அப்படா!!! ஒரு வழியாக முடித்தாகி விட்டது. எத்தனை நீண்ட இரவுகள். இந்த புத்தகத்தை நான் விளையாட்டாகத் தான் ஆரம்பித்தேன். எனக்கு இயற்கையாகவே வரலாறு பூகோளத்திற்கான அறிவு இல்லாதிருப்பினும் வரலாறு கதையாக சொல்லப்பட்ட விதம் எனக்குள் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு வேளை எனக்கு ஆதித்த சோழர், உத்தம சோழர் மற்றும் இராஜ இராஜ சோழர் பற்றி தெரிந்து இருந்தாலும் இந்த வரலாற்றுக் கதையினை இதே வேகத்தில் தான் படித்திருப்பேன்.
காட்சிக்கு காட்சி எத்துனைத் திருப்பங்கள், ஒருவரை ஒருவர் மிஞ்சும் விதமான உரையாடல்கள். கல்கியின் மற்ற நாவல்களையும் படித்து விடும் ஆர்வத்தில் இருக்கிறேன்.
ஒரு மர்மத் தொடர் கதைக்கு உண்டான அத்துனை விடயங்களும் இதில் அடங்கி உள்ளது.கடைசி அத்தியாயத்திற்கு முந்தைய அத்தியாயம் முடிக்கும் வரையில் எனது கேள்விக்கான தீர்க்கமான விடை கிடைக்க வில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!!...
கதாபாத்திரங்களின் அறிமுகம் அற்புதம். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அற்புதமான வருணனை!.
நமது கதாநாயகன் வந்தியத்தேவனிற்கு ஏற்படும் இன்னல்கள், இடைஞ்சல்கள் அதனைத் தகர்க்கும் யுக்தி!!!. ஆடவரை தன் கடைக்கண் பார்வையாலேயே அடிமையாக்கும் நந்தினி தேவியிடம் மயங்காத ஒரே கதாபாத்திரம் நமது கதையின் நாயகன்!!!. அந்த வகையில் குந்தவை பிராட்டியாருக்கு இவரைப் பிடித்துப் போயிற்றோ?. கடைசி வரை இவர்களுக்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பதை தெரிவிக்காமலே போய் விடுவாரோ என்ற பயம் கலந்த ஐயத்தைக் கடைசியில் கேள்வி-பதில் பகுதியில் போக்கி பாலை வார்த்தார். அடுத்த முறை தஞ்சைக்குச் செல்லும் போது அந்த கல்வெட்டைக் காண வேண்டும் என்று இருக்கிறேன்.
கதைத் தலைப்பிற்கும் கதையின் நாயகனிற்கும் சம்பந்தமில்லையோ என்ற ஐயம் வேண்டாம். பொன்னியின்செல்வருக்கு உற்ற தோழனாகவும் கதையின்
பெரும் பகுதி வந்தியத்தேவனையே சுற்றிச் செல்வதனால் எனக்கு அவ்வாறு தோன்றி இருக்கலாம்.
ஆழ்வார்க்கடியான் பற்றி இங்கே விவரித்து தான் ஆக வேண்டும். அவருடைய கதாபாத்திரம் சில வேளைகளில் பிரமிக்க தக்க வகையில் அமைந்திருப்பதைக் காண்கிறேன். மிகத்தீவிர வைஷ்ணவராக இருந்து கொண்டு அவர் செய்யும் ஒற்று வேலைகள்!!! கதையில் எந்த இடத்தில் எல்லாம் ஒற்றர் தேவையோ அங்கெல்லாம் ஆசிரியர் இப்பாத்திரத்தைத் திறன்பட பயன்படுத்தி இருப்பதைக் கண்டு நான் பல முறை வியந்து போயிருக்கிறேன். அது சதி ஆலோசனை செய்யும் சம்புவரையரின் மாளிகை ஆகட்டும், பாண்டியனின் ஆபத்துதவிகள் சபதம் ஏற்கும் இடமாகட்டும், வந்தியத்தேவனை சிறையில் இருந்து காப்பற்றும் இடமாகட்டும், இவ்வாறு எங்கு நோக்கினும் ஆழ்வார்க்கடியான் இல்லாத இடமில்லை. கதை முழுவதற்கும் பக்க பலமாய் விளங்கும் இவர் எனது மனதில் முழுவதுமாய் ஆட்கொள்கிறார். இந்த பாத்திரத்தைப் பற்றியும் ஆசிரியர் அவரை உபயோகித்த விதம் பற்றியும் மற்றொரு பதிவு எழுதலாமென்று உத்தேசித்துள்ளேன்.
மற்றபடி நான் எதிர்பாராதது ஆதித்த கரிகலாரின் மரணம்!!! (வரலாறு அறியாததன் விளைவு). பெரிய பழவேட்டரையர் எடுக்கும் வீர முடிவு(இதனால் தான் வந்தியத்தேவன் காப்பற்றப்படுகிறார்).
அக்கால காவிரி ஆற்றின் வருணனை மனதைக் கவருவதாய் இருக்கிறது. அக்காலத்தில் கடல் சீற்றத்தினால் நாகப்பட்டிணம் முதலான இடங்களில் உண்டான சேதாரங்களை நமக்கு கதையின் போக்கு எடுத்துரைக்கிறது.
இன்னும் எவ்வளவோ எனது அனுபவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
சுருங்கக் கூறின் பொன்னியின் செல்வன் காலத்தால் அழியாத காவியம்!!!..
Friday, August 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment