Thursday, September 24, 2009

பவர்ஃபுல் ஐஸ்

அதே கண்கள் அப்படின்னு ஒரு படம் - சின்ன வயசில பார்த்தது. சந்தேகத்தின் பேரில் சிலரை வரிசையில் நிற்க வைத்து முகத்தினை துணியால் மூடி கண்கள் மட்டும் தெரியும் படி பார்ப்பார் ரவிச்சந்திரன். வில்லனுடைய கண்கள் மட்டும் பளிச்சென்று (எல்லாம் லைட் தான்) தெரியும். அட நம்ம சந்திரமுகி எடுத்துக்கோங்க அதுல ஜோ வோட கண்கள் எவ்வளவு பளிச்சென்று காட்டினார்கள்... இப்படி எவ்வளவோ உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்... சரி இப்ப எதுக்கு இந்த உதாரணங்கள்...

இன்று நான் அப்படி இரு கண்களைப் பார்த்தேன்(அப்ப கண்ணாடி போட்டுக்கிட்டு இருந்தீங்களா சார்?)... அவ்வளவு பவர்ஃபுல் (எத்தனை பவர்?)... என்ன வென்று சொல்வேன்(சரி சொல்லாத!)? அத்தனை அழகு... அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு(வயசான காலத்தில இதெல்லாம் தேவையா?)... அந்த இரு கண்களும் என் கண்ணாடிக்குப் பின் இருந்த இரு கண்களும் (ரொம்ப முக்கியம்) ஒரு கணம் ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொண்டன(நேர் கோட்டின் நீளம் எவ்வளவுப்பா?)... என் உடம்பினுள் ஒரு மாற்றம் (வயிறு சரி இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருந்தியே அது தானா?)... ஒரு கணம் என்னை மறந்தேன்(எதைத்தான்பா நீ ஞாபகம் வைச்சிருக்க?)... ஒரு இரண்டு மணி நேரமா வேலை செய்ய முடியவில்லை (இல்லாட்டினாலும் வேலை செஞ்சு அப்படியே நிமித்திருவே பாரு).... அந்த கண்கள் மட்டும் ஞாபகத்தில் இருந்து கொண்டே இருந்தது....

ஒரு வேளை கண்களுக்கு சொந்தமானவர்களை எனக்கு பிடித்துப் போனதால் அவ்வளவு பவர்ஃபுல்லாக தெரிந்ததா? இல்லை .. கண்கள் அவ்வளவு பவர்ஃபுல்லாக இருந்ததால் எனக்கு அவர்களைப் பிடித்துப் போனதா?... என் இதயம் கவர்ந்து சென்று விட்டாளோ அந்த கள்ளி?... எனக்கானவள் இவள் தானோ? பகுத்தறிவு இப்பொழுது வேலை செய்ய மறுக்கின்றது... இது தான் காதலா? இன்னும் என்னுடைய மனம் பக்குவமடையவில்லை என்றே காட்டுகிறது...நடைமுறைக்கு ஒத்துவருமா என்றெல்லாம் யோசிக்க மறுக்கிறது... என்னதான் ஆகி விட்டது எனக்கு?

யோசனையோடு லைட் சுவிட்சை போட்டேன்...

‘ட்யூப் லைட் தனது உயிருக்காக போராடத் தொடங்கியது’

No comments:

Post a Comment