Thursday, October 29, 2009

கனவு

‘வேற ஃபோட்டோ கொடுங்க’

‘என்ன பிரச்சினை?’

‘தலை பெரிசா இருக்கணும்’

‘பெரிசாத்தானாங்க இருக்கு’

‘ஃபோட்டாவில இருக்கணும்’

‘இங்க இருக்கிறதுதான அங்க இருக்குது...’

‘சார்... இந்தப் படத்தைப் பாருங்க.. பாஸ்போர்ட் போட்டாதான் ஆனால் தலையை மட்டும் ஃபோக்கஸ் பண்ணியிருக்காங்க பாருங்க..’

‘கரெக்ட்.. மற்றவங்களை விட எனக்கு தலை பெரிசு.. அதனால தனி போக்கஸ் தேவையில்லைன்னு நினைக்கிறேன்’

‘அனுப்பிடுறேன்... ஏதாவது பிரச்சினைன்னா திரும்பி முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்?!’

‘நாளைக்கு புதுசா எடுத்துட்டு வர்றேன்’

வீட்டுக்கு வந்து மூலை முடுக்கு எல்லாம் தேடி விட்டேன்... சமீபத்தில் எடுத்த படத்தைக் காணவில்லை... ஜம்பமாக கொண்டு வர்றேன்னு சொல்லியாகி விட்டது... புதிதாய் ஃபோட்டா எடுக்கலாம் என்றால்... சின்ன பிரச்சினை.. . சிவகாமியின் நினைவுகள் தாடியாய் அடர்ந்த அமேசான் காடுகள் போல வளர்ந்து கிடக்கிறது... சீர்படுத்தி ஃபோட்டா எடுக்கிறதுக்குள்ள.. திரும்ப தாடி வளர்ந்திடும்.. என்ன செய்யலாம்?.... யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது ... 2006 ஆம் ஆண்டு நான் எழுதிய ஒரு கவிதை (ஒன்றுக்கு கீழே ஒன்று எழுதினால் அது கவிதை தானே?) கண்ணில் புலப்பட்டது...

பொதுவாக தாளில் கிறுக்கி அதனைக் கிழித்து விடுவேன் (என்ன பழக்கமோ?.. என்ன படித்துக் கிழித்தேன்னு யாரும் கேட்டுறக் கூடாதில்லை?)... இது எப்படியோ தப்பித்து விட்டிருக்கிறது... கஷ்டத்தோட கஷ்டமா கீழே இருப்பதையும் படிச்சிருங்க..


தலைப்பு:-

கனவு
=====

என் நினைவெல்லாம் கனவு
கனவினிலே ஓர் நினைவு
அந்த நினைவினில் தெரிகிறதோர்
அழகிய வீடு! அங்கே...
அன்பிற்கு அம்மா
அரவணைப்பிற்கு அப்பா
சண்டையிட தங்கைகள்
பங்கிற்கோர் பங்காளி
வீட்டு வாயிலிலே என்
பெயர் சொல்லும் ரோஜாக்கள்
எதிர்வீட்டு ராஜா
மச்சிவீட்டு ராணி
சண்டைக்கு அண்டை வீடு
கனவே கலைந்து விடாதே!
வாழ்க்கை சக்கரத்தின் வேகமான
சுழற்சியில்
என் நினைவுகளில் கனவுகளையும்..
கனவுகளில் பசுமையான நினைவுகளையும்...
தேடித் தேடி களைப்புற்று
உறங்கும் வேளையில்
கனவு!
ஆம்...
என் நினைவெல்லாம் கனவு
கனவினிலே ஓர் நினைவு
கனவுக்குள் ஓர் கனவு...!

No comments:

Post a Comment