எனக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை... இன்று படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவே தோன்றவில்லை... காலை மணி பதினொன்றைத் தாண்டி இருக்கலாம்... இதற்கு முன் ஒரு தடவை மருந்து ஊற்றப் பட்டிருந்தாலும் என் கண்கள் மருந்தினைத் தேடின... ஊற்றிக் கொண்டேன்... பசிக்கவில்லை... மாறாக ஒரு கோப்பைத் தேநீரோ இல்லை... காபியோ குடிக்க வேண்டும் போலிருந்தது... கடைக்குச் சென்று பால் வாங்கி வரும் அளவுக்கு சுறுசுறுப்பு என்னிடத்தில் இல்லை... (சோம்பேறின்னு சுருக்கமா சொல்லு சார்...) இன்று கறுப்பு காபிக்கு மாறுவோம் என்று நினைத்தவாறே தயாரிப்பில் இறங்கினேன். நிரம்ப எளிதாகத் தான் இருந்தது. கொதிக்க வைத்த நீரில் அளவுக்கு அதிகமான காபித் தூளையும் சர்க்கரையும் சேர்த்துக் கொண்டு முன்னறைக்கு வந்தேன்.
வாசலில் அழைப்பு மணி என்னை அழைத்தது... ராகைய்யன் நின்று கொண்டு இருந்தார்.
“இந்தா கரண்ட் பில்..”. திறந்து பார்த்தேன்.
“அடுத்த தடவை புது கார்டு போடனும்”
“சரின்னா.. காபி சாப்பிடுங்க... பாலில்லாத காபி...”
“இல்லை .. எனக்கு கீழ்வீட்டில டீ இருக்கும்”. சிரித்தேன். கிளம்பி போனார். கதவை அடைத்து விட்டு நாற்காலிக்கு என்னைக் கொடுத்தேன். எனது ஒரே துணையான தொலைக்காட்சிப் பெட்டியை தூக்கத்தில் இருந்து எழுப்பினேன். படிக்காதவனும் தேவர்மகனும் என்னுடன் சேர்ந்து கொண்டனர்...
சிறு வயதில் இருந்தே எனக்கு டீ, காபியின் மேல் ஒரு அலாதிப் பிரியம்(அப்பாவிடம் இருந்து வந்திருக்கலாம்...). எப்பொழுது என்னை டீ குடிக்க கூப்பிட்டாலும் மரியாதை நிமித்தம் வேண்டிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவேன். கடையில் வேலை மிகுந்திருக்கும் காலங்களில் டீ மட்டுமே சாப்பாடாக இருந்திருக்கிறது. வேலை முடிந்த சமயங்களில் என் சக ஊழியர்களுடன் டீ குடித்து நேரத்தைக் கழிப்பதில் அளவில்லாத மகிழ்ச்சி.... இப்பொழுது அவர்கள் எல்லாம் எந்த இடத்தில எந்த நிலைமையில் இருக்கிறார்களோ? எனக்கு உண்மையில் தெரியாது. ஆனால் அந்த தேநீர் நிமிடங்களின் பசுமைத் தன்மை என் மனதை விட்டு மறைந்து விடுவதாய் இல்லை...
எத்தனை இடங்களில் விதவிதமான தேநீரில் மூழ்கி இருந்தாலும் பனிக்காலங்களின் அதிகாலை நேரங்களிலும் மழைக் காலங்களின் சாரலிலும் அம்மாவினால் பரிமாறப் படும் அந்த ஒரு கோப்பை தேநீருக்கு இணையாக இன்று வரை எதுவும் இருந்தது இல்லை. ஆவி பறந்து கொண்டு இருக்கும் தேநீருடன் வாசற்படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு மழைச் சாரலை ரசிக்கும் அந்த ஆனந்த நிமிடங்கள்... கையில் இருக்கும் தேநீருக்குத் தான் எத்தனை சுவை...! எங்கிருந்து தான் அதற்கு வருகிறது அத்தனை மணம்...! என்னை மறக்க வைத்த அந்த நிமிடங்கள் மறக்காமல் ஒரு பொக்கிஷமாக என் மனதிற்குள்ளேயே அமிழ்ந்து கிடக்கின்றன. பனிக்காலத்தின் அதிகாலை வேளையில் இரவில் போர்த்திக் கொண்ட போர்வையுடன் அதே வாசற்படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு தெருவில் காலையில் பஜனைப் பாடிச் செல்வோரை வேடிக்கை பார்த்துக் கொண்டே தேநீரைப் பருகும் அந்த வேளை... என் வாழ்க்கையின் மிக சுவையான நிமிடங்கள்...
வாசலில் மீண்டும் அழைப்பு.. மீண்டும் ராகைய்யன்... கையில் தேநீருடன்... எதிரெதிரே நாற்காலியில் அமர்ந்தோம்... பேச்சு சுவாரஸ்யத்தில் என் கையில் இருந்த கறுப்பு காபி தனது சூட்டினை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்ததை கவனிக்கத் தவறினேன்... அவருடைய கோப்பை காலியாகியது... இடையிடையே படிக்காதவன் குறுக்கிட்டான்.. சில வாக்குறுதிகளைப் பறிமாறிக் கொண்ட பிறகு ராகைய்யன் விடை பெற்றுச் சென்றார். மீண்டும் தனிமையும் தொலைக் காட்சி பெட்டியும் மட்டும் எனக்குத் துணையானது. தனது உயிரை முழுவதுமாக இழந்து விட்டிருந்த மீதமுள்ள கறுப்பு காபியை ஒரே மடக்கில் குடித்து கோப்பையைக் காலி செய்தேன்...
இன்று குடித்த கறுப்பு காபியில் ஏதோ ஒன்று இருப்பதாய் கருதி அதன் சுவையை எனக்குப் பிடித்ததாய் நம்ப வைக்க என் மனம் பிரயத்தனப் படுகிறது. சுவையில் கரைந்து போயிருந்த நான் யோசிப்பதை நிறுத்திவிட்டு ஜன்னல் வழியாக வெளி உலகத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்..பனிக்காலங்களின் அதிகாலைப் பொழுதும், மழைக் காலங்களின் சாரல்களும் மாறி மாறி என்னைக் கடந்து போய்க் கொண்டே இருக்கின்றன...அம்மாவின் அன்போடு பரிமாறப் படும் ஒரு கோப்பைத் தேநீரைத் தவிர...!
Tuesday, January 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment