Sunday, August 9, 2009

அத்தனைக்கும் ஆசைப்படு!

வாழ்க்கையில் ஆனந்த நிலையை அடைய யோகா ஒரு சிறந்த கருவியாகப் பயன்படும் என்பதை சத்குரு வலியுறுத்துகிறார். நமது ஆசைகளில் பிழை இல்லை அதனை அடைய எடுக்கும் முயற்சிகளில் தான் பிரச்சினை என்று எடுத்துரைக்கிறார். மனதில் ஆசை கொள்ளும் போது கூடவே இந்த ஆசை நிறைவேறுமா என்ற சந்தேகமும் அதனால் ஆசைப் பட்டதை அடைய முடியாமற் போவதும், அப்படியே அடைந்தாலும் பிறரை ஒப்பிட்டு மகிழ்ச்சியை இழப்பதும் என்று அத்தனையையும் அலசி ஆராய்கிறார்.

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு துரோகத்திற்கும், நம்பிக்கை துரோகத்திற்கும் வழியில்லாமல் செய்து விடும் என்று போதிக்கிறார். எதிர்பார்ப்புகளினால் வரும் தீமைகள், தமது கருத்துகளைப் பிறர் மீது ஏன் திணிக்கப் பார்க்கிறோம்? திணிப்பதினால் ஏற்படும் விளைவுகள் என்று பட்டியல் நீள்கிறது.

ஆணாதிக்க சமுகத்தை சாடும் அதே வேளையில் பெண்கள் தமது சுதந்திரம் எது என்று தெளிவு பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். ஆண்களுக்கு இணையாக போட்டி என்று ஒரு பெண் இன்னொரு ஆணாக மாற விளைவதையும் இதனால் அவர்கள் தங்களின் சிறப்புத்தன்மையான மென்மையை இழந்து விடக்கூடும் என்று சுட்டிக் காட்டுகிறார்.

கடவுள் நம்பிக்கை குறித்த நமது பார்வை. தேவைகளின் போது இதைச் செய் அதைச் செய் என்று நாம் கட்டளை இடக்கூடியவராகவும், நமது தோல்விகளுக்கான காரண கர்த்தாவாக அவரை மாற்ற விளைவதையும் அருமையாக எடுத்தியம்புகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சக்தி இருப்பதை மனிதன் உணர்ந்து கொண்டாலும் பக்திக்கு பதில் பயத்தினால் அடிபணிவதையும் இறைவனிடமே பேரம் பேச விளைவதையும் நயம்பட இடித்துரைக்கிறார். மதங்களின் தோற்றத்திற்கான காரணங்களையும அது திரிந்து மதங்கள் எவ்வாறு இன்று கையாளப்படுகின்றன என்று தமது கருத்தை ஆணித்தரமாக பதிக்கிறார்.

நம்மில் சிலர் தமது தோல்விகளுக்கு நவகிரகங்களையும் நாளும் நட்சத்ரத்தையும் குறை கூறுவதை சுட்டிக்காட்டுகிறார். மேலும் வெற்றியை நோக்கி நாம் பயணிக்கும் பொழுது கூடவே அதனை அடைந்து விட வேண்டும் என்ற பயமும் அதனால் ஏற்படும் தொய்வுகளையும் நம் கண் முன் நிறுத்துகிறார். ஒரு செயலை நாம் விரும்பி செய்யும் பொழுது அங்கு அழுத்தம் குறைகிறது. அதனால் மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். அவ்வாறு மகிழ்வுடன் இருக்கும் பொழுது பதட்டம் இல்லாமல் வேலையை முடிக்க முடியும். அதனால் நல்ல திறமையான வெளியீட்டைப் பெற முடியும் என்று அறிவுரை கூறுகிறார்.

இவ்வாறு புத்தகம் முழுவதும் குருவின் கருத்துகள் நம்மை ஈர்க்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிறிய கேள்வி- பதில் பெட்டி மேலும் ‘சங்கரன் பிள்ளை’ யை உவமையாக வைத்து சொல்லப்படும் கருத்துகள் என்று அத்தனையும் நம் மனதை நிரப்பி விடுவதாக அமைந்துள்ளது.

(மனது) நிறைவு பெற்றது!

பி.கு; இந்த புத்தகம் எதிர்பாராமல் கடந்த வெள்ளியன்று உடன் வேலை செய்யும் உடன்பிறவா சகோதரி ஒருவர் மூலம் கிடைத்த்து. இத்தருணத்தில் அவருக்கு என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

No comments:

Post a Comment