Saturday, January 2, 2010

தேன் மலை - 4

மூவரும் கடற்கரையினை அடைந்தனர். கடற்கரையிலிருந்து சற்று தொலைவிலேயே மரங்கள் அடர்ந்து காணப் பட்டன. அந்த கடற்கரை ஒரு அழகிய தீவினைப் போல் காட்சி அளித்தது. படகினை அதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் இழுத்துக் கட்டிவிட்டு மூன்று பேரும் தீர்த்தமலையினை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

“அதோ .. அங்கு தெரிகிறதே ஒரு குடில் அங்கு நீங்கள் இருவரும் காத்திருக்க வேண்டும்” என்று கூறிய திருமலை சற்று தொலைவில் தெரிந்த ஒரு அழகான குடிலை காண்பித்தான். குடிலைச் சுற்றிலும் அழகான தோட்டம் நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்தன. சுவையான பழங்கள் யாவும் காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன. அழகான புள்ளி மான்கள் அங்கொன்றும் இங்கொன்றும் நின்று கொண்டு இருந்தன. முயல்கள், மயில்கள் என்று ஒரே பறவைகளின் கூட்டம் அங்கே வீற்றிருந்தன. ஒரு தெளிந்த நீரோடை அருகிலேயே ஓடிக் கொண்டு இருந்தது. அதன் இரு மருங்கிலும் உயர்ந்து வளர்ந்த ஆலமரங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது . இது அனைத்தையும் முதல் முறையாக காணும் நந்தகுமாரனும் குணசேகரனும் ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்று விட்டனர்.

“அடேயப்பா...! என்ன ஒரு அழகான இடம்... பூலோகத்தில் சொர்க்கம் என்பது இது தானோ?” நந்தகுமாரன் வியப்புடன் குணசேகரனை நோக்கினான்.

“ஆமாம்.. நந்து.. மிகச் சிறப்பான இடம்.. மனதிற்கு ரம்யமாக இருக்கிறது... எத்துனை நாட்கள் வேண்டுமானாலும் நாம் இங்கே இருந்து விடலாம் போலுள்ளது” என்றான் குணசேகரன்.

அப்படியே பேசியவாறும் இயற்கை அழகை வியந்தவாறும் அந்த குடிலை அடைந்தனர். குடிலிலிருந்து மிக அருமையாக சமையலின் வாசனை மூவரின் மூக்கைத் துளைத்தது.

“சமையல் வாசனை வருகிறதே?” நந்து வினவினான்.

“இங்கு வருகிறவர்களை கவனித்துக் கொள்வதற்காக ஒரு வயதான மூதாட்டி இருக்கிறாள்.. அவளுடன் அவளின் மகளும் உதவிக்கு இருக்கிறாள்... இன்று நல்ல சமையல் போல தெரிகிறது” திருமலை சொல்லிக் கொண்டே வாயிற் கதவை தட்டினான்.

மூதாட்டியின் மகள் கதவை திறந்தவாறே “அம்மா... யார் வந்து இருக்கிறார்கள் பாரேன்... திருமலை அண்ணன் ... இவர்களெல்லாம் யார் அண்ணா?”

“இவர்கள் இருவரும் என் நண்பர்கள்.. இவன் நந்து, அவன் குணா, நான் குருவை தரிசித்து வரும் வரை இவர்கள் இருவரும் இங்கே தங்கி இருப்பார்கள்... இவர்களுக்குத் தேவையான வசதிகளை நீங்கள் இருவரும் செய்து கொடுக்க வேண்டும்” திருமலை சொல்லிக் கொண்டே போக உள்ளே இருந்து மூதாட்டியின் குரல் கேட்கத் தொடங்கியது.

“திருமலை.. பார்த்து எவ்வளவு நாளாயிற்று? நாங்கள் எல்லாம் உயிருடன் தான் இருக்கிறோம் என்ற நினைவாவது உன்னிடத்தில் இருக்கின்றதா?” மூதாட்டி பேசிக் கொண்டே போக திருமலை புன்னகையை பதிலாகக் கொடுத்துக் கொண்டு இருந்தான்.

“அம்மா... என் பணியின் காரணமாகத் தான் இவ்வளவு நாளாக இங்கு வர இயலவில்லை... உங்கள் மேல் எனக்கு எப்பொழுதுமே தீராத அன்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது... தவறாக நினைக்க வேண்டாம்... இப்பொழுது கூட ஒரு பணி விசயமாகத் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்... குருவை சந்தித்து ஆசிர் பெற வந்திருக்கிறேன் அம்மா... தங்களின் ஆசியும் வேண்டும்” என்று திருமலை பதில் அளிக்க நந்துவும் குணாவும் சமையல் அறையை நோட்டமிட்டுக் கொண்டு இருந்தனர்.

“வெளியில் ஓடும் நீரோடையில் குளித்து முடித்து விட்டு வாருங்கள் குழந்தைகளே... உங்களுக்கு என்னால் இயன்ற அளவு சுவையான உணவைத் தயாரித்துத் தருகிறேன்” மூதாட்டி மூவரையும் நோக்கிக் கூறினாள்.

அப்பொழுது ஒரு ஆள் உயரமுள்ள ஒரு குச்சி காற்றில் கிடைமட்டமாக பறந்து வந்து திருமலையின் கால்களை மெதுவாக இடித்தது. அதனைக் கவனித்த திருமலை “எனக்கு குருவிடம் இருந்து அழைப்பு வந்து விட்டது... நான் தரிசித்து விட்டு மிக விரைவில் திரும்பி வந்து விடுவேன்” சொல்லிவிட்டு மற்றவர்களின் பதிலுக்குக் கூட காத்திராமல் குடிலை விட்டு வெளியே வந்தான்.

அந்த குச்சியும் திருமலையுடன் சேர்ந்து வெளியே வந்தது. திருமலை கிழக்கு நோக்கி கை எடுத்து கும்பிட்டு விட்டு அந்த குச்சியைத் தொட அது கிடைமட்டமாக ஒரு பாயைப் போல் விரியத் தொடங்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் அது ஒரு பறக்கும் பாயாக மாறி இருந்தது. திருமலை அதன் மேல் ஏறி அமர்ந்து கொண்டவுடன் மேல் நோக்கி பறக்கத் தொடங்கியது. திருமலை பறந்து செல்வதை நந்துவும் குணாவும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

சிறிது நேரப் பயணத்தில் திருமலை தீர்த்த மலையின் உச்சியை அடைந்தான். பறக்கும் பாய் மிகவும் நேர்த்தியான முறையில் ஒரு குகையின் வாயிலில் சென்று தரை இறங்கியது. திருமலை பறக்கும் பாயில் இருந்து இறங்கி கிழக்கு நோக்கி மறுபடியும் கை எடுத்து கும்பிட பறக்கும் பாய் மீண்டும் ஒரு குச்சியாக சுருண்டது. அந்த குகையின் வாயிலில் தடுப்பைப் போல் அந்த குச்சி தன்னை மாற்றிக் கொண்டது. குகையின் வாயிலில் அழகான நீர்த்தொட்டி ஒன்று இருந்தது. அதில் அழகிய வண்ண மீன்கள் நீந்திக் கொண்டு இருந்தன. அதனை கண் கொட்டாமல் பார்த்த திருமலை தனது உடைவாள் முதலியவற்றை எல்லாம் களைந்து அதற்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்தான். பிறகு அந்த நீர்த்தொட்டியில் இருந்து சிறிது குளிர் நீரை எடுத்து முகம் கை கால்கள் முதலானவற்றை கழுவினான். அவனின் களைப்பு சற்று நீங்கியது போல் அவனுக்குத் தோன்றியது.

அந்த குகையின் உள்நோக்கி நடக்க ஆரம்பித்த உடன் சற்றென்று ஒரு அழகிய பணிப்பெண் தனது கரங்களில் சுவையான பழரசங்களுடன் திருமலையின் முன் தோன்றினாள். .நல்ல பசியில் இருந்த திருமலை தனக்கு விருப்பமான பழரசங்களை ஆசை தீர குடித்து இளைப்பாறினான். சற்று நேரத்தில் அந்த பணிப்பெண் வந்த சுவடே இல்லாமல் மறைந்து போக குகையின் மையப் பகுதிக்கு திருமலை வந்து சேர்ந்தான்.. அங்கே குகையின் நடுவினிலே ஒரு ஒளிவட்டம் மட்டுமே தெரிந்தது.திருமலை அந்த ஒளி வட்டத்தின் முன் கிடைமட்டமாக படுத்து வணங்கினான்.

“என் உயிரின் மேலான குருவிற்கு இந்த அடியேனின் பணிவான கோடி வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்”

“நீண்ட ஆயுளைப் பெறுவாயாக.. திருமலை” ஒளிவட்டம் ஆசிர்வதிக்கவும் திருமலை பணிவுடன் எழுந்து நின்றான்.

“என்னையும் நீ ஞாபகத்தில் வைத்திருக்கிறாயா ... திருமலை?” குருவின் கேள்வியைக் கேட்டு திருமலை சற்று அதிர்ந்து போனாலும் “தங்களை மறந்தால் தானே நான் நினைக்க வேண்டிய நிர்பந்தம் வரும்?… நாள்தோறும் உங்களை நான் பூஜித்து வருவது தங்களுக்கு அறிந்த ஒன்றுதானே?”

“உன்னிடம் நிறைய மாற்றங்களைக் காண்கிறேன் திருமலை… இரண்டு வருடங்களுக்கு முன் என்னை விட்டு பிரியும் போது உனது சொத்தாக நான் கணித்த பணிவு, துணிவு என்ற எதுவுமே உன்னிடம் இப்பொழுது இல்லை.. . ” குரு சொல்லி முடிக்க திருமலை அதிர்ச்சியில் உறைந்தான்.

“அதற்கு பதிலாக உன்னிடத்தில் அகந்தை , ஆணவம், வீண் பிடிவாதம் என்று அழிந்து போகும் சொத்துக்கள் நிறைய சேர்த்து வைத்துள்ளாய்”

திருமலைக்கு வியர்த்து கொட்டியது. “குருவே ..! நான் செய்த தவறுதான் என்ன? இவ்வளவு பெரிய பழிச்சொல்லுக்கு என்னை ஆளாக்காதீர்கள்…” கண்ணீர் மல்க திருமலை வேண்ட ஆரம்பித்தான்.

“உனக்குத் தெரியும் திருமலை… நீ என்ன தவறு செய்தாய் என்பது உனக்குத் தெரியும்… பிறர் மனதை புண்படுத்தும் வித்தையையும் நீ கற்றுக் கொண்டாய் போலும்?”

“குருவே… தங்களின் வார்த்தைகளுக்கு நான் எப்பொழுதுமே பதில் வார்த்தைகள் பேசியது இல்லை.. இருப்பினும் நான் செய்த தவறுகளை எடுத்தியம்பினால் நிச்சயமாக நான் சரி செய்து விடுவேன்…” தரையில் மண்டியிட்டு உட்கார்ந்த படியே திருமலை வேண்டிக் கேட்டுக் கொண்டான்.

“என் அருகே வா திருமலை…” என்ற குருவின் அழைப்பிற்கு அடிபணிந்து அந்த ஒளிவட்டத்தின் அருகில் சென்றான்... குரு திருமலையின் காதில் மட்டும் விழுமாறு ஏதோ சொல்லத் தொடங்க முன்னை விட திருமலைக்கு வியர்வை அதிகமாக வெளிவர ஆரம்பித்தது. “இப்பொழுது சொல் திருமலை.. ”

“குருவே... வெட்கி வேதனைப் பட வேண்டிய விசயம் .. உண்மைதான் என் தலைக் கர்வம் அதிகமாகி விட்டது... என் நண்பர்களை நான் மேற்கொண்டு இருக்கும் பணிக்கு தயை கூர்ந்து நீங்கள் நல்வழி காட்ட வேண்டும்..” என்று சொல்லிய திருமலை குருவின் பதிலுக்குக் காத்திராமல் குகையின் சுவரில் வைக்கப் பட்டிருந்த வாளை உருவி கண்ணிமைக்கும் நேரத்தில் தனது தலையை தானே வெட்டி வீழ்த்தினான்.

தலை உருண்டோடி குருவின் காலில் விழந்தது. அந்த இடம் முழுவதும் திருமலையின் தலையில் இருந்து ஒழுகிய இரத்தம் அந்த பளிங்கு தரையை சிவப்பு நிறமாக்கியது...

“அவசரப் பட்டு விட்டாயே திருமலை...! இந்த திருத்தக் கூடிய விசயத்துக்கு உன் உயிரையே தர வேண்டுமா?” குருவின் வார்த்தைகளை கேட்க திருமலையின் உடலில் அவன் தலை இல்லை... அவன் கால்கள் சிறிது நேரம் துடிதுடித்து அடங்கியது...!

தொடரும்...!

No comments:

Post a Comment