Monday, November 16, 2009

சிவபூஜையில்...!

என் கண்ணாடியை என்னால் நம்பவே முடியவில்லை... எள்ளளவும் அவள் மாறவில்லை... அதே அழகு ... அதே பொழிவு... என் முன்னே நடந்து சென்றாள். இடம் ஃப்ராங்பர்ட் விமான நிலையம். இவள் எப்படி இங்கே? இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் நேரடி விமானப் போக்குவரத்து இருப்பதாகக் கேள்விப் பட்டோமே? அது யார் கூட வருவது? கடவுளே அது அவளின் கணவன்! அவளுக்குக் கல்யாணம் நடந்ததை எப்படி மறந்தேன்? ஓ... குழந்தை நடக்க வேறு தொடங்கி விட்டதா?. காலச் சக்கரம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது?

குழந்தை அப்படியே அவளை உரித்து வைத்திருந்தது. அவளையும் அவள் கணவனையும் சற்று உற்று நோக்கினேன். சரியான ஜோடிப் பொருத்தம்... ஒருவருக்காகவே மற்றொருவர் படைக்கப் பட்டிருப்பது போல் இருந்தது. என் கண் பட்டு விட்டது என்றே தோன்றியது.. சுற்றிப் போடச் சொல்ல வேண்டும்.. மனது சிறிது பின்னோக்கி செல்லத் தொடங்கியது...

கடைசியாக நடந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்றது... அது அவள் என்னை நிராகரித்த தினம். என் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்த தினம்... என்ன அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை செருப்பால் அடிப்பது போன்று இருந்தது... என்னைப் பற்றி எனது உருவத்தைப் பற்றி என் மனதில் இருந்த எண்ணங்களை அடியோடு திருப்பிப் போட்டு விட்டாள்... என்னைப் பற்றிய உலகத்தின் பார்வை எனக்குள் ஒரு அருவருப்பை உண்டு பண்ணியது... அதற்குப் பிறகு வந்த சபிக்கப்பட்ட அந்த ஒன்றரை வருடங்களைக் கடப்பதற்கு இன்னொரு பிறவி எடுத்து வந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்...

அவள் கூறிய வார்த்தைகள் அன்று எனக்குள் என்னைப் பற்றி எரிச்சலை ஏற்படுத்தி இருந்தாலும் இன்று அவளைக் குடும்பத்துடன் பார்ப்பதற்கு மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது... என்னைக் கடந்து போய்விட்டாள்.. ஒருவேளை கவனியாமல் விட்டிருக்கலாம். பேசலாமா? பழையவைகள் அவளுக்கு ஞாபகம் இருக்குமா தெரியவில்லை ... அது அவளுக்குக் கசப்பான தினமா என்பதும் தெரியவில்லை.. ஒருவேளை நான் இப்பொழுது பேசுவதால் ஏதேனும் உள்நோக்கம் கற்பித்துக் கொள்வாளோ? அவளைப் பொறுத்த வரை நான் யாரோ ஒரு மூன்றாவது மனிதன்... அதனால் மனது பேசுவதற்கு ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்தது...

என்ன ஆச்சரியம்? போனவள் தன் கணவனுடன் திரும்பி என்னை நோக்கி வருகிறாள்... ஆகா... நான் இப்பொழுது நல்ல வேளையில் இருப்பதை தெரிவிக்க ஒரு வாய்ப்பு... நான் ஒன்றும் உதவாக்கறை இல்லை என்று அறிவித்து விட வேண்டும்... ஆனால் எதற்கு? ஒரு பிரயோஜனமும் இல்லையே?... சரி அடக்கி வாசிப்போம்...

அருகில் வந்தாயிற்று... என்னை நோக்கி புன்னகைக்கிறாள்... அவளின் கணவனும் புன்னகைக்கிறான்... நானும் எனது அக்மார்க் அசட்டுப் புன்னகையை உதிர்க்கிறேன்...

“சேக்...”

அப்படா என் பெயரை ஞாபகத்தில் வைத்திருக்கிறாள்... ஆனால் அவள் ஏன் வேறு ஒரு குரலில் பேசுகிறாள்... அதுவும் எனக்கு பழக்கப்பட்ட ஒரு குரலில்...

“எழுந்திருங்க...!”

நான் கொஞ்சம் உயரம் கம்மிதான்... இருந்தாலும் ஏற்கனவே எழுந்து நிற்கிறவனை எழுந்திருங்கன்னு சொல்றது ரொம்ப ஓவர்.. மறை கழண்டு விட்டதா என்னவளுக்கு.. மன்னிக்க.. அவரவளுக்கு?

மெதுவாக கண் விழித்தேன்... கார்த்திக் என்னை தூக்கத்தில் இருந்து எழுப்ப முயன்று கொண்டு இருந்தார்....

ஹீம்... சிவபூஜையில் கார்த்திக்... வேறு என்னத்தைச் சொல்ல?

:-)

No comments:

Post a Comment