ஒரு மாதத்திற்கு முன்பு கால் பிசகியதால் உண்டான வலி! நீண்ட நேர அலுவல் காரணமாக முதுகு வலி! சிறுநீரக கல்லினால் வயிற்றில் உண்டான வலி! இத்தோடு தலைவலியும் உடல் வலியும்!! மொத்தத்தில் என்னை முடக்கிய ஒரு செவ்வாய்கிழமை!!!...
எத்தனை அறிவுரைகள், எத்தனை அன்பு உள்ளங்கள்!!! என்ன உபயோகம்? உதாசினப்படுத்தியதனால் வந்த விளைவா?? ஏன் இந்த வரட்டு பிடிவாதம்?? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா??
தம்மையும், தன் குடும்பத்தினரையும் பேணுதல் வேண்டித்தான் அனைவரும் வேலைக்கு செல்கிறோம் இல்லையா??. அப்படியென்றால் எனக்கு ஏன் இத்தனை பிரச்சினைகள்? எட்டு மணி நேரம் வேலை என்பது அலுவலக நியதி, அப்படியிருக்க எனக்கு மட்டும் ஏன் அதிக நேரம் எடுக்க வேண்டும்?
1. எனக்கு குறைந்த நேரத்தில் அதிகப்படியான வேலை கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்.
2. கொடுக்கப் பட்ட வேலை எனக்கு அறியாதவையாயிருக்க வேண்டும்.
மேற் சொன்ன இரண்டுமே இல்லை. எனக்கு வேலை அத்துப்படி என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒப்பேற்றும் அளவுக்குத் தெரியும். பின்ன என்னதான் பிரச்சினை??.
1. திட்டமிடுதல்
2. நுனிப் புல் மேய்வது.
3. அதீத கவனம்.
4. அடி பணிதல்.
என்னிடம் திட்டமிடுதல் இம்மியளவும் கிடையாது என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு வேலையை ஆரம்பிக்கும் முன் எந்த எந்த இடத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டும், வேலையை முடிப்பதற்கு உண்டான அனைத்தும் உள்ளனவா?, வேலையின் எந்த பகுதியில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்?, வேலைக்கு உள்ளீடு எது? வெளியீடு எது?, இவ்வாறு அனைத்தையும் தீர்மானித்து விட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும். ஒரு கட்டிடத்தை நிர்மாணிக்க திட்டமிடுதல் போல!
தனது குறிப்பேட்டில் ஒவ்வொரு படியையும் எழுதியபின் ஆரம்பிப்பதால் மிக எளிதாக தனது வேலையை தவறாமல் முடிக்க முடிவதாக நண்பனிடம் வினவிய போது தெரிவித்தான்.இந்த இடத்தில் ஒரு தடுமாற்றம் தவறாக திட்டமிட்டு விட்டால்? அடுத்த முறை திருத்திக் கொள்ள வேண்டியதுதான்!! வேறு என்ன செய்ய? திட்டமிடுதலுக்கென்றே நிறைய நூல்கள் உள்ளனவாம். எனக்கு இந்த இடத்திலும் பயம்... கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகி விடக் கூடாது.... அதனால் படிப்படியாக செல்ல திட்டமிட்டாக வேண்டும்... ஓஹோ திட்டமிடுதல் தொடங்கியாயிற்று!!
சரியாக புரிந்து கொள்ளாதது அல்லது புரிந்து கொண்டதை சரி பார்க்காமல் விடுவது, இவை எல்லாம் என் உடன் பிறந்தவை!... நுனிப் புல் மேய்வதற்கு மிக அருமையான உதாரணங்கள்!!!.. பிரமீடு கட்டச் சொன்னால் முக்கோண வடிவத்தில் ஏதோ கட்டி வைப்பது போல!!!...
தவறு இழைத்து விடக்கூடாது என்னும் அதீத கவனத்தினாலேயே தவறு இழைக்க வாய்ப்பு உண்டு. என்ன தவறு வர வாய்ப்பு உள்ளது என ஆராயாமல், தவறு ஏற்பட்டு விடக்கூடாது என்ற குறிக்கோளுடன் மட்டுமே இயங்குவதை உதாரணமாக கூறலாம். அதீத கவனத்தின் விளைவாக என்னுள் அழுத்தம் அதிகரிப்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன்.
என்ன வேலை கொடுத்தாலும் யோசனையின்றி ஒப்புக் கொள்வது என்னிடமுள்ள மிகப் பெரிய நோய்!!!... ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே உழைப்பதாய் முடிவெடுத்தால் இந்த பிரச்சினையைத் தீர்த்து விட முடியும் இல்லையா?? என்ன சம்பள உயர்வு கிடைக்காது. ஏன்? நல்ல புரிதலினாலும் நல்ல திட்டமிடுதலினாலும் அழுத்தமின்றி குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொடுக்கும் போது நமக்கான சம்பள உயர்வு தானாக தேடி வரும் இல்லையா??
-------------------------
என்னப்பா... நேத்தைக்கு லீவு?
உடம்பு சரி இல்லைங்க!!
இப்ப எப்படி இருக்கு?
பரவாயில்லைங்க!!
சரி!... பழைய வேலையில கொஞ்சந்தான பாக்கி இருக்கு?
ஆமாங்க!!
ஒரு புது வேலை வந்திருக்கு... மே பதினைஞ்சுக் குள்ள குடுக்கணும்... ஓகே வா???
ஓகேங்க!!!..
த்தா பாடு... உன்னைய திருத்தவே முடியாதுடா!!! ... நாயீ.... உனக்கு இன்னொரு செவ்வாயோ புதனோ காத்திருக்குடா... அப்படின்னு என் மன சாட்சி திட்டியது உங்க வரைக்கும் கேட்டிருக்கும்னு நான் நினைக்கவே இல்லீங்கோ!!!!..
Wednesday, April 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment