கோபத்தின் உச்சியில் இருந்தேன். நான் என்ன தவறு செய்தேன்? என்ன தீங்கிழைத்தேன்? ஏன் இந்த நிராகரிப்பு? கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து உடைத்து விட வேண்டும் என்று தோன்றியது. அலுவலகமாகப் போய் விட்டது... சில விருப்பு வெறுப்புகளை நேரடியாக காட்ட முடியாது...கைகள் கட்டுண்ட நிலையில் என்னுடைய இடத்தில் அமர்ந்து கணிணித் திரையினை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன். “நான் என்ன தவறு செய்தேன்?” என்பதைப் போல் திரை என்னைப் பாவமாகப் பார்த்துக் கொண்டு இருந்தது.
“என்னாச்சு?” கேள்வி வந்த திசையில் எனது தோழி நின்றிருந்தாள்.
“ஒன்னுமே தெரியாத மாதிரி தான்” வாய்க்குள் முணுமுணுத்தேன்.
“என்ன சொன்ன?”
“ஒன்னும் இல்லைன்னு சொன்னேன்!”
“கோபமா இருக்கிற மாதிரி தெரிஞ்சது.. அதான் கேட்டேன்!”
“கோபம் தான்!”
“ஏன்? எதனால?”
“எனக்குப் பத்திரிக்கை கொடுக்கலை...”
“மறந்திருக்கலாம்!”
“ஞாபகத்தில் வச்சுக்கிற அளவுக்கு நான் முக்கியமானவன் இல்லை தான்... கூட வேலை செய்கிற ஒருத்தன்னாவது நினைச்சு பத்திரிக்கை கொடுத்திருக்கலாம்ல..”
“ப்ளேஸ்ல நீ இல்லாம இருந்திருக்கலாம்..”
“எனக்கு கோபம் இன்னும் அதிகமாகுது... ப்ளீஸ்.. நான் கொஞ்ச நேரம் கழித்து பேசறேன்”
“சரி”
சற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்தேன். சிறிது நேரத்திற்கெல்லாம் என் நண்பர்களுடன் கல்யாண மஹாலில்...! வழக்கம் போல் தம்பியுடன் உரையாடிக் கொண்டு இருக்கிறேன்
“வர மாட்டீங்கன்னு நினைச்சேன்...”
“பத்திரிக்கை கொடுக்காததை சொல்றியா?”
“இல்லை ... அது வந்து...”
“தம்பி.. இப்ப .. இந்த இடத்துல அந்த பேச்சு வேணாம்...”
சொல்லி விட்டு என் முகத்தைக் கவனிக்கிறேன்... கண்ணாடியுடன் முகம் பளிச்சிட்டது... வெயிட்.. இப்பதான் கண்ணாடி தேவையில்லையே...? மறுபடியும் பார்க்கிறேன்.. இப்பொழுது கண்ணாடியும் தாடியும் மிஸ்ஸிங்... முகூர்த்த நேரம் நெருங்கி வருகிறது... மாப்பிள்ளை பெயர் கூடத் தெரியவில்லை... இதற்குத் தான் பத்திரிக்கை கொடுக்க வேணும்ங்கிறது... :-)யோசித்துக் கொண்டே மணமேடையைப் பார்க்கிறேன்... என்னவள் .. மணப் பெண்ணாய் அமர்ந்திருக்கிறாள்... அந்த பட்டுப் புடவையில் சாட்சாத் அன்னை மஹாலட்சுமியைப் போல் தோற்றமளித்தாள். வெயிட்... என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?. இன்னொருவனை மணக்க இருக்கும் ஒருத்தியை ரசிக்க உன் மனதிற்கு எப்படி தோன்றுகிறது? ஏன் இந்த பித்துக் குளித்தனம்? சரிதான் .. உரிமை இல்லை.. அப்படியே திரும்பி வேறொரு திசையில் பார்வையை செலுத்துகிறேன்...
பட்டு வேட்டி சட்டையுடன் மாப்பிள்ளை, தோழர்கள் சகிதமாக மணமேடையை நோக்கி...மறுபடியும் வெயிட்... எத்தனை தமிழ் சினிமா பார்த்திருக்கிறோம்... மாப்பிள்ளை மணமேடையில் இருக்கும் பொழுது புரோகிதர் “முகூர்த்த நாழி நெருங்கிடுத்து ...பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ...” அப்படின்னு சொல்லுவார் . இங்கே என்ன தலைகீழா நடக்குது?.. புரோகிதர் “மாப்பிள்ளையைக் கூட்டிண்டு வாங்கோன்னு" சொன்னாப் போலத் தெரியலையே... யோசித்த படியே நிமிர்ந்து பார்க்கிறேன்.. மாப்பிள்ளை நடந்து வந்த திசையில் மணப்பெண் தனது தோழியர்களுடன் ... அப்ப மாப்பிள்ளை...? மணமேடையில் .. ஓஹோ... சரி.. பொண்ணைத் தான் பார்க்கக் கூடாது... மாப்பிள்ளையையாவது எப்படி இருக்கார்ன்னு பார்ப்போம்...? ஏன்கிட்ட இல்லாதது அவர்கிட்ட என்ன இருக்குன்னு யார்ட்டயாவது கேட்கனும்;-)... உற்றுப் பார்த்தேன்.. என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை... புதிதாகத் திறக்கப் பட்ட ஷாம்பெய்ன் பாட்டில் போல என் மனது மகிழ்ச்சியில் பீறிடத் தொடங்கியது... எல்லோர் முன்னிலையிலும் டான்ஸ் ஆடத் தொடங்கினேன்... வெயிட்... உனக்கு டான்ஸ் ஆடத் தெரியுமா... அப்படியே தெரிந்தாலும் இவ்வளவு பெரிய உடம்பை வச்சுக்கிட்டு?.. கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் எனக்குக் குத்துச் சண்டை க்ற்றுக் கொள்ள வேண்டும் என்று சத்தமாக சொல்லிவிட்டு அருகில் இருந்த தம்பியின் தோள்களில் குத்துகிறேன்...
“என்ன சந்தோஷமா...?”
“பின்ன... இருக்கதா?”
“எனக்கு முன்னாடியே தெரியும்...”
“ஏன் சொல்லலை..?”
“சர்ப்ரைஸ்... அதான் பத்திரிக்கை கொடுக்கலை...”
ஓஹோ... அப்படியா.. வெயிட் .. லாஜிக் வலுவா சொதப்புதே.. நம்ம கோடிங் மாதிரி... ஹீம்.. சரி.. பரவாயில்லை.. நல்லாத்தான் இருக்கு... மணப்பெண் மாப்பிள்ளையின் அருகில் அமர வைக்கப் படுகிறாள்... நான் மூன்றாவது வரிசையில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன்... “கெட்டி மேளம்... கெட்டி மேளம்...” ஆனால் அங்கு கெட்டிமேளத்திற்கு பதில் ஹிந்தி கஜினி பாடல்... வெயிட்.. “கெட்டிமேளம்...” இல்லை... ஹிந்தி கஜினி பாடல்... கறுப்புக் கண்ணாடியின் பாதுகாப்பில் மூடியிருந்த எனது இமைகளை திறந்தேன்... என்னை எழுப்ப முயன்ற கைப்பேசியை மீண்டும் அரைத் தூக்கத்திற்கு செல்லப் பணித்து விட்ட எனக்கு மீண்டும் தூங்குவதற்கு மனம் வரவில்லை....
என்னை மணக்கோலத்தில் பார்த்த பிறகு எப்படி தூக்கம் வரும்... நான் தான் அந்த கல்யாணத்தில் மாப்பிள்ளையாக வந்தவன்... என்று உங்களுக்குச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை... ;-).... அப்ப பொண்ணு...?
“ஹி...ஹி... நோ.. கமெண்டஸ்...!”
Saturday, January 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment