வேளச்சேரியில் வசித்த போது அவ்வப் போது அவளைக் காணும் பேறு கிடைக்கும். தண்ணீர் பிரச்சினையால் வேளச்சேரியை காலி செய்யும் நிர்பந்தம் வந்தது. வழக்கம் போல நண்பன் வீடு தேடும் பணியில்!!, அத்தனை தீவிரம் இல்லையென்றாலும் தேடுதல் நடந்து கொண்டிருந்தது.
ஒரு இனிய மாலை வேளை, அலுவல் முடிந்து வீடு திரும்பிய நேரம்...
‘திருவான்மியூர்ல பாத்திருந்த வீடு அக்டோபர்ல காலியாகுது’
‘போயிடலாம்!!’
‘நீ பார்க்கவே இல்லை..?? ஒ.கே வா??’
‘எனக்கு ஒ.கே.’
எப்படி சரின்னு சொல்லாம இருக்க முடியம்.. அவளுக்கு அருகில் போவதற்கு கசக்குமா என்ன???.... வந்த புதிதில் ஆர்வ மிகுதி காரணமாக அடிக்கடி அவளைப் பார்க்க முற்பட்டாலும் அதற்குப் பின்வந்த நாட்களில் எனக்கு சந்திக்கும் வாய்ப்பு அதிகம் வாய்க்கவேயில்லை.
வேளைப் பளு அவளை மறக்கவே செய்து விட்டது. போன வாரத்தில் ஒரு நாள் தனிமையில் அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த்து... சூரியன் தன்னை மேற்கில் மறைத்துக் கொள்ள தருணம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாலை வேளை!!! சூரிய கதிர்கள் அவள் உடம்பில் பட்டு பொன்னிறமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவள் மீதான என்னுடைய பார்வை மாறிக் கொண்டே வந்திருப்பது கண்கூடாக தெரிகிறது. ஆனால் அவளின் பார்வை ஒரே மாதிரியாகத் தான் இருந்து வந்திருக்கிறது.
அவள் என்னைத் தொட வரும் போது நான் விலகி ஒடுவதும், நான் அவளைத் தொடப் போகும் போது நானே மறுத்து விலகி ஒடுவதுமாய் விளையாடிய நாட்கள் இன்றும் நினைவில் உள்ளது. ஆனால் இப்பொழுதெல்லாம் சிறிது தொலைவில் அமர்ந்து கொண்டு அவளைக் கண்கொட்டாமல் பார்க்கும் மௌன நிமிடங்களாகவே நேரம் கரைகிறது.
அந்த மௌன நிமிடங்களில் என்னை நான் மறந்திருந்ததை பிற்பாடு உணர்ந்து கொண்டேன். என்னையே மறக்க செய்யும் கவர்ச்சி அவளிடம் பொதிந்து கிடக்கிறது. அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மௌன நிமிடங்கள் நீண்டு ஒரு யுகமாகிறது.
மௌன நிமிடங்கள் தொடரட்டும்;
No comments:
Post a Comment