Sunday, January 31, 2010

நவம்பர் 5, 2005

என் மனது அளவுக்கு அதிகமான மகிழ்ச்சிக்கோ துக்கத்திற்கோ ஆட்படும் பொழுது பெரும்பாலான சமயங்களில் மழையும் என்னுடன் சேர்ந்து கொள்ளும். மழைக்கும் எனக்கும் எப்பொழுது அப்படி ஒரு பந்தம் ஏற்பட்டது என்பதை நினைத்துப் பார்க்கும் அளவுக்கு என் நினைவுகள் பசுமையாக இல்லை... எனக்கும் மழைக்குமான சம்பந்தத்தை விட்டு விடுவோம். சென்னைக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்? என்று கேள்வி எழும் அளவிற்கு விடாது மழை பெய்து கொண்டிருந்த ஒரு காலை வேளையில் இந்த சீர்மிகு சென்னை என் வரவினை அங்கிகரித்து பரந்து விரிந்த தன் மடியில் எனக்கொரு இடம் கொடுத்து மகிழ்ந்தது.

“மகீ..”

“எங்கே இருக்க?”

“கிண்டில இறக்கி விட்டுட்டாங்க...”

“ஆட்டோ பிடிச்சு அசோக் பில்லர் - மாந்தோப்புக் காலனின்னு கேட்டு வந்துடு”

எங்கே போயி எப்படி ஆட்டோ பிடிக்கிறது? இதே நம்ம ஊர்னா நம்ம வீட்டுல இருந்துகிட்டு கைய அசைச்சாலே ஆட்டோ வந்துடும்... ஏமாத்திருவாய்ங்கன்னு வேற சொன்னாய்ங்களே? அப்படியே என் சட்டைப் பையினைத் தொட்டு தடவிப் பார்த்தேன். வெளிப் பாக்கெட்டில் இருநூறு ரூபாயும், உள் பாக்கெட்டில் அம்மா தந்த ஆயிரத்து நானூறு ரூபாயும் இருந்தது. பேண்ட பாக்கெட்டில் சில்லரைக் காசுகள்.. அப்பாவோட ட்ரெயினிங்... ஆங்.. அப்பா.. இப்ப எப்படி இருப்பார்? மருத்துவமனையில் எனக்கும் அவருக்குமான உரையாடல் இன்னும் ஒரு முறை ஓடத் தொடங்கியது.

“மைதீ..”

“......”

“எனக்கு ஒன்னும் ஆகாது.. கவலைப்படாதே.. கிளம்பிப் போ..”

“இல்லை...”

“வேலைதான் முக்கியம்.. கிளம்பிப் போ..”

“ஏற்பாடு பண்றேன்..”

அதுவரை சிறுசிறு வியாதிகளினால் மட்டுமே அவதியுற்ற வரை முதன்முறையாக இதயவலியும் அணுகி தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்டது. எதையும் தாங்கும் இதயத்திற்கே வலி.. நான் எல்லாம் எம்மாத்திரம்? .. யோசித்துக் கொண்டே நிமிர்ந்த பொழுது என்னுடன் பயணித்த என் ஊர்க்கார இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

“பாஸ்...”

“சொல்லுங்க”

“எனக்கு ஒரு ஆட்டோ பிடிச்சு தரமுடியுமா?”

“அதோ .. அங்கே இருக்கே...”

“எனக்கு இங்க இடம் எல்லாம் பழக்கம் இல்லை... எவ்வளவு கொடுக்க வேணும்னு தெரியாது.. மழை வேற விடாம பெய்திட்டிருக்கு..”

“எங்கே போகணும்?”

“பில்லர்- மாந்தோப்புக் காலனி”

“வாங்க...”

அங்கு தேங்கி இருந்த தண்ணிர் குட்டையைத் தாண்டி ஆட்டோ நிற்கும் இடத்திற்கு போவதற்குள் ஒரு சிறு சாகசமே நிகழ்த்த வேண்டி இருந்தது. எல்லாம் என்னுடைய பொதி மூட்டையினால் தான்... பெரிய ...................... மாதிரி வீட்டில் இருந்த எனது உடைகளையும் புத்தகங்களையும் ஒரே பையில் கட்டி தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு இருந்தேன்... சென்னைக்குக் கிளம்பும் முன் எல்லா வண்டிகளும் பில்லர் வழியாகத் தான் செல்லும் என்று உறுதிப் படுத்திக் கொண்டதின் விளைவாகத் தான் அத்தனை பெரிய மூட்டை.. இல்லாவிட்டாலும் அவ்வளவு பெரிதாகத் தான் எடுத்து வந்திருப்பேன்.. அது வேறு விசயம்... அதோ ஆட்டோ வந்தாகி விட்டது.. ஊர்கார இளைஞன் ஆட்டோவை அணுகி...

“பில்லர் போகணும்.”

“ஐம்பது ரூபாய் ஆகும்..”

“இங்க இருக்க பில்லருக்கா?”

“மழை பேஞ்சுகினே இருக்கு... தோ .. பாரு.. தண்ணி எப்டி கொளமாட்டம் கிடக்குதுன்னு..”

“நாப்பதுன்னா ஓ.கே..”

“பாத்து சொல்லு சார்... யாரும் வரமாட்டாங்க...”

“அதெல்லாம் போலாம்...”

எனக்கு இதுபோல் வாடகை பேசி இதற்கு முன் பழக்கமே கிடையாது. ஒரு முறை குதிரை வண்டியில் போகும் பொழுது எனது அத்தை குதிரைக் காரனிடம் பேரம் பேசி சண்டை இட்டது மட்டும் ஞாபகம் இருக்கிறது. பேசாமல் கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து எனது ஊர்க்கார ரிடம் ஜாடையாக சொல்லி விடலாம் என்று அவரின் முகத்தைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.

“கையில வச்சுகிற லக்கேஜீக்கே தனியா சார்ஜ் பண்ணனும்...”

“அது வெறும் துணி தான்... பில்லர் - மாந்தோப்புக் காலனி.. நாப்பது.. இறக்கி விட்டிருங்க...”

என்னிடம் திரும்பிய அந்த இளைஞன் .. “வழக்கமா.. முப்பது தான்.. மழை பேயறதுனால குறைக்க மாட்றான்”

“ரொம்ப நன்றி பாஸு..”

“பார்ப்போம்” என்று சொல்லி முடித்த அடுத்த விநாடிகளில் கிண்டி பேருந்து நிறுத்தத்தில் கரைந்து போயிருந்தான். சாலைகளில் ஆங்காங்கே இருந்த பள்ளங்களில் நிரம்பியிருந்த தண்ணீரை எல்லாம் வெளியேற்றி ஒரு செயற்கை அலையை ஏற்படுத்திய வண்ணம் ஒருவழியாக பில்லரை அடைந்தாகி விட்டது. எனது பொதி மூட்டையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினேன்...

“பாய்...”

“ஹே .. ராஜ்... ” ஒரே ஆச்சரியமாக இருந்தது.

“பஸ்ஸுக்கு ஒன்னும் ஆகலையே...?”

“நம்ம வர்ற பஸ்ஸுக்கு ஏதாவது ஆகுமா என்ன?”

“பாய் .. நீங்க வந்ததுனால தான் கேட்டேன்.. பஸ் ஏதோ ஒரு பக்கம் இறங்கிப் போயிட்டதா கிண்டி பக்கம் பேசிக்கிட்டாங்க...”

“ராஜ்...” செல்லமாக இடுப்பில் குத்தினேன்...

வீட்டிற்குள் நுழைந்தோம்... அது ஒரு எட்டுக்கு எட்டு அடி அறை... இரண்டு ஷெல்புகள்.. அந்த அறையினை ஒட்டினாற் போல் நான்கிற்கு நான்கில் ஒரு கழிவறை... ஒரு கதவு தாழிட்ட நிலையிலேயே இருந்தது....

“ராஜ்.. இந்த கதவை திறங்க .. இதை ஏன் பூட்டி வச்சிருக்கீங்க.. அந்த ரூமையும் பாக்கணும்”

“அதுக்கு ஓனர் சம்மதிக்க மாட்டாரு பாய்”

“ஏன் ராஜ்?”

“ஏன்னா .. அவரு அங்கதான் தங்கி இருக்காரு..”

“ராஜ்.. நான் உருள்றதுக்கே இந்த இடம் பத்தாது...”

“வேற வீடு பாத்துரலாம் பாய்... கொஞ்ச நாளைக்கு நாங்க சுதானமா தூங்கனும் .. இல்லை மகீ..”

“சரி.. கொஞ்ச நேரம் இந்த கட்டைய சாய்க்கிறேன்.. ஒட்றான். .ஓட்றான்.. ஓட்டிக் கிட்டே இருந்தான்... முதுகு வலியே வந்திருச்சு..”

சிறிய அறையாக இருந்தாலும் அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. உருண்டு கொண்டே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.. பேச்சு சுவாரஸ்யத்தை என் செல்போன் குறுக்கிட்டது..

“சொல்டா ராம்..”

“எங்கேடா இருக்க?”

“பில்லர்.. மகீ ரூம்ல..”

“ஒ.கே. தேனாம்பேட்டை வந்துருடே.. ஹெச் .ஆர் கிட்ட பேசிட்டேன்...”

“தேனாம்பேட்டையா?”

“ஆபிஸுக்கு பக்கத்தில தான்டா.. கிளம்பி வா.. ரூமுக்கு ரெண்டு பேர்.. நம்ம ரூமில.. நீயும நானும் தான்... ஏஸி.. வாட்டர் ஹீட்டர்.. எல்லாம்.. எப்ப வர்ற?”

“இல்ல.. நான் இங்கேயே.. மக்கள் கூட”

“டேய் .. இது ப்ரீ தான்டா.. பதினைந்து நாள்ல நம்ம வேற இடம் பார்க்கணும்.. ஆஃபர்ல போட்டிருக்கேடா...”

“இல்ல...”

“வர்றியா.. இல்லையா?”

“பத்து நிமிஷத்தில கூப்பிடறேன்டா..”

செல்லை ஒரு ஒரமாக வைத்து விட்டு ராஜிடமும் மகீயிடமும் விசயத்தைப் பகர்ந்தேன். அடுத்த சில மணிநேரங்களில் தேனாம்பேட்டை வந்தடைந்தேன். “J.R.C” என்று எழுதி இருந்ததை வாசித்தேன். .. எல்லாவற்றையும் ஒருவாறு செட்டில் செய்து விட்டு வாசலில் இருந்த டீக்கடைக்கு வந்தோம்... மழை தூறிக் கொண்டே இருந்தது...

“பாய்..இனிமே ஒரே என்ஜாய்மென்டதான் போங்க...”

“ஏஸி ஒத்துக்காது ராஜ்..”

“அதில்ல பாய்.. பக்கத்தில தான் S.I.E.T”

“அது என்ன ராஜ்..”

“நடிக்காதீங்க.. பாய்..”

“ராஜ்... எனக்குத் தெரியாது .. சொல்லுங்க..”

சொன்னார்.சிரித்தேன்.

என் செல்போனுக்கு வீட்டிலிருந்து அழைப்பு வர செல்லைக் காதிற்குக் கொடுத்தேன்..

“சொல்லும்மா..”

“வீட்டுக்கு வந்தாச்சுப்பா...”

“என்ன சொன்னாங்க?”

“இருதயம் ரொம்ப பலவீனமாயிடுச்சாம்.. மாத்திரை மருந்து கொடுத்திருக்காங்க...”

“சரி.. கடைக்குப் போக வேணாம்னு..”

“போயாச்சு...”

“அம்மா...” அதிர்ந்தேன்.

“அப்புறமா போன் போடுறேன்...”

என் திடீர் கோபத்தினால் உண்டான வெப்பக் கனலை மழைத்துளிகள் சாந்தமாக்க முயற்சி செய்து கொண்டு இருந்தன...!

கல்லறைக் காதலன்...!

ஒவ்வொருவரும் தமது மனதில் நிறைய ஆசைகளை வளர்த்துக் கொண்டு இருக்கிறோம்.அதில் எத்தனை ஆசைகள் நிறைவேறுகின்றன? எத்தனை ஆசைகள் நிராகரிக்கப் படுகின்றன? எத்தனை ஆசைகள் முயற்சி செய்யப்பட்டு தோல்வியைத் தழுவுகின்றன? இப்படி கேள்விகள் எழும் போது ஏதோ ஒன்றில் நமது ஆசைகள் வகைப்படுத்தப் படும் இல்லையா? முயற்சி செய்யாமலே ஆசைகள் நிறைவேற்றப் படவேண்டும் என்ற எண்ணத்திறகு என்ன பெயரிடுவது? இப்படி ஒரு எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆசைகள் நிறைவேற்றப் படவில்லை என்று புலம்பி தீர்ப்பது முறைதானோ? நடைமுறைக்கு ஒத்து வராத சில ஆசைகள் நிறைவேற்றப் படமாலே செத்து மடிகின்றன. நிறைய பேரின் மனதில் இப்படி பட்ட ஆசைகள் ஒரு சிறு குழந்தை போல் பிறந்து ஒரு மனிதனாய் வளர்ந்து அதனுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டோ செய்யப்படாமலோ முதிர்ச்சி அடைந்து ஒரு கல்லறையில் முடிகின்றன. என் மனதில் நிறைவேற்றப்படாத ஆசைகளின் கல்லறைகள் ஏராளம்.. கடந்து போன தினங்களில் ஒரு நாள் சில மாதங்களுக்கு முன் என் மனதில் தோன்றிய ஆசை ஒன்றிற்கு ஒரு கல்லறை அமைக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது.

இந்த தருணத்தில் நடிகர் ஒருவரின் பேட்டி ஒன்று ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை... .. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற தர்க்கத்திற்கு வரும் போதே... கடவுள் என்ற ஒருவர் இருந்திருக்கிறார் ஆனால் இப்பொழுது இல்லை... கடவுள் இதுவரை இல்லை.. இனிமேல் இருப்பார்... இப்படி ஏதோ ஒன்றை நோக்கித்தான் தர்க்கத்தின் பாதை செல்லும்.. சமீபத்தில் என் மனதில் இப்படித் தான் ஒரு எண்ண அலை ஒடிற்று... அவள் என் மனதில் இருக்கிறாளா? இல்லையா? மிக நீண்ட நேர தர்க்கத்திற்குப் பிறகு என் மனது தன்னுள் அவளுக்கு ஒரு ரத்தின சிம்மாசனமிட்டு அதன் மேல் கொலு வீற்றிருக்கச் செய்திருப்பதை ஒப்புக் கொண்டது... நடைமுறைக்கு ஒத்து வராத ஆசைகளை மனதில் வளர்த்துக் கொள்வதில் எந்த வித பிரயோஜனமும் இல்லை... என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது தான் அந்த ஆசையினை கல்லறைக்கு அனுப்ப வேண்டிய முடிவு தோன்றியது... என் உயிருள்ள உணர்வுகளுக்கு நான் ஒரு உருவம் கொடுத்து என்னுள் உலவ விட்டிருந்தேன்... கடந்த பல மாதங்களாக என்னை முற்றிலுமாக மாற்றி விட்டிருந்தான் அவன்... வாழ்க்கையை இன்னொரு கோணத்தில் இருந்து பார்ப்பதற்கு உதவினான்... இப்படி எவ்வளவோ!... அப்பேற்பட்டவனை கல்லறைக்கு அனுப்பத் தான் வேண்டுமா என்று என்னுள் ஒரு ஆர்ப்பாட்டமே நடந்து கொண்டு இருந்தது...

கல்லறையினைப் பற்றி யோசிக்கும் பொழுது ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன் நான் பயணப்படுகின்றேன்....
“கடைசியா முகம் பார்க்கணும்னு நினைக்கறவங்க பாத்துக்கோங்க...”. பார்த்தேன். சில விநாடிகளில் மண்ணினால் மூடப்படப் போகும் அந்த சலனமற்ற முகம் என்னிடம் பிரியா விடை கேட்பதாகவே தோன்றியது... தோண்டிப் போடப் பட்டிருந்த மணலை மெதுவாக கைகளினால் தள்ளினேன்... அடுத்த நொடி அங்கே இருந்தவர்களினால் அசுர கதியினில் குழி மூடப்பட்டுக் கொண்டு இருந்தது. “பொறுமையா.. மெதுவா.. “ என்று நான் கத்தியதை யாரும் கேட்பதாயில்லை... அவர்களுக்கு அவர் யாரோ? ஆனால் எனக்கு? அதற்கு முன் பல அடக்கங்களுக்கு உதவி இருந்தாலும் என்னைப் பொறுத்த வரை என் மனதில் நீங்காத கல்லறை நிமடங்கள் அவை.... அது இன்று இடிக்கப்பட்டிருக்கலாம்... அந்த இடத்தில் இன்னொருவர் அடக்கம் செய்யப் பட்டிருக்கலாம்... எனக்குத் தெரியாது... தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை...

அன்று நான் என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையுடன் அவனை உயிருடன் கல்லறையில் இட்டேன்... கடைசியாக அவனைப் பார்க்கும் பொழுது கண்ணீர் விட்டேன்...

“மன்னிச்சிடுடா....”

“இன்னும் கொஞ்ச நாளைக்கு என்னை வெளிய விட்டு வையேன்...” கெஞ்சினான்.

“போதும்டா.. உன்னால நான் நிறைய விசயங்களைத் தெரிந்து கொண்டேன்... நிறைய துன்பங்களையும் பார்த்து விட்டேன்...”

“துன்பம் கொடுக்காம பார்த்துக்கிறேன்.... அவளை உனக்கு நான் ஞாபகப் படுத்தப் போவது இல்லை...”

“உனக்கே வேடிக்கையாக இல்லையா?... உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவளின் ஞாபகம் வந்து விடும் என்பது உனக்குத் தெரியும் தான் இல்லையா?”

“சரி.. உன் விருப்பம்.. சிறுது காலம் மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் ... பின்பு நீயே நினைத்தாலும் என்னை உயிர்ப்பிக்க முடியாது...”

“நானறிவேன்... குட் பை...”

“குட் பை...”

மனதின் ஒரு ஓரத்தில் ஆழக்குழி தோண்டி ஒருவாறு புதைத்து விட்டேன்... இனி அவனின் தொந்தரவு இருக்கப் போவதில்லை.. இனி என் மனதில் அவள் இருக்கிறாளா.. இல்லையா.. என்று தர்க்கம் செய்ய ஒருவன் இல்லை... துக்கம் நிரம்புகிறது... துணைக்கு வரும் நெப்போலியனுடனும் சில காலத்திற்கு முன் தகராறு... சில புத்தகங்களும் தனிமை மட்டுமே துணையாக... முற்பிறவியில் செய்த தீய வினையின் பயன்கள் இன்று என்னை இப்படி வாட்டுகிறதோ.... அவனால் நடப்பட்ட ரோஜா செடிகள் அனைத்தையும் பிடிங்கி எறிந்து விட்டேன்... பிடிங்கிய இடத்தில் இரத்தம் வழிந்து புரையோடி ஒரு தழும்பாக மாறி விட்டிருக்கிறது... வலி மட்டும் எஞ்சி நிற்கிறது...

உயிருள்ள உணர்வுகளை கல்லறையில் புதைத்து விட்டு உயிரற்ற ஜடம் மட்டும் இந்த உலகத்தை சுற்றித் திரிகிறது... தாஜ்மஹாலிற்கும் என் மனதில் கட்டப் பட்ட கல்லறைக்கும் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை... பிற்காலத்தில் திரும்பிப் பார்க்க நேரிடும் தருணத்தில் நிச்சயம் இந்த பசுமைப் பக்கங்கள் நினைவிற்கு வரும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை... இப்பொழுதெல்லாம் அவளைக் காணும் பொழுது மனதில் ஒன்றும் பட்டாம் பூச்சி பறப்பதில்லை... பேசும் பொழுது கால்கள் பூமியில் தான் இருக்கின்றன... என்னுள் மாற்றங்கள் நிகழத் தொடங்கி விட்டன... மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கிறேன் என்றே நினைக்கிறேன்...

பாதி மீண்டு விட்டேன்... மீதியும் மீண்டு விடுவேன்... திரும்பி வருவேன்.. முழுவதுமாக...!

Saturday, January 30, 2010

கனவுகள் மெய்ப்படல் வேண்டும்...!

கோபத்தின் உச்சியில் இருந்தேன். நான் என்ன தவறு செய்தேன்? என்ன தீங்கிழைத்தேன்? ஏன் இந்த நிராகரிப்பு? கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து உடைத்து விட வேண்டும் என்று தோன்றியது. அலுவலகமாகப் போய் விட்டது... சில விருப்பு வெறுப்புகளை நேரடியாக காட்ட முடியாது...கைகள் கட்டுண்ட நிலையில் என்னுடைய இடத்தில் அமர்ந்து கணிணித் திரையினை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன். “நான் என்ன தவறு செய்தேன்?” என்பதைப் போல் திரை என்னைப் பாவமாகப் பார்த்துக் கொண்டு இருந்தது.


“என்னாச்சு?” கேள்வி வந்த திசையில் எனது தோழி நின்றிருந்தாள்.
“ஒன்னுமே தெரியாத மாதிரி தான்” வாய்க்குள் முணுமுணுத்தேன்.
“என்ன சொன்ன?”
“ஒன்னும் இல்லைன்னு சொன்னேன்!”
“கோபமா இருக்கிற மாதிரி தெரிஞ்சது.. அதான் கேட்டேன்!”
“கோபம் தான்!”
“ஏன்? எதனால?”
“எனக்குப் பத்திரிக்கை கொடுக்கலை...”
“மறந்திருக்கலாம்!”
“ஞாபகத்தில் வச்சுக்கிற அளவுக்கு நான் முக்கியமானவன் இல்லை தான்... கூட வேலை செய்கிற ஒருத்தன்னாவது நினைச்சு பத்திரிக்கை கொடுத்திருக்கலாம்ல..”
“ப்ளேஸ்ல நீ இல்லாம இருந்திருக்கலாம்..”
“எனக்கு கோபம் இன்னும் அதிகமாகுது... ப்ளீஸ்.. நான் கொஞ்ச நேரம் கழித்து பேசறேன்”
“சரி”

சற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்தேன். சிறிது நேரத்திற்கெல்லாம் என் நண்பர்களுடன் கல்யாண மஹாலில்...! வழக்கம் போல் தம்பியுடன் உரையாடிக் கொண்டு இருக்கிறேன்

“வர மாட்டீங்கன்னு நினைச்சேன்...”
“பத்திரிக்கை கொடுக்காததை சொல்றியா?”
“இல்லை ... அது வந்து...”
“தம்பி.. இப்ப .. இந்த இடத்துல அந்த பேச்சு வேணாம்...”

சொல்லி விட்டு என் முகத்தைக் கவனிக்கிறேன்... கண்ணாடியுடன் முகம் பளிச்சிட்டது... வெயிட்.. இப்பதான் கண்ணாடி தேவையில்லையே...? மறுபடியும் பார்க்கிறேன்.. இப்பொழுது கண்ணாடியும் தாடியும் மிஸ்ஸிங்... முகூர்த்த நேரம் நெருங்கி வருகிறது... மாப்பிள்ளை பெயர் கூடத் தெரியவில்லை... இதற்குத் தான் பத்திரிக்கை கொடுக்க வேணும்ங்கிறது... :-)யோசித்துக் கொண்டே மணமேடையைப் பார்க்கிறேன்... என்னவள் .. மணப் பெண்ணாய் அமர்ந்திருக்கிறாள்... அந்த பட்டுப் புடவையில் சாட்சாத் அன்னை மஹாலட்சுமியைப் போல் தோற்றமளித்தாள். வெயிட்... என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?. இன்னொருவனை மணக்க இருக்கும் ஒருத்தியை ரசிக்க உன் மனதிற்கு எப்படி தோன்றுகிறது? ஏன் இந்த பித்துக் குளித்தனம்? சரிதான் .. உரிமை இல்லை.. அப்படியே திரும்பி வேறொரு திசையில் பார்வையை செலுத்துகிறேன்...

பட்டு வேட்டி சட்டையுடன் மாப்பிள்ளை, தோழர்கள் சகிதமாக மணமேடையை நோக்கி...மறுபடியும் வெயிட்... எத்தனை தமிழ் சினிமா பார்த்திருக்கிறோம்... மாப்பிள்ளை மணமேடையில் இருக்கும் பொழுது புரோகிதர் “முகூர்த்த நாழி நெருங்கிடுத்து ...பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ...” அப்படின்னு சொல்லுவார் . இங்கே என்ன தலைகீழா நடக்குது?.. புரோகிதர் “மாப்பிள்ளையைக் கூட்டிண்டு வாங்கோன்னு" சொன்னாப் போலத் தெரியலையே... யோசித்த படியே நிமிர்ந்து பார்க்கிறேன்.. மாப்பிள்ளை நடந்து வந்த திசையில் மணப்பெண் தனது தோழியர்களுடன் ... அப்ப மாப்பிள்ளை...? மணமேடையில் .. ஓஹோ... சரி.. பொண்ணைத் தான் பார்க்கக் கூடாது... மாப்பிள்ளையையாவது எப்படி இருக்கார்ன்னு பார்ப்போம்...? ஏன்கிட்ட இல்லாதது அவர்கிட்ட என்ன இருக்குன்னு யார்ட்டயாவது கேட்கனும்;-)... உற்றுப் பார்த்தேன்.. என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை... புதிதாகத் திறக்கப் பட்ட ஷாம்பெய்ன் பாட்டில் போல என் மனது மகிழ்ச்சியில் பீறிடத் தொடங்கியது... எல்லோர் முன்னிலையிலும் டான்ஸ் ஆடத் தொடங்கினேன்... வெயிட்... உனக்கு டான்ஸ் ஆடத் தெரியுமா... அப்படியே தெரிந்தாலும் இவ்வளவு பெரிய உடம்பை வச்சுக்கிட்டு?.. கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் எனக்குக் குத்துச் சண்டை க்ற்றுக் கொள்ள வேண்டும் என்று சத்தமாக சொல்லிவிட்டு அருகில் இருந்த தம்பியின் தோள்களில் குத்துகிறேன்...

“என்ன சந்தோஷமா...?”
“பின்ன... இருக்கதா?”
“எனக்கு முன்னாடியே தெரியும்...”
“ஏன் சொல்லலை..?”
“சர்ப்ரைஸ்... அதான் பத்திரிக்கை கொடுக்கலை...”

ஓஹோ... அப்படியா.. வெயிட் .. லாஜிக் வலுவா சொதப்புதே.. நம்ம கோடிங் மாதிரி... ஹீம்.. சரி.. பரவாயில்லை.. நல்லாத்தான் இருக்கு... மணப்பெண் மாப்பிள்ளையின் அருகில் அமர வைக்கப் படுகிறாள்... நான் மூன்றாவது வரிசையில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன்... “கெட்டி மேளம்... கெட்டி மேளம்...” ஆனால் அங்கு கெட்டிமேளத்திற்கு பதில் ஹிந்தி கஜினி பாடல்... வெயிட்.. “கெட்டிமேளம்...” இல்லை... ஹிந்தி கஜினி பாடல்... கறுப்புக் கண்ணாடியின் பாதுகாப்பில் மூடியிருந்த எனது இமைகளை திறந்தேன்... என்னை எழுப்ப முயன்ற கைப்பேசியை மீண்டும் அரைத் தூக்கத்திற்கு செல்லப் பணித்து விட்ட எனக்கு மீண்டும் தூங்குவதற்கு மனம் வரவில்லை....

என்னை மணக்கோலத்தில் பார்த்த பிறகு எப்படி தூக்கம் வரும்... நான் தான் அந்த கல்யாணத்தில் மாப்பிள்ளையாக வந்தவன்... என்று உங்களுக்குச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை... ;-).... அப்ப பொண்ணு...?

“ஹி...ஹி... நோ.. கமெண்டஸ்...!”

யாருக்கும் தெரியாமல்...!

சென்னை நகரம் விழித்துக் கொண்டு பல மணி நேரம் ஆயிற்று என்பதற்கு அத்தாட்சியாக சாலைகளில் நெருக்கடி மிகுந்து காணப் பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு நீல நிற சான்ட்ரோ கார் திருவான்மீயூரைத் தாண்டி உள்நோக்கித் திரும்பியது. காரினுள் ஆஸ்கார் நாயகனின் இசை அதிர்ந்து கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் பல நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு மிகப் பெரிய கட்டிடத்தின் கார்கள் நிறுத்தும் இடத்தில் தனக்கென ஒரு இடத்தைத் தேடிக் கொண்டு இளைப்பாறத் தொடங்கியது. காருக்கு ஓய்வு கொடுத்து விட்ட மகிழ்ச்சியில் ஒய்யாரமாக இறங்கினாள் அனுசுயா. காரின நிறத்திலேயே சுடிதார், பொட்டு , கம்மல் எல்லாம்... ஒரே நீல நிற மயம்.. இருபது அடி தூரத்தில் இருந்த லிப்டில் புகுந்து கொண்டாள்.

“விச் ஃப்ளோர் மேம்?”
“ஃபோர்த்”

முதல் மூன்று தளங்களிலும் சலிப்பாக நின்று கிளம்பினாலும் நான்காவது தளத்தில் அனுசுயா இறங்கிக் கொண்டதும் மிகவும் கவலையுடன் கிளம்பி மேல் நோக்கி சென்றது. லிப்ட் கதவுக்ளுக்கு நேர் எதிரே இருந்த சுவரில் தங்க நிறத்தில் “ராஜ் கன்ஸ்ட்ரக்ஸன் பிரைவேட் லிமிடெட்”  என்று பெரிதாக எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள் அனுசுயாவை வரவேற்றன. லிப்டில் இருந்து இறங்கிய உடனேயே அந்த கம்பெனியின் ரிசப்ஷன் ஆரம்பித்து இருந்தது. ரிசப்ஷனில் இருந்தவள் தனது உதடுகளுக்கு மட்டும் தனிக் கவனம் செலுத்தி இருந்தாள். அனுசுயா ரிசப்ஷனை நெருங்கினாள்.

“குட் மார்னிங் மேம்! ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?”
“ஐ வுட் லைக் ட்டூ மீட் யுவர் எம்.டி. மிஸ்டர். ராஜ்”
“ டூ யு ஹேவ் அப்பாயின்மென்ட்?”
“நோ!”
“யுவர் குட் நேம்.. ப்ளீஸ்?”
“அனுசுயா”
“ரீஸன்?”
“பெர்ஷனல்!”
“ப்ளீஸ் பீ ஸீட்டட மேம்... லெட் மீ டாக் டூ ஹிம்”

அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த சோபாவுக்கு தன்னைக் கொடுத்து விட்டு யோசனையில் ஆழ்ந்தாள். தான் செய்து கொண்டு இருப்பது தவறு என்பது அவளுக்கு மிக நன்றாகவே தெரியும்.இது தான் கடைசி தடவை... இனி இது போல் நடந்து கொள்ள கூடாது... எங்கேயாவது கண் காணாத இடத்திற்கு போய் விட வேண்டும என்று எண்ணிக் கொண்டிருந்த போது

“அனுசுயா மேம்”
“எஸ்”
“எம்.டி இஸ் வெயிட்டிங் பார் யு”

உள்ளே நுழைந்தவளுக்கு ராஜின் அறையை கண்டுபிடிப்பதில் எவ்வித சிரமும் இல்லை. பத்தடி தொலைவிலேயே ராஜை அவளால் காண முடிந்தது. ராஜிற்கு ஏறக்குறைய ஒரு நாற்பது வயது இருக்கலாம் வயதிற்கு ஏற்றாற் போல் அவரது தலையில் வழுக்கை எட்டிப் பார்க்க ஆரம்பித்து இருந்தது. ராஜின் அறை குளிரூட்டப் பட்டிருந்தாலும் அனுசுயாவை கண்டதும் வியர்வை மழை பொழியத் தொடங்கியது. மெல்ல கதவைத் தட்டினாள் அனுசுயா.

“மே ஐ கம் இன்?”
“ப்ளீஸ்”
“ராஜ்”
“கடைசியில ஆபிஸுக்கே வந்திட்ட இல்லை... எனஃப் அனு.. என்னால முடியாது..”
“சரி .. நான் அப்போ ஆக வேண்டியதப் பார்க்கிறேன்”
“ப்ளீஸ்”
“கடைசி பேமன்ட்... நோ மோர்.. ப்ளாக் மெயில்”
“எவ்வளவு ?”
“பத்து லட்சம்”
“அமௌன்ட் ரொம்ப அதிகம்... என்கிட்ட இல்லை...”
“அதிகம் தான் .. இல்லைங்கிறது பொய்”
“இல்லை”
“இரண்டு நாளைக்கு முன்னாடி தான் ஒரு பேமன்ட் க்ளியராகி இருக்கு”
“அதெப்படி உனக்கு...?”
“நீ தான் சொன்ன..”
“அமௌன்ட் குறைக்க முடியாதா?”
“விளைவுகளைக் குறைக்க முடியாது...!”
“உன்னோட பழகின பாவத்துக்கு...”
“புண்ணிய்த்தைத் தேடிக்கோன்னு தான் சொல்றேன்”
“எனக்கும் வேற வழியில்லை... எப்போ வேணும்...”
“இங்கே .. இப்போ...”

ராஜ் அதிர்ச்சி அடைந்திருந்ததை அவனின் முகமே காண்பித்து கொடுத்தது.தனது பெரிய மனிதன் வேடத்தைக் காத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த அவன் தனது காதுகளுக்கு ரிசிவரைக் கொடுத்து விட்டு டெலிபோனில் எண்களைத் தட்டத் தொடங்கினான். சில நொடிகளில்..

“ராம் ஹியர்..”
“ராம்... ராஜ் ஹியர்.. கேன் யு ப்ரிங் தேட் டென் லாக் ரூப்பிஸ்?”
“ஸுயர் சார்”

ராம் வரும் வரையில் ராஜ் தனது கண்களினாலேயே அனுசுயாவிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான். ஆனால் எதற்கும் மசியமாட்டேன் என்ற அடமுடன் அமர்ந்து இருந்தாள் அனுசுயா. ஒரு சூட்கேஸில் பத்து லட்ச ரூபாய் மிக நேர்த்தியாக அடுக்கப் பட்டு ராஜின் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது.

“கொடுத்திட்டு எடுத்துக்கோ...!”

இதுவரை அவனை எதை வைத்து மிரட்டி பணம் பறித்துக் கொண்டு இருந்தாளோ அவை எல்லாவற்றையும் தனது கைப்பையில் இருந்து எடுத்து மேசையில் கிடத்தினாள். அவை அனைத்தையும் ராஜ் எடுத்துக் கொள்ள பணம் அனுசுயாவின் கைகளில் ராஜைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு இருந்தது அவனுக்கு என்னவோ போல் இருந்தது.

“குட் டீல் ராஜ்”
“யூ.. யூ...”
“பை ஹனி.. டேக் கேர்...”
“என் பாவம்...”
“உன் கைகளில் இருக்கு...”

சிரித்துக் கொண்டே அனுசுயா வெளியேறினாள். இழந்த பணத்தை நொடிப் பொழுதில் அவனால் சம்பாதிக்க முடியும் என்றாலும் அனுசுயாவின் இந்த அதிரடி நடவடிக்கை அவனை சற்று வில்லனாக யோசிக்க வைத்தது.சற்று கொடூரமாக முடிவு எடுத்தவனாய் தனது கைப்பேசியில் எண்களைத் தட்டத் தொடங்கினான்.

“ஆல்பர்ட்”
“பாஸ்...”
“வேலை ஒன்னு இருக்கு”
“எங்கே... எப்போ..?”
“இப்போ... பளேஸ்... ஈ.சீ.ஆர்.. வண்டி நம்பர்.. டி.என. 07. ஏ1”
“டீல எவ்வளவு?”
“உனக்குத் தேவையானது வண்டிக்குள்ளேயே இருக்கு...மேற்கொண்டு வேணும்னா.. பேசிக்கலாம்..”
“சரிங்க பாஸ்”

அடுத்த அரை மணி நேரத்திற்கெல்லாம் ஒரு செயற்கையான விபத்தில் தனது உயிரைப் பறிகொடுத்து இருந்தாள் அனுசுயா. ராஜின் கைப்பேசி சிணுங்கத் தொடங்கியது.

“வேலை முடிஞ்சிருச்சு”
“யாருக்கும் தெரியாதுல்ல”
“ஒரு ஆக்ஸிடன்ட்... “
“குட்.. பணம்?”
“போதும்..ரொம்ப அதிகம்..”
“யாருக்கும் தெரிய வேண்டாம்...”
“தெரியாது.”

நிம்மதிப் பெருமூச்சுடன் தனது வேலைகளில் மூழ்கத் தொடங்கினான்.

என்னிடம் ஏதாவது வைத்துக் கொண்டால் இப்படித்தான் முடிவு இருக்கும் என்று வில்லத்தனமாக அனுசுயாவின் கைப்பையில் இருந்த போட்டாவில் இருந்து சிரித்துக் கொண்டிருந்தான் ராஜ் ... யாருக்கும் தெரியாமல்....!

Tuesday, January 26, 2010

ஒரு கோப்பை கறுப்பு காபி...!

எனக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை... இன்று படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவே தோன்றவில்லை... காலை மணி பதினொன்றைத் தாண்டி இருக்கலாம்... இதற்கு முன் ஒரு தடவை மருந்து ஊற்றப் பட்டிருந்தாலும் என் கண்கள் மருந்தினைத் தேடின... ஊற்றிக் கொண்டேன்... பசிக்கவில்லை... மாறாக ஒரு கோப்பைத் தேநீரோ இல்லை... காபியோ குடிக்க வேண்டும் போலிருந்தது... கடைக்குச் சென்று பால் வாங்கி வரும் அளவுக்கு சுறுசுறுப்பு என்னிடத்தில் இல்லை... (சோம்பேறின்னு சுருக்கமா சொல்லு சார்...) இன்று கறுப்பு காபிக்கு மாறுவோம் என்று நினைத்தவாறே தயாரிப்பில் இறங்கினேன். நிரம்ப எளிதாகத் தான் இருந்தது. கொதிக்க வைத்த நீரில் அளவுக்கு அதிகமான காபித் தூளையும் சர்க்கரையும் சேர்த்துக் கொண்டு முன்னறைக்கு வந்தேன்.

வாசலில் அழைப்பு மணி என்னை அழைத்தது... ராகைய்யன் நின்று கொண்டு இருந்தார்.

“இந்தா கரண்ட் பில்..”. திறந்து பார்த்தேன்.

“அடுத்த தடவை புது கார்டு போடனும்”

“சரின்னா.. காபி சாப்பிடுங்க... பாலில்லாத காபி...”

“இல்லை .. எனக்கு கீழ்வீட்டில டீ இருக்கும்”. சிரித்தேன். கிளம்பி போனார். கதவை அடைத்து விட்டு நாற்காலிக்கு என்னைக் கொடுத்தேன். எனது ஒரே துணையான தொலைக்காட்சிப் பெட்டியை தூக்கத்தில் இருந்து எழுப்பினேன். படிக்காதவனும் தேவர்மகனும் என்னுடன் சேர்ந்து கொண்டனர்...

சிறு வயதில் இருந்தே எனக்கு டீ, காபியின் மேல் ஒரு அலாதிப் பிரியம்(அப்பாவிடம் இருந்து வந்திருக்கலாம்...). எப்பொழுது என்னை டீ குடிக்க கூப்பிட்டாலும் மரியாதை நிமித்தம் வேண்டிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவேன். கடையில் வேலை மிகுந்திருக்கும் காலங்களில் டீ மட்டுமே சாப்பாடாக இருந்திருக்கிறது. வேலை முடிந்த சமயங்களில் என் சக ஊழியர்களுடன் டீ குடித்து நேரத்தைக் கழிப்பதில் அளவில்லாத மகிழ்ச்சி.... இப்பொழுது அவர்கள் எல்லாம் எந்த இடத்தில எந்த நிலைமையில் இருக்கிறார்களோ? எனக்கு உண்மையில் தெரியாது. ஆனால் அந்த தேநீர் நிமிடங்களின் பசுமைத் தன்மை என் மனதை விட்டு மறைந்து விடுவதாய் இல்லை...

எத்தனை இடங்களில் விதவிதமான தேநீரில் மூழ்கி இருந்தாலும் பனிக்காலங்களின் அதிகாலை நேரங்களிலும் மழைக் காலங்களின் சாரலிலும் அம்மாவினால் பரிமாறப் படும் அந்த ஒரு கோப்பை தேநீருக்கு இணையாக இன்று வரை எதுவும் இருந்தது இல்லை. ஆவி பறந்து கொண்டு இருக்கும் தேநீருடன் வாசற்படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு மழைச் சாரலை ரசிக்கும் அந்த ஆனந்த நிமிடங்கள்... கையில் இருக்கும் தேநீருக்குத் தான் எத்தனை சுவை...! எங்கிருந்து தான் அதற்கு வருகிறது அத்தனை மணம்...! என்னை மறக்க வைத்த அந்த நிமிடங்கள் மறக்காமல் ஒரு பொக்கிஷமாக என் மனதிற்குள்ளேயே அமிழ்ந்து கிடக்கின்றன. பனிக்காலத்தின் அதிகாலை வேளையில் இரவில் போர்த்திக் கொண்ட போர்வையுடன் அதே வாசற்படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு தெருவில் காலையில் பஜனைப் பாடிச் செல்வோரை வேடிக்கை பார்த்துக் கொண்டே தேநீரைப் பருகும் அந்த வேளை... என் வாழ்க்கையின் மிக சுவையான நிமிடங்கள்...

வாசலில் மீண்டும் அழைப்பு.. மீண்டும் ராகைய்யன்... கையில் தேநீருடன்... எதிரெதிரே நாற்காலியில் அமர்ந்தோம்... பேச்சு சுவாரஸ்யத்தில் என் கையில் இருந்த கறுப்பு காபி தனது சூட்டினை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்ததை கவனிக்கத் தவறினேன்... அவருடைய கோப்பை காலியாகியது... இடையிடையே படிக்காதவன் குறுக்கிட்டான்.. சில வாக்குறுதிகளைப் பறிமாறிக் கொண்ட பிறகு ராகைய்யன் விடை பெற்றுச் சென்றார். மீண்டும் தனிமையும் தொலைக் காட்சி பெட்டியும் மட்டும் எனக்குத் துணையானது. தனது உயிரை முழுவதுமாக இழந்து விட்டிருந்த மீதமுள்ள கறுப்பு காபியை ஒரே மடக்கில் குடித்து கோப்பையைக் காலி செய்தேன்...

இன்று குடித்த கறுப்பு காபியில் ஏதோ ஒன்று இருப்பதாய் கருதி அதன் சுவையை எனக்குப் பிடித்ததாய் நம்ப வைக்க என் மனம் பிரயத்தனப் படுகிறது. சுவையில் கரைந்து போயிருந்த நான் யோசிப்பதை நிறுத்திவிட்டு ஜன்னல் வழியாக வெளி உலகத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்..பனிக்காலங்களின் அதிகாலைப் பொழுதும், மழைக் காலங்களின் சாரல்களும் மாறி மாறி என்னைக் கடந்து போய்க் கொண்டே இருக்கின்றன...அம்மாவின் அன்போடு பரிமாறப் படும் ஒரு கோப்பைத் தேநீரைத் தவிர...!

இரயில்...!

இரயில் நிலையங்களில் எப்போதாவது தனித்து அமர்ந்திருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதா? அதுவும் உடன் வந்தவர் இரயலில் பயணிக்க நாம் மட்டும் தனித்து விடப்பட்டால்? ஏதாவது யோசனை செய்வீர்களா? அப்படியெனில் என்ன யோசனை? கடந்த காலமா? நிகழ்காலமா? எதிர்காலமா? எதைப் பற்றி? சமீபத்தில் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது... பிரியப் போகிறவர் என்னுடன் இருக்கும் பொழுது ... அந்த பிரிவின் நிமிடங்களைப் பற்றி மனம் யோசித்துக் கொண்டு இருந்தது... மனம் - கடந்த காலத்திற்கான ஒரு கல்வெட்டு... கல்வெட்டினை செதுக்க ஆரம்பித்த ஆரம்ப நாட்களுக்கு சில நிமிடங்களில் பயணப்பட்டது...

உங்களில் யாருக்காவது உங்களின் முதல் இரயில் பயணம் பற்றி ஞாபகம் இருக்கிறதா? எனக்கு சுத்தமாக.. இல்லை .. இல்லை... அழுக்காக் கூட நினைவில் இல்லை... ஆனால் மகிழ்ச்சியாக செய்த பயணம் ஒன்று நினைவில் உள்ளது. மதியத்திற்குத் தேவையான உணவு வகைகளை காலையிலேயே அம்மா தயார் செய்து எடுத்துக் கொள்ள... மிகுந்த குதூகலத்துடனும் ஆர்ப்பாட்டத்துடனும் எல்லோரும் சேர்ந்து இரயில் நிலையத்திற்குள் நுழையும் அந்த மகிழ்ச்சியான தருணம் என் மனதிற்குள் இன்னும் பசுமையாகவே உள்ளது...அந்த பயணம் காலையில் ஆரம்பித்து சாயங்காலத்தில் முடிந்து விடும்... மதிய நேரத்தின் பிற்பகுதியில் கடலைக் காணும் வாய்ப்பு கிடைக்கும்.. ஆறிப் போன அந்த சோற்று உருண்டையின் சுவை அமுதாக இருக்கும்... மதிய வேளைக்குப் பின் காலியான அந்த இரயில் பெட்டியில் ஓடித் திரிந்ததும் மேலே கீழே தாவி தழுவி... ஜன்னிலின் ஒரத்திற்கு அண்ணனிடம் சண்டையிட்டதும் போனஸாக நினைவுக்கு வருவதைத் தடுக்க இயலவில்லை...

இரயிலை அதிகமாக உபயோகப் படுத்திய கால கட்டம் - முதுகலைப் பட்டப் படிப்பின் போது என்று நினைக்கிறேன். எனது ஊரில் இருந்து ஆறுபத்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த எனது கல்லூரிக்கு அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து பேருந்திலும், வீடு திரும்பும் வேளையில் இரயிலிலும் பயணிக்கப் பட வேண்டிய ஒரு இயந்திரத் தனமான வாழ்க்கைக்கு பழக்கப் படுத்திக் கொண்டிருந்த ஒரு கால கட்டம். எனக்கு பேருந்தின் இரைச்சலை விட இரயிலின் தாலாட்டு மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருந்தது. உடல்நிலை சரி இல்லாமல் பிற்காலத்தில் விடுதியிலும் நண்பர்களின் அறைகளிலும் தங்கி படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது... இரயில் பயணம் எனக்கு அந்நியமானது...! எனது ஊரின் இரயில்வே மேம்பாலத்தில் இரவு நேரத்தில் அமர்ந்து கொண்டு முறை வைத்து அடித்த தம்முகளும்... துக்க காலத்தில் துணைக்கு வந்த நெப்போலியனும் நினைவுச் சின்னங்களாக இன்றும் உள்ளனர்...

‘மருந்து போட்டு விடவா?” திரும்பத் திரும்ப என் தங்கை கேட்டுக் கொண்டு இருந்திருப்பாள் போலும்...? நிகழ்காலத்திற்கு உடனே பயணிக்க வேண்டிய கட்டாயம்... கையில் கட்டித் திரியும் சுவர் கடிகாரம் இல்லை ஆதலால் பையில் பாதி முழுப்பில் இருக்கும் கைப்பேசியை எடுத்து மணி பார்த்தேன்... கண்ணில் இருந்த பனிமூட்டத்தினால் நேரம் சற்று அலைந்து தெளிவற்று 14:55 எனக் காட்டியது. “கிளம்பும் போது ஊத்திக்கலாம்” மீண்டும் மௌனமானேன். ஆனால் இப்போது மனம் பின்னோக்கி பயணப்பட வில்லை மாறாக திடிரென்று அலை அலையாய் தோன்றிய மக்கள் கூட்டத்தைக் காணத் தொடங்கினேன்...

சிலர் முகத்தில் புன்னகை.. சிலர் முகத்தில் வேதனை.. சிலர் முகத்தில் பயணக் களைப்பு.. நடக்க இயலாத முதியவர்களின் சக்கர நாற்காலிப் பயணம்... சிறு குழந்தைகளின் உற்சாகம்.. இப்படி எல்லா உணர்ச்சிகளும் அந்த இடத்தில் நிறைந்து காணப் படுகிறது..இரயில் எனக்கு மிக சிநேகமாக இருந்தாலும் பல சமயங்களில் எனக்கு வில்லனாக மாறிவிடும். ஒவ்வொரு தடவை நான் எனது ஊரில் இருந்து தனித்துக் கிளம்பும் அந்த நொடிகளில் “இரயில் மட்டும் இன்னைக்கு கொஞ்சம் தாமதமா வந்தால் எப்படி இருக்கும்?” என்று வில்லத்தனமாக யோசித்து முடிக்கும் வேளையில் சரியான நேரத்திற்கு தவறாமல் வந்து நிற்கும் இரயிலை சபிக்காமல் விட்டதில்லை... இரயிலை உற்று நோக்கினேன்... அது இப்போது பயணிகளை பாரமாக சுமக்கும் ஒரு சாதாரண வாகனமாக எனக்குத் தோன்றவில்லை... பலரின் பாசங்களை இணைக்கும் பாலமாக, பிரிவுகளின் தவிர்க்க முடியாத சின்னமாய்.. ஒரு உயிருள்ள மனிதனாய் தோற்றமளித்தது... சோகமானவர்களுக்கு இரயிலின் சப்தம் ஆறுதலாகவும், களைப்பானவர்களுக்கு களைப்பு நீங்க ஒரு தாலாட்டாகவும், மகிழ்ச்சியாய் இருப்பவர்களுக்கு அது ஒரு இசையாகவும் மாறிப் போய்விடுவதாகவே எண்ணுகிறேன்... ஒரு வேளை இரயிலுக்குப் பேசும் சக்தி இருந்தால் அது கூறும் கதைகள் பல யுகங்களுக்கு நீண்டதாய் இருக்குமோ?

“அண்ணா...”. திரும்பினேன். மணி 15:05 என்று காண்பித்து விட்டு அடுத்த நிமிடத்தைக் காட்டும் அவசரத்தில் எண்களுக்கு இடையே இருந்த இரு புள்ளிகள மட்டும் அசுர கதியில் துடித்துக் கொண்டு இருந்தது. இரயலின் உள்ளே சென்று கண்களில் மருந்தை ஊற்றிக் கொண்டு கீழே இறங்கினேன். கண்களில் மருந்தை ஊற்றிய உடன் வரும் கண்ணீர் நேற்றுடன் நின்று விட்டது.வழக்கம் போல் அறிவுரை மழையில் நனையத் தொடங்கினேன். தூரத்தில் விழும் வெயிலை விட அந்த அறிவுரை என்னை சுடத் தொடங்கியது. நிறுத்தினேன். எனது உரையை ஆரம்பித்தேன்... அநேகமாக எனது உரை என் தங்கையுடன் சேர்த்து இரயிலையும் அதிகமாகவே பாதித்து இருக்க வேண்டும்... சிணுங்கிக் கொண்டு கிளம்ப ஆரம்பித்தது... சிறு கரங்களின் விரல்கள் அசைவு மட்டும் சில நொடிகளுக்குத் தெரிந்து பின்பு மறையத் தொடங்கியது... என்னைக் கடந்து செல்லும் இரயில் பெட்டிகள் என்னைப் பார்த்துக் கையசைத்துச் சென்றன. கடைசிப் பெட்டி கடக்கும் வரை கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்... கண்களின் பனிமூட்டம் அந்த இரயிலின் பிரிவை எனக்குள் ஒரு சித்திரமாக பதிந்தது. “தங்களின் பயணம் இனிதாக..” அலைப் பெருக்கி தனது வாழ்த்துக்களை சொல்லத் தொடங்கிய தருணத்தில் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்...

ஏனோ தெரியவில்லை... மருந்துகளின் துணை இல்லாமலேயே கண்ணில் இருந்து ஒரு துளி சற்றென்று யாருக்கும் தெரியாமல் வெளியே எட்டிப் பார்த்தது...!

Saturday, January 9, 2010

அவதார்…!




यदा यदा हि धर्मस्य ग्लानिर्बवति भारत।
अब्य्त्तानमधर्मस्य तदात्मानम् सृजाम्यहम्॥
परित्राणाय सादूनाम् विनाशाय च दुश्कृताम् ।
धर्मसम्सापणार्ताय सम्बवामि युगॅ युगॅ॥

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகின்றதோ அப்போதெல்லாம் இறைவன் அவதரிக்கிறார். அந்த அவதாரம் கொடியவர்களை அழித்து நல்லவர்களைப் பாதுகாக்கிறது. இவ்வாறு புனித கீதை நமக்கு பகர்கிறது. அவதார் படமும் இந்த மையக் கருத்தினை வலியுறுத்திச் செல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது.

படத்தின் கதையினை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள் இருப்பினும் இங்கேயும் ஒரு தடவை ரொம்ப சுருக்... மனிதர்கள் வேற்று கிரகம் ஒன்றிற்கு பயணித்து அங்கிருக்கும் எரிபொருளுக்காக அக்கிரக வாசிகளுடன் போரிடுகின்றனர். இதயமுடைய மனிதர்களின் சில பேரின் முயற்சியினாலும் உதவியினாலும் பலமே இல்லாத அந்த கிரகவாசிகள் மனிதர்களை வெற்றி கொள்கின்றனர்...

கதை என்று எடுத்துக் கொண்டால் அவ்வளவே...! ஆனால் அதை நமக்குச் சொல்லும் விதம் ... அதிலும் முப்பரிமாணத்தில் திரைப் படத்தைக் காணும் போது அத்துணை அருமையாக உள்ளது. பச்சை பசேல் என அந்த கிரகமே எத்துணை அழகாக இருக்கிறது... வானாளவிய மரங்கள் , அருவிகள்... கொடிய மிருகங்கள்..., ட்ராகன்கள் .. அந்த கிரக வாசிகள்... இயக்குநரின் கற்பனை இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது...

மனிதர்களில் சில பேர் அந்த கிரகவாசிகள் போலவே படிமம் எடுக்கப் பட்ட உடலுக்குள் புகுந்து கொண்டு அவர்களுள் ஒருவராக கலக்க முயற்சிக்கின்றனர். அறிவியல் அசுரத் தனமாக வளர்ந்திருக்கும் எதிர்காலத்தில் இது உண்மையில் சாத்தியமானாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை. நமது கதையின் நாயகன் ஜாக்கும் கிரகவாசிகளுடன் பழகுவதற்கு அனுப்பி வைக்கப் படுகிறார். அதாவது அவர்களுடன் பழகி போரில்லாமல் தங்களது இலக்கை அடைவதற்கான திட்டம்.

முதலில் ஜாக்கை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் பின்னர் அவர்களின் புனிதமான ஈவா அவனை அங்கிகரிப்பதாக தோன்றியதும் தங்களது பழக்க வழக்கங்களைக் கற்று கொடுக்க தீர்மானிக்கின்றனர். அதற்கு அக்கிரக வாசிகளின் தலைவரின் மகள் பணிக்கப் படுகிறாள்... குதிரையேற்றம், மரங்களுக்கு இடையே தாவுதல், வேட்டையாடுதல் முதலிய அனைத்திலும் நமது தலைவர் ஜாக் மிக விரைவாக கற்றுத் தேர்கிறார். கடைசியில் கற்றுக் கொடுத்த தலைவரின் மகளிடமே காதலில் விழுகிறார். “வாட் த ஹெல் யூ ஆர் டூயிங் ஜாக்?” ;-)..

அக்கிரக வாசிகள் ஒவ்வொருவரும் நமது வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி போல ட்ராகன்களை வைத்துள்ளனர். ஆனால் ட்ராகன்களைப் பழக்குவது என்பது நாம் தொலைக்காட்சி பெட்டி வாங்குவது போல அத்துணை எளிமை கிடையாது. மிக உயர்ந்த மலை உச்சிக்கு ஜாக்கை அழைத்துச் செல்கின்றனர் அவனுக்கான ட்ராகனைத் தேர்ந்து எடுப்பதற்கு...! இந்த இடத்தில் கிராபிக்ஸில் புகுந்து விளையாடி இருக்கின்றனர்....

“இதில் எக்கச் சக்கமானவை இருக்கின்றனவே.. எதை தேர்ந்தெடுப்பது?”

“எது உன்னைத் தேர்ந்தெடுக்கிறதோ... அதை!”

“எது என்னைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?”

“எது உன்னை கொல்ல வருகிறதோ.. அது தான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்று அர்த்தம்”

“அது சரி...!”

நான் ரசித்து பார்த்த வசனங்களில் மேற்கண்டவையும் ஒன்று...;-).. சரி.. எல்லவற்றையும் கற்றுக் கொண்டாகி விட்டது... தலைவரின் மகளையும் வீழ்த்தியாகி விட்டது.. அடுத்து...? மனிதர்களின் படைக்குத் தளபதியாக வரும் அந்த தருதலை பொறுமை இழந்தவனாகப் படை எடுத்துச் செல்கின்றான்... நமது ஜாக் எவ்வளவோ தடுத்தும்... “நீ என்ன பெரிய ஜட்ஜா.. ” என்று நம்மூர் கவுண்டமனி போல் கேட்டு விட்டு தாக்குதலுக்குச் செல்கிறான்.... அந்த பசுமை வாய்ந்த கிரகத்தை பாழ்படுத்துகிறான்... இதனைக் கண்டு பொறுக்காத மனிதர்களிலே சிலர் நமது ஜாக்கிற்கு உதவி செய்கின்றனர்... மீண்டும் அக்கிரக வாசிகளின் கூட்டத்திலே ஒருவனாக கலந்து மனிதர்களை எதிர்த்துப் போரிடுகின்றான்.

இதில் ஜாக்கிற்கு உதவி செய்த மனிதர்கள் அனைவரும் வீர மரணம் அடைகின்றனர். அந்த பைலட் பெண் இறந்ததில் எனக்கும் சந்துருவுக்கும் சற்று வருத்தம் ;-)... மனிதர்களிடம் இருக்கும் ஆயுதங்களை ஒப்பிடும் பொழுது அக்கிரக வாசிகள் ஏறக்குறைய நிரயுதபாணிகள் என்றே சொல்லி விடலாம்... இருப்பினும் அவர்கள் இறுதியில் மனிதர்களின் போர்வையில் இருக்கும் அந்த எமக் கிரகர்களை வெல்லுவது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

மனிதனாக வரும் ஜாக்கிற்கு கால்கள் ஊனம்...! முதல் முறையாக அவன் கிரக வாசியாக மாறும் பொழுது தனக்கு கால்கள் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் ஓடித் திரிவது... நெகிழ்ச்சி..! தலைவரின் மகளாக வரும் நமது ஹீரோயினைப் பற்றி சொல்லித் தான் ஆக வேண்டும்... அத்துணை அழகு .. அருமை... நான் நடிப்பை சொல்றேன்பா... வீரம்... சோகம்... எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில் கொண்டு வந்து கொப்பளிக்கிறார்.. உண்மையில் அவளை என்னால் வேற்று கிரகவாசியாக வேற்றுமை படுத்த இயலவில்லை... ஏனோ... படம் முடிந்தும் மிகுதியான நேரம் என் மனதினுள் நிலைத்து இருந்தாள்...!

படத்தின் மற்றொரு ஹீரோ.. அதன் இயக்குநர்... டைட்டானிக் படத்தின் அதே இயக்குநர்தான்.. “நான் இந்த உலகத்திற்கே அரசன்” என்று ஆஸ்கார் மேடையில் டைட்டானிக் ஹீரோவாகவே மாறிய அதே ஜேம்ஸ் கேமரூன் தான்... உண்மையில் மனிதன் ஏகத்திற்கு உழைத்திருக்கிறார்... பொதுவாக வேற்று கிரக வாசிகளை... ஜந்துக்களாகவே காண்பிப்பதற்கு பதில் மனித ரூபத்தில் காண்பித்ததற்காகவே இவருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்... நினைத்ததை நடத்தி முடிப்பவர்கள் என்று சில பேர்தான் உண்டு... அது அவதார் கதையில் வரும் ஜாக்கிற்கு பொருந்துவதோடு அல்லாமல்... இன்னொருவருக்கும் பொருந்தும்... அவர்.. ஜேம்ஸ் கேமரூன் ...

இன்னும் நிறைய எழுதிக் கொண்டே போகலாம்.... இந்தப் படம்.. சிறுவர்களுக்கும்... சிறுவர்கள் மனநிலையில் உள்ள என் போன்ற வயதானவர்களுக்கும் ;-)... மற்றும் அறிவியல் புனைக் கதைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கும்... நிச்சயம் இந்த அவதார் பிடிக்கும் என்பது என் அபிப்ராயம்...!

பி.கு; இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த பொழுது நான் எனது கல்லூரி காலகட்டத்திற்கு திரும்பி விட்டதாகவே தோன்றியது... ஏனென்று தெரியவில்லை... என்னை மறந்து மகிழ்ச்சியாக ஊளையிட்டு கொண்டு இருந்தேன்... இதற்காக மட்டும் ஒரு ஸ்பெஷல் நன்றி... என் தம்பி சிவாவிற்கு ...! ;-)...