“என்னால ஏமாற்றத்தை தாங்கிக்க முடியலைடா மச்சி...” உடைந்து போன குரலில் இருந்தான் ராம்.
“மச்சி... இப்ப என்ன நடந்து போச்சுன்னு புலம்பிக்கிட்டிருக்கடா?” ராமைத் தேற்றும் முயற்சியில் ராஜ்.
“ஆயிரம் தான் இருந்தாலும் துரை அப்படி பண்ணியிருக்கக் கூடாதுடா... என் மனசில என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கிறதுக்காக வேண்டி மட்டும் என்னோட நண்பனா நடிச்சிருக்கான்டா!”
“என்னடா சொல்ற? துரைக்கும் உனக்கும் என்ன பிரச்சினை?”
“உனக்குத் தெரியாத விசயம் ஒன்னும் கிடையாதுடா... நான் ஜானகியைப் பார்த்த உடனேயே எனக்குப் பிடிச்சுப் போச்சு... ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராதுங்கற ஒரே காரணத்துக்காக நான் விலகிப் போயிட்டேன்... என் மேல எனக்கே பயம்.. பேசுறது கூட கிடையாதுடா... ”
“தெரியும்...!”
“ஆரம்பத்தில இருந்தே எனக்கும் அவளுக்குமான பிரச்சினைகளைப் பற்றியே பேசிக்கிட்டிருந்தானா... என் மனசுக்கு சந்தோசமா இருந்தது... நல்ல நண்பன்னு நினைச்சுட்டேன்டா... பயபுள்ள அவனும் ஜானகியை விரும்புறான்டா...”
“எதிர்பார்க்கலைடா...!”
“நான் எந்த எதிர்ப்பும் சொல்ல போறதில்லை... எதிர்த்து ஒன்னும் ஆகப் போறதும் இல்லை... முடிவு எடுக்க வேண்டியவனும் நான் கிடையாது... இப்படி எல்லாம் இருக்கும் பொழுது ஏன் என்கிட்ட இப்படி நடந்துட்டான்? நட்புங்கற உறவைக் கொச்சைப் படுத்திட்டான் மச்சி...”
“விடுடா... அவளுக்கும் பிடிச்சிருக்குன்னா சேர்ந்துட்டு போகட்டுமே...!”
“மச்சி.. நான் என்ன நந்தி மாதிரி குறுக்கவாடா நிக்கப் போறேன்? என் மனசில இருக்கிறத தெரிஞ்சிக்க நட்புங்கற உறவை ஒரு கருவியா பயன்படுத்துனது என் மனசை ரொம்ப பாதிச்சிருச்சு மச்சி... பச்சை துரோகம்...”
“நடந்தது நடந்து போச்சு மச்சி... வா சரக்கு அடிக்க போலாம்...”
“சரக்கு அடிக்கலாம்டா... அவனை ஏதாச்சும் பண்ணியாகனும்டா”
“டேய் ... என்னடா வில்லன் மாதிரி பேசுற?”
“ஆமாடா.. வில்லன் தான்... வில்லாதி வில்லன்...”
“மச்சி.. பயமா இருக்குடா.. என்ன பண்ணப் போற...”
“வர்ற வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு ஒரு சின்ன சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.... அந்த சந்திப்பின் போது ஒன்னு அவன் உயிரோட இருப்பான் இல்லை நான் உயிரோட இருப்பேன்... யார் உயிரோட இருக்காங்களோ அவங்க சிறைக்கு செல்லும் படி இருக்கும்”
“புரியலைடா...”
“மச்சி... இதோ பார் இரண்டு பாட்டில் சரக்கு.... இந்த இரண்டு பாட்டில்ல ஒன்னு எங்க இரண்டு பேரில யாராவது ஒருத்தரோட உயிரைப் பறிக்கப் போகுது... ஆமாடா.. ஒரு பாட்டில்ல விஷம் கலந்து வைச்சிருக்கேன்... சுவாரஸ்யம் என்னன்னா.. எந்த பாட்டில்ல விஷம் இருக்குன்னு எனக்கே தெரியாது...! ஸோ... யார் உயிரோட மிஞ்சியிருக்கோமோ அவங்க சிறைக்குப் போகிறது உறுதி... எப்படின்னா.. மற்றவனைக் கொன்றதுக்கான பழி அவன் மேல விழுந்துடும்...”
“நீ உயிரோட இருக்கிறன்னே வச்சிக்குவோம்... தேவையில்லாம ஜெயிலுக்குப் போக வேண்டி இருக்குமேடா...”
“சட்டப்படி எல்லாம் நடக்க வேணும்டா... நான் உயிரோட இருக்கிறேன்னா... என் நண்பனைக் கொன்றதுக்காக தண்டனையை அனுபவித்தே தீர வேணும்டா...”
“மச்சி... மன்னிச்சிரலாமே... உனக்குத் தான் தப்பு செஞ்சவங்களை மன்னிக்கிறது புதுசு இல்லையே?”
“இல்லை மச்சி... அவனைப் பார்க்கும் போது எல்லாம் என்னோட மனது வலிச்சுக்கிட்டே இருக்குது... அந்த வலிக்கு மருந்தே இல்லை... இப்பொழுதெல்லாம் மற்ற நண்பர்களையும் நான் சந்தேக கண் கொண்டு தான் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப் பட்டிருக்கேன்டா.. மரண வேதனை... இதனால நான் என்னோட மற்ற நண்பர்களுக்கு துரோகம் செஞ்சிக்கிட்டு இருக்கேன்டா...”
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை மச்சி... நல்லா யோசிச்சு முடிவு பண்ணுடா... நான் வர்றேன்”
அந்த சந்திப்புக்குப் பிறகு ஒரு அவசர வேலை காரணமாக ராஜ் பெங்களூரு வரை செல்ல வேண்டி வந்தது. ராமின் திட்டத்தை எல்லாம் மறந்தே போய் விட்டான். சனிக்கிழமை தனது வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது ராமின் திட்டம் நினைவுக்கு வர மொபைல் போனை எடுத்து ராமிற்கு தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தான்... எதிர்முனையில் பதிலே இல்லை... வேக வேகமாக எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் கொண்டு ஊர் திரும்பினான்.. நேராக ராமின் அப்பார்ட்மெண்ட்டிற்கு ராஜின் கார் சென்று கொண்டு இருந்தது... சற்று நேரத்தில் அவனுடைய இருப்பிடத்தை அடைந்து விடலாம் என்று யோசித்துக் கொண்டே திரும்பும் பொழுது ராமும் துரையும் வந்து கொண்டு இருந்தனர். ராஜிவிற்கு ஒரே ஆச்சர்யம்.. காரை ஓரம் கட்டி விட்டு இறங்கினான்.
“என்ன ராஜ்.. பெங்களூரு ட்ரிப் எல்லாம் எப்படி இருந்துச்சு?”
“நல்லா இருந்துச்சு துரை... நீ எப்படி இருக்க... என்ன இந்த பக்கம்?”
“நான் நேத்துல இருந்து ராமோட ரூம்ல தான் இருக்கேன்... நைட் சரக்கடிச்சிட்டு... இப்ப தான் எழுந்தோம்... சும்மா... அப்படியே கடற்கரை வரைக்கும் போயிட்டு வரலாம்னு.. நீயும் வாயேன்...”
ஒன்றுமே நடக்கலைன்னு தெரிந்தவுடன் ராஜ் நிம்மதி பெருமூச்சு விட்டான்... இருந்த போதிலும் நேற்று என்ன நடந்திருக்கும்னு தெரிஞ்சுக்க வேண்டிய ஆவல் நிறையவே இருந்தது அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.. ராமை ஏறிட்டு பார்த்தான்... அவன் வழக்கத்தை விட அதீத சந்தோஷத்தில் இருந்தான்... ராஜின் பார்வையை புரிந்து கொண்ட ராம் தனது சட்டை பையில் மடக்க முடியாமல் மடக்கி வைத்திருந்த பத்திரிக்கையை எடுத்து நீட்டினான்...
“நாளைக்கு உனக்குத் தர்றேன் சொல்லியிருக்கா... நேற்று காலையில தான் எங்க இரண்டு பேருக்கும் கிடைச்சுது...”
பிரித்துப் பார்த்த ராஜ்.. அதிர்ந்து போனான்.. ஜானகியின் திருமண பத்திரிக்கை தான் அது...! அந்த இடத்தில் சற்றென்று ஒரு வித இறுக்கம் அதிகரித்து மூவரும் பேசாது நின்றனர்...
“சேம் பிஞ்ச்.... சாக்லெட் கொடு... ” அருகில் விளையாடிக் கொண்டு இருந்த இரு குழந்தைகள் பேசிக் கொள்வது மூவரின் காதிலும் விழுந்தது... அதனைக் கேட்ட ராஜ் அர்த்தத்துடன் சிரிக்கத் தொடங்கினான்.... ராஜின் சிரிப்பில் ராமும் துரையும் சேர்ந்து கரையத் தொடங்கி இருந்தனர்...!
Saturday, February 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment