என்றைக்கும் இல்லாமல் இன்று இந்த துறைமுகம் இவ்வளவு மக்கள் கூட்டத்துடன் காணப்படுகிறதே? அயல் நாடுகளிலிருந்து யாரும் விருந்தாளிகள் வருகின்றனரா? வரவேற்பதற்கு யாரையும் காணோமே? அட... ஏன் கூட்டத்தில் உள்ள மக்களின் முகத்தில் ஏதோ சோகம் நிழலாடுகிறது? என்ன தான் நடக்கிறது அங்கே? சற்று அருகில் போய் தான் பார்ப்போம்.
“இருந்தாலும் நமது ராஜ்ஜியத்திற்கு இப்படிப் பட்ட இக்கட்டான சூழ்நிலை வந்திருக்கக் கூடாது”
“மன்னர் மிகவும் மனமுடைந்துள்ளாராமே?”
“எத்தனைப் போர்களில் ஜயத்தினைக் கண்டு இருந்தாலும் எத்துனைப் பேரிடர்களைச் சந்தித்து இருந்தாலும் எதற்கும் கலங்காத நமது மன்னர்... இந்த விசயத்தில் மனக் கலக்கம் அடைந்து இருப்பது நியாயம் தானே?”
எல்லா பேருக்கும் என்ன நடந்தது என்ன நடக்கப் போகிறது என்று தெளிவாகத் தெரிந்து இருக்கிறது போலும்... நமக்குமட்டும் ஒன்றும் தெரியவில்லை... கேட்டு விடலாமா? அவர்களின் சோகம் நமக்கு பாதகம் ஆகிவிடுமோ? ஆள்வேறு ஆறரை அடியில் அஜானுபாகுவாக இருக்கிறான்... கூட்டத்தில் யாரும் நமக்கு ஏற்றாற் போல் இல்லையே? சரி அவர்களாக விசயத்திற்கு வரும் வரை நாம் இவர்கள் பேசுவதைக் கவனிப்போம்...
“மன்னர் நாட்டை விட்டு கிளம்புகிறாரா என்ன? ஒரே ஒரு படகு மட்டும் தான் இருக்கிறது?”
“அந்த செய்தியைக் கேட்டதில் இருந்து மன்னரின் உடல் நிலை மோசமாக ஆகிக் கொண்டே வருகிறது... அதனால் வேறு யாராவது செல்வார்களாயிருக்கும்...”
“நமது படையினை அனுப்பி வைக்கலாமே?”
“நான் கேள்விப் பட்டவரை நம்மை எதிர்க்கும் சக்தி எது என்றே புலப்படவில்லையாம். அதனால் மன்னர் நமது படையினை அனுப்ப மறுத்து விட்டாராம்!”
விசயம் பெரிதாகத் தான் இருக்கும் போல இருக்கிறது. இதற்கு மேல் நமது ஆவலை அடக்க முடியவில்லை... அதோ நமது கண்களுக்கு புலப்படுகின்றார் ஒரு வயோதிகர் ... அவரிடம் நமது கேள்விக் கணைகளைத் தொடுத்துப் பார்ப்போம்.
“ஐயா... ” நமது குரல் கேட்டு சற்று நிமிர்ந்து பார்க்கிறார்.. என்ன வேண்டும் என்று கண் ஜாடை செய்கிறார்...
“இங்கு ஏன் மக்கள் எல்லாம் கூடி இருக்கிறீர்கள்... ஏன் எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறீர்கள்... என்ன நடந்தது?”
சற்று நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் தலையை குனிந்து கொண்டார்.. மறுபடியும் ஒருமுறை முயற்சித்துப் பார்ப்போம்..
“ஐயா...” அருகிலிருந்த மற்றொருவர் நம்மை நோக்குகிறார்.
“அவரிடம் உங்களுக்கு என்ன வேண்டும்? அவருக்கு இயற்கையிலேயே காது கேளாது...”
அடப்போங்கப்பா... இவ்வளவு பெரிய கூட்டத்தில நமக்கு ஒரு காது கேளாத வயது முதிர்ந்தவர் தான் கிடைத்தாரா? சரி.. நமக்குப் பதில் சொன்னவரிடமே நமது கேள்விகளைத் தொடுப்போம்..
“அது வந்து....” சொல்ல ஆரம்பிப்பதற்குள் தூரத்தில் இருந்து சங்கொலிகள் முழங்க ஆரம்பித்திருந்தன.. எல்லோரும் சப்தம் வந்த அந்த திசையில் திரும்பி நின்றனர்.
நாமும் திரும்பிப் பார்க்கிறோம்.
ஒரு வெண்ணிறப் புறவி ஒன்றின் மேல் ஒருவர் கம்பீரமாக அமர்ந்து கொண்டு வருகிறார். உடல் வலிமை பெற்றுத் தோன்றினாலும் முகத்தில் கவலை தோய்ந்திருப்பது நமக்குத் தெரிகிறது. கவலையினால் புறவியின் வேகமும் குறைந்து காணப்படுகிறது போலும்...!
அது யார் மன்னருக்கு மிக அருகில் வருவது? அவரின் தோற்றம் வீரனைப் போல் இல்லையே... ஒரு காவி உடை மட்டுமே தரித்திருக்கிறாரே...? அரண்மனை முதன்மை மந்திரவாதியோ?
“இராஜாதி ராஜா ராஜ கம்பீர..... மன்னர் கிருஷ்ணர் வாழ்க.. வாழ்க...!”
மன்னருக்கு அருகில் வருபவர் அத்துனை முக்கியமானவர் இல்லை போலும்.. அவருக்கு யாரும் துதி பாடவில்லையே?
மன்னரும் அவருக்கு அருகில் வந்தவர் மட்டும் கீழே இறங்கி துறைமுகத்தை நோக்கி சென்றனர். மற்றவர்கள் விலகி நின்றனர்... இருவரும் அங்கிருந்த படகிற்கு அருகில் சென்றனர். என்ன செய்வது நமக்கு மட்டும் அவர்கள் பேசுவது கேட்கிறது...
“திருமலை..”
“மன்னா..”
“நமக்கு வந்திருக்கும் இந்த சோதனை...”
“அதிகாலை பனித்துளி போல விலகி ஓடும் மன்னா...”
“உனக்குத் தேவையான போர் வீரர்களை அழைத்துச் செல்லலாமே..திருமலை..”
“மன்னா.... தங்களின் ஆணைக்கிணங்கவே எமக்கு உத்தேசம்.. ஆனால்.. இந்த பணியினை முடிப்பதற்கு எத்துனை கால அவகாசம் எடுக்கும்... என்னென்ன அபாயங்கள் உள்ளன என்பதெல்லாம் தாங்கள் அறிந்தவையே...! அதனால் நான் தனியே சென்று தங்களின் ஆணையை நிறைவேற்றுவதற்கு உத்தேசிக்கிறேன் மன்னா...”
“உன் மேல் எமக்கு அதீத நம்பிக்கை திருமலை... ஆதலால் தான் நீ தனியே பயணிப்பதற்கு சம்மதித்தோம்...உன் மாறு வேடம் மிகக் கச்சிதம்.. என்னாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை...”
“மன்னா... நமது சேனாதிபதிக்கும் இந்த விசயத்தில் தொடர்பு இருப்பதாக யூகிக்கிறேன்... அதனால் தான் இந்த மாறு வேடம்...”
“நாம் பேசி வைத்த படி அவ்வப்போது தகவல்கள் அனுப்பிக் கொண்டே இரு... நமது படைகள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்கும்”
“உத்தரவு மன்னா...!”
“வெற்றியுடன் திரும்பி வா... ”
திருமலை யார்...? எங்கே கிளம்புகிறான்? அதுவும் மாறு வேடத்தில்...? எல்லோருக்கும் தெரிந்த ஒருவரை எல்லோருக்கும் தெரியாமால் யாரோ ஒருவரை அனுப்புவதைப் போல அனுப்புகிறார்களே..? எதற்காக..?
திருமலை படகில் ஏறிக் கிளம்பி விட்டான்... படகு கடலில் தவழ்ந்து முன்னேறி செல்லத் தொடங்கியது.
இங்கே துறைமுகத்தில...
“மக்களே... நமது ராஜ்ஜியத்திற்கு மிகப் பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளதை எல்லோரும் அறிவீர்கள்... அண்டை நாடுகளின் படை எடுப்பாக இருப்பின் நமது படைகளை வைத்தே சாதித்து விடலாம்... ஆனால்... நமக்கு விடப் பட்ட அறைகூவல் மந்திர தந்திரங்கள் நிறைந்தது.. அதற்கான முதல் இழப்பே...” மன்னரின் குரல் தழுதழுக்கத் தொடங்கியது...
அருகில் இருந்த மந்திரி சற்று சுதாரித்துக் கொண்டு
“இழந்ததை மீட்பதற்காக நமது ராஜ்ஜியத்திலேயே மந்திர தந்திரங்களில் பெயர் பெற்ற கால பைரவனை அனுப்பி வைக்க உத்தேசித்து... அதோ அவர் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்... அவர் பயணம் வெற்றி பெற எல்லோரும் இறைவனை பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன்..!”
“மன்னர் கிருஷ்ணர்... வாழ்க..!”
“மந்திரி தெனாலி ... வாழ்க...!”
“மாயாவி காலபைரவன் ... வாழ்க...!”
படகில் சென்று கொண்டிருந்த திருமலைக்கு மக்களின் வாழ்த்தொலி கேட்டது... சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான்...
சற்று நேரத்திற்கெல்லாம் எல்லோரும் இடத்தைக் காலி செய்து விட ... கதிரவன் தனது வீடு திரும்ப எத்தனிக்கத் தொடங்கினார்...
நமது திருமலையோ படகு வலிப்பதிலேயே மும்முரமாக இருந்தான்... அவனுக்குப் பின்னால் இருந்து ஒரு நாக சர்ப்பம் எழுந்து படம் எடுத்து நிற்பதை அவன் கவனிக்க வில்லை...!
“திருமலை...”
திரும்பி பார்த்த திருமலைக்கு மூர்ச்சையாகி விடுவோமோ என்ற ஐயம் ஏற்பட்டது... நமக்கும் தான்... அந்த நாக சர்ப்பத்தின் தலை மட்டும் மிகப் பெரிதாக வளர்ந்து திருமலை உயரத்திற்கு நின்றது...
“திருமலை...”
நாக சர்ப்பந்தான் பேசுகிறது... திருமலை துணிவுடன் எதிர்கொள்கிறான்... ஆனால் நமக்கோ மூர்ச்சையாகி விட்டது...
திருமலை என்ன ஆனான்?
தொடரும்...!
Sunday, November 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment