் இருந்திருக்கிங்க... ஹோட்டல் ப்ளூ மூன்... ரூம் நம்பர் 113...”

“பொ....ய்...” பாலாஜிக்கு வியர்த்து ஊற்றத் தொடங்கி இருந்தது.

“எல்லாம் உங்களோட கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்ல இருந்து நாங்க ஸ்மெல் பண்ணது தான்... நேத்தைக்கு சென்னையில பெட்ரோல் நிரப்புன நீங்க... அதுக்குப் பிறகு நிரப்பவே இல்லை... கண்டிப்பா ... இத ஒரு ஆதாரமா காட்ட முடியாது.. ரொம்ப ஈஸியா உடைச்சிருவீங்க... மூன்று வாரத்திற்கு முன்பு உங்களோட காரை சரி பண்றதுக்கு நீங்க இன்ஸ்யூரன்ஸ் க்ளைம் பண்ணி இருந்திருக்கீங்க... கொடுக்க வேண்டிய மீதப் பணத்திற்கு உங்களோட கிரெடிட் கார்டை யூஸ் பண்ணியிருக்கீங்க... ஹெவியா டேமேஜ் ஆனதுனால இந்த கார்ல ரொம்ப தூரத்திற்கு ட்ரைவ் பண்ண முடியாதுன்னு உங்களுக்கு அட்வைஸ் கொடுக்கப் பட்டிருக்கு... அப்படியே ஓட்டினாலும் கோளாறாக நிறைய வாய்ப்பு இருக்கு... ஸோ... நீங்க இந்த கார் பெங்களூரு போகலை... சுங்கசாவடியிலும் இந்த காரோட நம்பர் ரிஜிஸ்டர் ஆகலை... இதையும் ஈஸியா உடைக்க முடியும்... பண்ண ஒரே தப்பு... எப்பவும் போயி தங்கற ஹோட்டல்ல தங்கினது தான்... எல்லாத்துக்கும் மேல தூக்க மாத்திரையை வைத்தே தற்கொலைக்கு முயற்சி செஞ்சிருக்கலாம் இல்லை... நேத்தைக்கு அவங்க தூக்க மாத்திரை சாப்பிடலைன்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது... இதுக்கு மேலேயும் என்கிட்ட எதிர்பார்க்கிறீங்களா..?”

“சார்... நான் மாட்டிக்கிட்டேன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு... ப்ரியாவை அவளோட சொத்துக்காகத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்கிறத அவ கண்டுபிடிச்சுட்டா... டைவர்ஸ் பண்ணிட்டா எனக்குப் பைசா கிடைக்காது... ஒரு அவசரத்தில அவளைக் கொன்னுட்டதால என்னால ப்ராப்பரா ப்ளான் பண்ண முடியாம போகிடுச்சு... என் மேல உங்களுக்கு எப்படி சந்தேகம் வந்துச்சு...?”

“சிம்பிள்... ப்ரியா தொங்கவிடப்பட்டதில் இருந்தே அவள் தற்கொலை செய்து கொண்டு இருக்க முடியாது என்று சந்தேகப் பட்டேன்... போதாக் குறைக்கு தூக்க மாத்திரை வேறு கண்ணில் பட்டு விட்டது... தூக்க மாத்திரை இருக்கும் பொழுது எதற்கு தூக்குக் கயிறு...? நீ போட்டிருந்த ட்ரெஸ்ல அயன் பண்ணின வாசனை ப்ரெஸ்ஸா இருந்துச்சு... இது போதும்னு நினைக்கிறேன்... போலாமா?”

இது வரை ஊருக்காக அழுது கொண்டிருந்த பாலாஜி.. மாட்டிக் கொண்டதற்காக அழத் தொடங்கியிருந்தான்...!

Tuesday, February 9, 2010

யாருக்குத் தெரியும்...?

கதிரும் ப்ரியாவும் படுக்கையில் இருந்து எழுந்து கொள்வதற்கு முன்பே ஆதவன் கிழக்கே விழித்திருந்தான். கதிருக்கும் ப்ரியாவுக்கும் திருமணம் நடந்து ஏறக்குறைய ஒரு வருடம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. பெற்றோர்களின் ஆசிர்வாத்தில் அரை மனையில் தனது வீட்டையும், வீட்டிற்கு முன்பாக அரை மனை இடத்தில் தோட்டமும் கார் நிறுத்துவதற்கான இடமும் கிடைக்கப் பெற்றிருந்தான். வீட்டை சுற்றிலும் சுவர்கள் எழுப்பப் பட்டிருந்தன. வீட்டின் நுழைவுவாயிலை நகரும் இரும்புக் கதவு பாதுகாத்துக் கொண்டு இருந்தது. தோட்டம் இரும்புக் கதவிலிருந்தே ஆரம்பித்து இருந்தது. புற்களின் உயரம் சீராக்கப் பட்டிருந்தது. அழகுச் செடிகள் தோட்டம் முழுவதும் வியாபித்திருந்தன.

தோட்டத்திற்கு தேவையான உணவை கதிர் வழங்கிக் கொண்டிருக்க கதிருக்கான காலை உணவை ப்ரியா தயார் செய்து கொண்டு இருந்தாள். இவர்களின் அன்றாட நடவடிக்கைகள் அவர்களுக்குப் புதிதாய் இல்லாவிட்டாலும் வீட்டிற்கு எதிர்புறம் அமைந்திருந்த நாயர் டீக்கடையில் அமர்ந்திருந்த இரு கண்களுக்குப் புதிதாய் தெரிந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் கதிர் தனது அலுவலகத்திற்குக் கிளம்பினான். வழக்கம் போல ப்ரியா வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள். கதிர் சென்றவுடன் இரும்புக் கதவை மறுபடியும் பூட்டிவிட்டு உள்ளே சென்றாள். அவர்கள் இருவரும் வாசலில் பேசிக் கொண்டது முதல் கதிர் கிளம்பிச் செல்வது வரை பார்த்துக் கொண்டிருந்த அந்த இரு கண்கள் கதிரின் வீட்டை நெருங்க ஆரம்பித்தன.

மிக அநாயசமாகத் தெருவைக் கடந்து கதிரின் வீட்டு வாயிலை நெருங்கினான். இரும்புக் கதவின் குரல்வளையை நெறித்துக் கொண்டே திறந்ததால் அது வழக்கம் போல் போடும் க்ரீச் சத்தம் மிஸ்ஸிங்... மெல்ல அடி மேல் அடி வைத்து இரு புறங்களிலும் புற்களால் சூழப்பட்ட அந்த பாதையில் முன்னேறியது... வீட்டின் கதவை தனது இரண்டு விரல்களால் மெல்லத் தட்டியது... கதவு திறக்கப் படவில்லை... இம்முறை அழைப்பு மணியை உபயோகித்தான்... பிரயோஜனப் பட்டது...

“யாரு...?” ப்ரியா கதவை திறந்து கொண்டே கேட்டாள்...

“நான் தான்...” பற்கள் முழுவதும் வெளித் தெரிந்தது.

“என்ன இந்த நேரத்தில?”

“முதலாளியைப் பார்க்கலாம்னு...”

“இப்பதான் கிளம்பிப் போனாரு..”

“அப்ப நான் சாயங்காலம் வரேன்... “

“முக்கியமான விசயமா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை!.. கொஞ்சம் தண்ணீ கொடுக்கிறிங்களா?”

“இரு.. கொண்டு வர்றேன்...” ப்ரியா உள்ளே சென்றாள்...

அந்த உருவம் வேக வேகமாக செயல் படத் தொடங்கியது.. அருகில் இருந்த படுக்கையறைக்குள் நுழைந்து எதையோத் தேடத் தொடங்கினான்... ஒரு சில நொடிகளுக்குள் உடம்பில் இருந்து வியர்வை அருவி அவனை முழுவதுமாக நனைத்திருந்தது... சற்று நேரத்திற்கெல்லாம் தேடுவதை விட்டு விட்டு வேக வேகமாக வாசலை நோக்கி வந்தான்... ஆனால் எது நடக்கக் கூடாது என்று நினைத்தானோ அது நடந்து விட்டது... அவன் படுக்கையறையில் இருந்து வெளியே வருவதை ப்ரியா பார்த்து விட்டாள்... ஏற்கனவே வியர்வை மழையில் நனைந்திருந்த அவனுக்கு கை கால்களில் சிறிது நடுக்கம் ஏற்படத் தொடங்கியது...

“என்ன தேடுற...?”

“அது வந்து...”

“உண்மையைச் சொல்லு... இல்லை...”

“எனக்கு சொந்தமான ஒன்னு ... காணாப் போச்சு.. அதான்...”

“அது எப்படி படுக்கை அறைக்குள்ளாற வந்துச்சு... பொய் சொல்லாத...”

“உண்மையைத் தான் சொல்றேன்...” மிக மிகப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்...

சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ப்ரியா திடிரென்று கல கல வென்று சிரிக்க ஆரம்பித்தாள்... அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை... “இப்படி இரு.. தண்ணியைக் குடி..” சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்... அவன் தண்ணீரைக் குடித்து விட்டு ப்ரியாவின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினான். சற்று நேரத்திற்கெல்லாம் ப்ரியா கையில் ஒரு காகித்ததுடன் வந்து சேர்ந்தாள்...

“இந்தா.. இது தானே?”

“ஆமா...” பற்கள் முப்பத்திரண்டையும் காட்டினான்...

“ஒழுங்கா கேட்க வேண்டியது தானே?”

“யாருக்கும் தெரிய வேண்டாம்னு பார்த்தேன்... அதான்...”

“இத மட்டும் நான் பார்த்து எடுத்து வைக்கலேன்னா... நீ திருட வந்ததா அர்த்தம் ஆகியிருக்கும்”

“மன்னிச்சிருங்க... நேத்தைக்கு ஃபேன் மாட்ட வந்தப்ப இது தவறியிருக்கலாம்னு நான் நினைச்சேன்.. அதான் வந்தேன்... தேடினேன்.. மாட்டிக் கிட்டேன்... நீங்க இந்த லெட்டரை...”

“ஆல் த பெஸ்ட்...!”

சிரித்துக் கொண்டே வெளியேறினான் அவன்.... யாருக்குத் தெரியும் அந்த லெட்டரில் என்ன இருக்கும்னு...? ஆமா... அப்படி என்னதான் இருக்கும்... யாராவது ப்ரியாவிடமோ அல்லது அவனிடமோ கேட்டுச் சொல்லுங்களேன்...

Sunday, February 7, 2010

நாற்சந்தி...!

ஏறக்குறைய ஒரு இரண்டரை வருடங்கள் கண்டிப்பாக கடந்திருக்கும்... புதிதாக குழுமத்தில் சேர்க்கப் பட்டிருந்தான்... நிரம்ப பயிற்சிகள் கொடுக்கப் பட்டன... ஒன்றிரண்டு பேச்சு வார்த்தைகள் மட்டுமே இருந்தன அவனிடமிருந்து... ஆனால் எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்கும் அவனை எனக்கு நிரம்பவே பிடித்திருந்தது... ஒரு சில நேரங்களில் அவனுடன் சேர்ந்து வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... ஏதோ ஒரு இனம் புரியாத வேகம் அவனிடம் இருப்பதை உணர்ந்து கொண்டேன்... அப்பொழுதெல்லாம் குழுமத்தில் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பது என்பதே அரிதாகத் தான் இருந்தது... புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பதால் கிடைக்கும் ஒன்றிரண்டு வாய்ப்புகளைக் கொண்டு நிறுபித்தாக வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருந்து வந்தது... அது ஒரு புறம் இருந்தாலும் வேலையை கண்ணும் கருத்துமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சற்று தூக்கலாகவே காணப்பட்டது...

என்னைப் பற்றி பெருமை பீற்றிக் கொள்கிறேன் என்றோ அவனுடன் என்னை ஒப்பிட்டுக் கொள்கிறேன் என்றோ தயைகூர்ந்து நினைக்க வேண்டாம்... சில நேரங்களில் என் மனது நேரிடையாக மனித உருவம் பெற்றாற் போல் தோன்றும் அவனைக் காணும் பொழுது... கடின உழைப்பு.... பிறருக்குத் தேவைப்படும் பொழுது உதவுவது... உதவி பெற்றவர் பின்னால் வேறொர் சமயத்தில் முதுகில் குத்தி விட்டதை எண்ணிப் புலம்புவது.... என் துன்ப நிமிடங்களில் என் நண்பர்களிடம் நான் என்னை முழுவதுமாக அர்ப்பணித்து விடுவது உண்டு... சிலர் அறிவுரைகளினாலும்.... சிலர் அடிகளினாலும்... சிலர் கெட்ட வார்த்தைகளாலும் என்னை மீட்டெடுப்பது வழக்கம்... இவனைப் பொறுத்தவரை கலாய்ப்பதில் மீட்டெடுப்பது...

காற்றில் கரைந்து போன சென்ற வருடத்தின் ஆரம்ப நாட்களில் என் புஜ பல பராக்கிரமங்களைக் கண்டு ... இவன் என்ன அடி அடிச்சாலும் தாங்குவான்.. ரொம்ப நல்ல...வன்... அப்படின்னு நம்பி புதியதொரு குழுமத்தில் என்னை சேர்த்திருந்தார்கள்... எனது பழைய குழமத்தில் நிறைய நண்பர்களுக்கு வேலை ஊசலாடிக் கொண்டு இருந்தது.. மனதிற்கு கவலையாக இருந்தது... சில பல மாதங்கள் கழித்து ஒவ்வொருவராக குழுவிற்கு உள்ளே வர ஆரம்பித்தனர். என் குரு ஸ்தானத்தில் இருந்தவரை பிரிய நேரிட்டது... சற்று வருத்தம்... முக்கியமான நண்பர்களை வேறொர் குழுமத்திற்கு தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டு இருந்தனர்... இந்த சிறு பிள்ளையால் என்ன செய்து விட முடியும்... பிரிவுத் துயரமும் கடந்த கால பசுமை நினைவுகளும் சேர்ந்து என்னை வாட்டத் தொடங்கின... ஒரு சிறு ஆறுதலாக ஒன்றிரண்டு தெரிந்த முகங்கள் என் குழுமத்தில் சேர்த்து விடப் பட்டனர்...

மனதிற்கு சற்று ஆறுதல் கிடைத்தது... என் சகோதரியாக நினைத்துப் பழகி வரும் ஒருவரை என்னுடன் சேர்த்து வைத்துப் பேசும் பழக்கம் சில பெரிய மனிதர்களிடம் இருந்து வந்தது... ஒரு சமயம் அவளின் வருகையினை என்னிடம் நக்கலாகத் தெரிவித்து சிரித்த சில பெரிய மனிதர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்... மன்னித்து விட்டேன்... இயலாமையால் அல்ல... திருந்துவதனாலோ.. திருத்தப் படுவதாலோ .. எந்த பிரயோஜனமும் இல்லை.... நாம் வேறு பாதையை நோக்கிப் பயணப் பட்டு விட்டோம் என்று நினைக்கிறேன்... திரும்ப வருவோம்.. அப்படி கடைசியாக சேர்க்கப் பட்ட நண்பர்களில் ஒருவனாக அவனும் வந்து சேர்ந்தான்... ஆரம்ப நாட்களில் பயிற்சி வகுப்புகளிலேயே காலத்தை ஒப்பேற்ற வேண்டிய சூழ்நிலை... கூர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தேன்... இம்முறையும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில் தான் இருந்தேன்...

சில நாட்களுக்குப் பிறகு அவனுக்கு மிக அருகிலேயே அமரும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது... ஆரம்ப நாட்களில் சிறிது சிரம பட்டிருந்தாலும் பிறகு ஜெட் வேகம் தான்... அலுவலகத்தின் இரவுகள் நீண்டிருந்தன... தடைகள் ஒவ்வொன்றாக உடைக்கப் பட்டுக் கொண்டு இருந்தன... மகிழ்ச்சியடைந்தேன்... பல சமயங்களில் என் வேலை பளுவுக்கும் சேர்த்து தோள் கொடுக்கத் தொடங்கினான்... தவிர்க்க முடிய வில்லை... ஏற்றுக் கொண்டேன்.... என் சோகம் தாங்காமல் அவனும் சரக்கு அடித்தது இன்றும் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது... இப்படி எத்தனையோ எழுதிக் கொண்டே போகலாம்... மிக உயர்ந்த சிகரங்களின் உச்சிகள் அவனின் காலடித் தடத்திற்கு காத்துக் கொண்டு இருக்கின்றன... நிச்சயம் ஒரு நாள் அந்த உயரங்களை அநாயசமாகத் தொடுவான்... எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பான் என்றே நம்புகிறேன்...

அடுத்த நொடி தன்னுள் ஒளித்து வைத்திருக்கும ஆச்சரியங்கள் ஏராளம் என்று சொன்ன அன்பே சிவம் நினைவிற்கு வருகிறது... ஆச்சரியங்கள் மட்டும் அல்ல... பிரிவுகளின் வலியும் சேர்த்து தான்... எத்தனையோ தடவை என் நண்பர்களைப் பிரியும் கட்டாய நிமிடங்களை சந்தித்து இருக்கிறேன்... இதில் ஏதோ சிறப்பு இருப்பதாகவே எனக்குப் படுகிறது... எனது நண்பர்களுடனான வாழ்க்கைப் பயணம் ஒரு நாற்சந்தியில் பிரிந்து போய்விடும் சாதாரண பயணத்தைப் போல் இருக்கக் கூடாது என்றே விரும்புகிறேன்...

யோசித்தாகி விட்டது ... மனது வேறு பணிகளில் செல்ல மறுக்கிறது... சரியாகி விடும்.. பிரிவுகள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு என்பது இந்த மரமண்டைக்கு எப்பொழுதுதான் உரைக்கப் போகிறதோ .... யதார்த்தமாக திரும்புகிறேன்... தம்பியின் இடம் முழுவதும் வெறுமை நிரம்பி இருக்கிறது... என் மனதினைப் போல....!

Saturday, February 6, 2010

முற்பகல் செய்யின்...!

நகரத்தின் மையத்தில் இருந்த மணிக்கூண்டு பத்து நிமிடத்திற்கு முன் இரண்டு தடவை மணி அடித்து ஓய்ந்து இருந்தது. ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த பங்களாவின் சுற்றுச் சுவரை ஒரு கரிய உருவம் அநாயசமாக தாவிக் குதித்தது. மிக்க கவனத்துடன் சப்தம் எதுவும் எழுப்பாமல் மெல்லமாக முன்னேறியது. கன்றுக் குட்டியின் அளவிற்கு வளர்ந்திருந்த அந்த வீட்டின் காவல் நாய் அந்த கரிய உருவத்தின் வருகையை அறியாமல் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தது. நாயைப் பார்த்து அந்த கரிய உருவம் ஒரு நொடி திகைத்தாலும் பின்பு ஏதோ யோசித்தவாறே வீட்டின் பக்கப் பகுதியில் மேலிருந்து கீழ்நோக்கி வந்த ஒரு குழாயினைப் பிடித்து விறுவிறுவென்று ஏறத் தொடங்கியது. முதல் மாடியில் இறங்கிய அந்த கரிய உருவம் பூனை போல் மெல்லமாக நடந்து பூட்டியிருந்த ஒரு அறையின் கதவை சப்தமில்லாமல் உறை அணிந்திருந்த கையினால் திறந்தது.

எந்தவித எதிர்ப்பும் செய்யாமல் அந்த கதவு தானாகவே திறந்து கொண்டது. கதவிலிருந்து ஒரு ஐந்து அடி தூரத்தில் போர்வைக்குள் உறங்கி கொண்டு இருந்தது ஒரு உருவம். கரிய உருவம் மெல்ல உறங்கிக் கொண்டு இருந்தவனை நெருங்கி முகத்தை மூடி இருந்த போர்வையை விலக்கியது. தூக்கத்தில் இருந்தவன் தூக்கத்திலேயே இருந்தான். கரிய உருவம் அவனை எழுப்ப முயற்சித்து தோற்றது. சிறிது நேரம் கழித்து அருகில் இருந்த மற்றொரு தலையனையை எடுத்து தூங்கிக் கொண்டு இருந்தவனின் முகத்தை மறைத்தது. ஏறக்குறைய ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து வந்த பாதையிலேயே யாருக்கும் சந்தேகம் வராமல் கிளம்பிச் சென்றது.

நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு தனது இருப்பிடத்தை அடைந்த அந்த கரிய உருவம் உடைகளைக் களைந்து விட்டு தனது படுக்கையில் விழுந்தது. அந்த கரிய உருவம் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் பொழுது மதிய நேரமாகி இருந்தது. குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பிரட்டில் வெண்ணையைத் தடவி ருசிக்கத் தொடங்கினான். ஒரு சில நிமிடங்கள் கழித்து தனது கைப்பேசியில் இருந்த எண்களை முறை வைத்து அழுத்தினான்.

“பிரபு சார்...”

“ரகு... சூப்பர்... பேப்பர்ல பார்த்துட்டேன்... எப்படி முடிச்ச...?”

“சிம்பிள்... அன்று இரவு ராஜா அருந்திய பாலில் தூக்க மாத்திரை கலந்து விட்டேன்... சுற்றுச் சுவரின் ஒரு பகுதியை ஒட்டியே சமையலறை அமைந்து இருந்தது மிகவும் உபயோகப் பட்டது.... நாய்க்கும் அதே ட்ரிட்மென்ட்.... ராஜா தூக்க மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததால் எந்த சந்தேகமும் வராது...”

“சூப்பர்...”

“சார் மீதப் பணம் ....”

“மாரடைப்புதான்னு பேப்பர்ல போட்டிருக்கு... இருந்தாலும் போலிஸோட கண்கள் என் மேல இருக்கு... அதனால...”

“அதனால..”

“இன்னும் ஒரு பத்து நாள் போகட்டும்.. உன் பணம் என்கிட்ட பத்திரமா இருக்கு...”

“சார்.. அது வந்து...”

“நம்புப்பா..”

பதிலுக்குக் காத்திராமல் கைப்பேசியைத் தூங்கச் செய்த பிரபு இன்று இரவுக்குப் பின் பணம் கேட்பதற்கு ரகு இருக்க மாட்டான் என்று நினைத்து தனக்குள் வில்லத்தனமாக சிரித்துக் கொண்டான். அடுத்த முனையில் இருந்த ரகுவின் முகம் வாடத் தொடங்கியது.

தனது பசியினைத் தீர்த்துக் கொண்ட ரகு எப்பொழுதும் போல் தனக்கு விருப்பமான சரக்கினை எடுத்துக் குடிக்க ஆரம்பித்த பொழுது பிரபு தனக்கு வெளிநாட்டில் இருந்து தருவித்துக் கொடுத்த ஸ்காட்ச் விஸ்கி ஞாபகத்திற்கு வர ஆரம்பித்தது. முந்தைய நாள் தனது வேலைக்கு பணம் கொடுக்கையில் இந்த சரக்கையும் சேர்த்துக் கொடுத்திருந்தான். தனக்கு சரக்கின் மேல் இருக்கும் அதீத ஆசை பிரபுவுக்கு நன்றாகவே தெரியும் என்று யோசித்தவாறே புதிய சரக்கைத் திறந்து குடிக்க ஆரம்பித்தான்.

வேலை நேரம் முடிந்து பிரபு வீட்டை நோக்கி தனது காரில் கிளம்ப ஆரம்பித்தான். காரினுள் இசை அதிர்ந்து கொண்டு இருந்தது. அதே நேரம் குடிபோதையின் உச்சத்தில் இருந்த ரகு தனக்குள் பேசிக் கொண்டிருந்தான். “ராஜாவை போடுறதுக்கு ஐந்து லட்சம் முன்பணம் பிரபு கொடுத்திருந்தான். மீதம் ஐந்து லட்சம்!. பிரபுவைக் கொல்றதுக்கு ராஜா பத்து லட்சம் கொடுத்து இருந்தான். சரி.. ஒரு ஐந்து லட்சம் லாஸ்... எப்படியோ இந்த பயல்களின் தொழில் போட்டியினால் நமக்கு பதினைந்து லட்சம் சம்பாத்தியம்...இன்னைக்கே கொடுத்திருவான்னு நினைச்சேன்... அவன் விதி....நான் கார்ல வைச்சிருந்த பாம்ல செத்துப் போகப் போறான்.... ஹா....ஹா... “ என்று பலமாக சிரிக்கத் தொடங்கினான்.... அவனின் சிரிப்பினால் அந்த அறையே அதிர்ந்தது. சிரித்துக் கொண்டு இருந்தவனின் வாயில் இருந்து சிறிது சிறிதாக நுரை வெளியே எட்டிப் பார்க்க ஆரம்பித்தது...!