“என்னோடஅப்பாவுக்கு ஆப்பரேஷன் பண்ணி இரண்டு மாதத்தில செத்துப் போயிட்டாரு” சொல்லும் போது ஒரு அசட்டுப் புன்னகை உதிர்த்தார்..
“அது எதுக்கு இப்போ சொல்றிங்க?” மறுபடியும் ஒரு புன்முறுவல் அவரிடமிருந்து...
“உங்களுக்கு எதுவும் ஆகாது... ஆகவும் விட மாட்டேன்”... உன்னால எதுவும் முடியாதுடா என்பது போல ஒரு பார்வை... ஒரு புன்னகை...
அப்பல்லோவை விட்டு வெளியே வந்தேன்... கால் போன போக்கில் போனேன்.... எனக்குத் தெரிந்த அத்துனை தெய்வங்களையும் உதவிக்கு அழைத்தேன்... எல்லோராலும் கை விடப்பட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்...
மருத்துவ செலவிற்கு எனது சம்பாத்தியம் மட்டுமே...! சென்னைக்கு பெட்டியைக் கட்ட வேண்டிய சூழ்நிலை...
அவசர சிகிச்சைப் பிரிவு
“நீங்க இப்போ போகலாம்...”
சிறிது நேரம் அருகிலேயே நின்று கொண்டு இருந்தேன்... பிறகு மெல்ல எழுப்பத் தொடங்கினேன்... மெதுவாகக் கண் திறந்தார்...
“எப்படி இருக்கீங்க?”
“ நல்...லா.... இரு...க்...கி..றே..ன்” எனக்காகப் பொய் சொன்னார்... ஒரு வேளை நான் அப்படி ஒரு கேள்வியே கேட்டிருக்கக் கூடாதோ?
“சென்னைக்குக் கிளம்புறேன்...!”
அந்த வலியுடனும் வேதனையுடனும் ஒரு சிறு புன்னகையுடன் “போ...யிட்...டு... வா...” என்றார். அதுதான் நான் கேட்கப் போற கடைசி வார்த்தை அப்படிங்கறது எனக்கு அப்போ தெரியாது...
“உடம்பை பார்த்துக்கோங்க... எல்லாம் சரியாயிடும்.. கவலைப் படாதீங்க... நான் வந்து உங்களைக் கூட்டிட்டு போறேன்”... சொல்லி முடித்த பிறகு தான் கவனித்தேன்.. நினைவு தவறி இருந்தது...
அழுது கொண்டே மருத்துவமனையிலிருந்து கிளம்பிச் சென்றேன்...
........
“ஹலோ.... சொல்லுங்க மாமா”
“எல்லாம் முடிஞ்சிருச்சு”
“மாமா...?!” கண்கள் இருட்டிக் கொண்டு வருவதைப் போல் இருந்த்து...
“கிளம்பி வாத்தா...”
“வர்றேன் மாமா... ஆஸ்பத்திரியில பணம்...”
“சண்முகம் ரெடி பண்ணிட்டாரு... அவருக்கு அப்புறம் கொடுத்துக்கலாம்”
நேராக எனது மேனஜரிடம் சென்றேன்.
“மாலதி... “
“ம்.. சொல்லு”
“அப்பா தவறிட்டாரு” கண்களில் நீர் கட்டத் தொடங்கி இருந்தது...
“.....”
“எப்போ வருவேன்ங்கறத நான் உங்களுக்கு கால் பண்ணி சொல்றேன்” பதிலுக்குக் கூட காத்திருக்காமல் கால்கள் நகரத் தொடங்கின
“சேக்... பணம் ஏதாவது”
“வேண்டாங்க... நான் பாத்துக்கிறேன்...”
நள்ளிரவு...! தெரு முழுவதும் கூட்டம்... ஆட்டோவைக் கட் பண்ணி விட்டு தெருவுக்குள் நுழைந்தேன்... அது வரை எனக்குள் அடக்கப் பட்டிருந்த உணர்ச்சிகள் பீறிட்டது...
“பையன் வந்திட்டான்...” கூட்டத்தைத் தாண்டி உள்ளே சென்றேன்...
அங்கு அப்பா ஐஸ் பெட்டியுனுள் வைக்கப் பட்டிருந்தார்... முகத்தைப் பார்த்தேன்.. ஒன்றரை மாதத்திற்கு முன்பு நான் பிரியும் பொழுது என்னைப் பார்த்து பூத்த அதே புன்னகை....
என் ஆயுளில் முதல் முறையாக நான் கதறி அழுவதைத் தடுக்காமல் கண் மூடி புன்னகையை உதிர்த்துக் கொண்டிருந்தார்...
“நீ பட்ட கஷ்டமெல்லாம் போயிடுச்சே...”
“அழாதேப்பா... நீ தான் எல்லோருக்கும் ஆறுதல் சொல்லனும்...”
“என்னால தான்... என் முடிவால தான் இப்படி ஒரு இழப்பு “ கையை பலம் கொண்ட மட்டும் தரையிலும் தலையிலும் அடித்துக் கொண்டேன்...
...........
நடந்து முடிந்த சம்பவங்கள் தூங்க ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களில் படமாய் ஓடி முடிந்திருந்தது. தூக்கம் கலைந்து எழுந்து நின்றேன்...
“சாராயம்... சாராயம் ... வேணும்.. உன்ங்கிட்டயே வந்திர்றேன்” எனக்குள்ளேயே பேசிக் கொண்டு பணப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினேன்... ஜெர்க்கின் கூட எடுத்துக் கொள்ளத் தோன்ற வில்லை...
கண்ணில் நீர் மல்க... தங்கும் விடுதியை விட்டு கீழே இறங்கினேன்.... அப்பொழுது.... வானமும் என்னோடு சேர்ந்து அழத் தொடங்கி இருந்தது.
வானத்திற்கு நானும் எனக்கு வானமும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக் கொண்டோம்... எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் என்று தெரியவில்லை... எப்பொழுது வந்து படுத்தேன் என்பதும் நினைவில் இல்லை...
மழை போகும் பொழுது வாங்கிக் கொள்வதாகக் கொடுத்து வைத்திருந்த சளியையும் காய்ச்சலையும் திரும்ப வாங்கிக் கொள்ளாததால் அது என்னுடனே தங்கி விட்டது... இன்று மழை வரட்டும் எப்படியாவது திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்..
ஹெல்சிங்கியிலிருந்து திரும்ப வேண்டிய நேரம் வந்து விட்டது... மழை வரத் தொடங்கியது... திருப்பிக் கொடுத்து விட்டேன்...
விடுதிக்குத் திரும்பிய பின்:
“எப்படி இருக்கு?”
“பரவாயில்லைங்க”
அருகில் வந்த முருகைய்யன் என்னைத் தொட்டுப் பார்த்தார்...
“டேய் ... கிளம்பும் போது இருந்த ஜீரம் இப்போ இல்லை... எப்படி?”
மர்மப் புன்னகையைப் பதிலாகக் கொடுத்தேன் என் அப்பாவைப் போல :-)....
Thursday, November 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment